துரித உணவுப் பாவனை ஆஸ்துமா, எக்சிமா நோயாபத்தை அதிகரிக்கும்

அண்மைக்காலமாக யாழ் நகரிலும் உலகின் ஏனைய பகுதிகளிலும் துரித உணவுப் பாவனை வேகமாக அதிகரித்து வருகின்றது. இதன் காரணமாக அதீத உடற்பருமன், நீரிழிவு, கொலஸ்ரோல் மட்டம் அதிகரித்தல் போன்றன ஏற்படும் ஆபத்து அதிகரித்துக் காணப்படுகின்றது. இதனை அண்மைக் கால ஆய்வுகளும் உறுதி செய்துள்ளன.
வாரத்திற்கு மூன்று முறை துரித உணவுவகைகளை உண்ணும் பழக்கம் கொண்ட பிள்ளைகளுக்கு ஆஸ்துமா என்ற நுரையீரல் கோளாறு, எக்ஸிமா எனப்படும் தோல் நோய் போன்றவை வருவதற்கான ஆபத்துக்கள் அதிகரிக்கின்றன என்று உலக அளவில் உணவுப்பழக்கங்கள் மற்றும் நோய்கள் இடையிலான சம்பந்தம் தொடர்பில் ஆராய்ந்தவர்கள் கூறுகின்றனர்.
துரித உணவுகளை கடையில் வாங்கிச் சாப்பிடும் வழக்கம் கொண்டவர்கள் இடையே ஆஸ்துமா, எக்ஸிமாவைத் தாண்டி கண் அரிப்பு, கண்ணில் இருந்து நீர் வழிதல் ஆகிய பிரச்சினைளும் அதிகரிக்கின்றன. நிறைய பழங்கள் சாப்பிடுவதால் இந்த நோய்களில் இருந்து பிள்ளைகள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியும் எனவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
துரித உணவுகளில் அதிகம் காணப்படுகின்ற கெட்ட கொழுப்பு பிள்ளைகளுடைய நோய் எதிர்ப் சக்தியைப் பாதிக்கின்றது. என்றும் பழங்களில் காணப்படும் அண்டி ஒக்ஸிடன்ஸ் (Anti Oxidonts) போன்ற நல்ல சத்துக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை விருத்தி செய்கின்றன என்றும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றார்கள்.
உலக அளவில் துரித உணவு மோகம் பெரிதாக அதிகரித்து வருகின்ற சூழ்நிலையில் அதில் இருக்கக்கூடிய ஆபத்துக்கள் பற்றி அறிந்து விழிப்புடன் இருப்பது அவசியமாகும்.