ஆன்மீக அருள் ஆரோக்கியம் தரும் – பகுதி 1

உலகெங்கும் பரந்து வியாபித்து வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதனை நெறிப்படுத்தி சுகமும் பலமும் பொருந்திய ஒரு முழு மனிதனாக வாழ்வதற்கு அனைத்து மதங்களும் வழிகாட்டி நிற்கின்றன. உலக சுகாதார அமைப்புக்கள் பலவும் மனிதனின் உண்மையான சுகம் என்றால் என்ன? மனிதனின் உண்மையான ஆரோக்கியம் என்றால் என்ன? என்று ஆராய்ந்துகொண்டிருக்கின்றன. ஆரோக்கியம் என்பது நோயற்ற நிலை மாத்திரமல்ல அதனுடன் உள, சமூக, ஆன்மீக, சுற்றாடல் நன்னிலையும் சேர்ந்த ஒரு உன்னத நிலையே உண்மையான சுகம் என்று பல உலக சுகாதார விற்பன்னர்கள் முடிவு செய்திருக்கிறாா்கள்.

மதங்களினதும் மருதுவத்தினதும் அடிப்படைத் தத்துவம் “அன்பு, பரிவு, ஒருவனுக்கு உண்மையான சுகத்தையும் நலத்தையும் கொடுப்பது” என்ற அடிப்படையில் ஒன்றுபடுவதை நாம் அறிவோம். மருத்துவம் ஒருவனுக்கு இந்தப் பிறப்பிலே அன்பும் ஆதரவும் சுகமும் நலமும் கொடுப்பதைப்பற்றி சிந்திக்கிறது. செயலுருவம் கொடுக்கத் துடிக்கிறது. ஆனால் மதங்கள் இம்மையிலும் மறுமையிலும் அவனின் உடலினதும் ஆன்மாவினதும் சுகம்பற்றியும் நலன்பற்றியும் சொல்லி அதற்கான வழியைக் காட்டி நிற்கின்றன. உண்மையான ஆன்மீகமும் அறிவியலும் இரு துருவங்கள் அல்ல. ஒருவனுள் இருந்து துடித்துக்கொண்டிருக்கும் நம்பிக்கைச் சுடரே ஒரு ஆரோக்கியமான விடியலைக் கொடுக்கின்றது.

மதங்கள் எப்பொழுது தோற்றம் பெற்றன? மருத்துவ முறைகள் எப்பொழுது தோன்றின? மனிதனின் அறிவியல் எப்படி தோற்றம் பெற்று வளர்ச்சி கண்டது? என்ற கேள்விகள் ஆராய்சிக்குரிய விடயங்களாக, புரிந்துகொள்ள கஷ்டமான புதிர்முடிச்சுக்களாக இருந்தாலும் அந்த முடிச்சுக்கள் தற்பொழுது மெல்ல அவிழ ஆரம்பித்திருக்கின்றன.

ஆன்மீகத்தை அறிவியல் கண்ணோடு  நோக்கும் போது பல பல சுவாரசியமான விடயங்கள் வெளிச்சத்துக்கு வருவதை அவதானிக்கின்றோம். அன்றுதொட்டு மதங்கள் மனிதனை எவ்வாறு வழிநடத்திவருகின்றன என்பதை ஆராயும்பொழுது பல அற்புதமான தத்துவங்களின் அடிப்படை எமக்கு புரியத்தொடங்கும். மதங்கள் பற்றிய இந்தப் புரிதல் ஒரு சமூகத்தின் சுகாதார நிலையை மேம்படுத்த உறுதுணையாக இருக்கும். இந்தத் திசையிலான எமது தேடல் பயனுடையதாக அமையும்.

மனிதன் எப்பொழுது தோன்றினான்? மதங்களும் அதன் தத்துவங்களும் எப்பொழுது தோற்றம் பெற்றன? மருத்துவ முறைகளும் வைத்தியமும் எப்பொழுது அறிமுகப்படுத்தப்பட்டன? அறிவியலும் விஞ்ஞானக் கருத்துக்களும் எவ்வாறு முக்கியத்துவம் பெற ஆரம்பித்தன? என்பது சம்மந்தமாக தெளிவுபெற வேண்டிய தேவை இருக்கிறது. மனிதகுலம் இந்தப் பூமியிலே அவதரித்து 5௦௦௦௦ ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. மதக்கருத்துக்களும் தத்துவங்களும் வெவ்வேறு காலப்பகுதிகளில் தோற்றம் பெற்றிருக்கின்றன. இந்து சமயத்தின் அடிப்படைத் தத்துவங்கள் கி.மு. 3500 வருடங்களுக்கு முன் சிந்துவெளிப் பிரதேசத்திலே தோற்றம்பெற்றிருந்ததாக புதைபொருள் ஆராய்ச்சிகள் சான்று பகர்கின்றன. ஆனால் தற்போது அறியப்படாமல் இருக்கும் வேறு சில மதங்களின் அடிப்படைக் கருத்துக்கள் அதற்கு முன்னதாகவே தோற்றம் பெற்றிருக்கக்கூடும். அக்காலப்பகுதியில் மருத்துவப்பொருட்கள், அறுவை மருத்துவம், நோய்த்தடுப்பு முறைகள் ஆகியவை அக்கால மக்களால் அறியப்பட்டிருந்தன என்பதற்கான வரலாற்று சான்றுகள் பல கிடைக்கபெற்றிருக்கின்றன.

இற்றைக்கு 5500 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது கி.மு 3500 வருடங்களுக்கு முன்பே நடைமுறையிலிருந்த மருத்துவ முறைகளும் மனித ஆரோக்கியத்தைப் பேணும் நடவடிக்கைகளும் முதன்முதலாக எப்பொழுது தோற்றம் பெற்றன என்பது சம்பந்தமான தெளிவான ஆதாரங்கள் இல்லை. ஆனால் மதத்தின் தத்துவங்களும் ஆன்மீகக் கருத்துக்களும் மருத்துவம் வளர்ச்சி பெறுவதற்கு முன்பே தோற்றம் பெற்றிருப்பதற்கான சாத்தியக்கூறுகளே இருக்கின்றன.

-தொடரும் –

சி.சிவன்சுதன்

வைத்திய நிபுணர்

யாழ் போதனா வைத்தியசாலை