போதுமம்மா கோதுமை மா!

மண் வீட்டில் வாழ்ந்தாதலும்
மகிழ்வோடு வாழ்ந்திருந்தோம் – இப்போ
முன்வீட்டில் சலரோகம்
முடக்கில் கொலஸ்ரோலாம்!
பின்வீட்டில் பிறஷர், பக்கத்தில் பக்கவாதம்
என்வீட்டில் என்ன வரும் நானறியேன்

கண்டதையும் தின்றுவிட்டுக் கதையளந்து திரிந்ததனால்
உண்டதை உளைத்து உரமாக்க  மறந்ததனால்
குண்டரெண்டுஆகிக் கூனாகிக் குறையாகிக்
கிண்டலுக்கு ஆளாகும் கீழ் நிலமை வந்ததெப்போ?

நாற்பதுகள் தாண்டியபின்  நாட்டுக்குள் வந்த ஒன்று
(ch) சீப்பாக வந்து எம்மை சீரழித்த கோதுமை மா!
மூப்புவென்ற நம் வாழ்வின்
முதுகெலும்பை முடக்கியது
ஆப்பாக வந்து எங்கள் அடி வயிற்றைக்கலக்கியது?

வந்த புதிதினிலே சவப்பெட்டி ஒட்டும் மா! – அது
சந்து பொந்தெல்லாம் மலிவாகக் கிடைத்ததனால்
நொந்து போய் இருந்தவருக்கு அன்றாட உணவாச்சு
பிந்தி வந்த நாள்களெல்லாம் பிரளயமாய் போயாச்சு

கரைத்த அதை ஊற்றி எடுத்தால் திடீர் தோசை
விறைப்பாக தட்டியதை சுட்டெடுத்தால் றொட்டி
தரையில் அதைப் போட்டுழக்கிப்
போறனையில் போட்டால் பாண்!
வெதுப்பினால் அதன் பேர் கேக்!

உருட்டி அதற்குள் கறி வைத்தால் றோள்ஸ்
உருண்டையாகச் செய்து உள்ளே
கறி வைத்தால் போண்டா!
விரும்பி அதற்குள் இனிப்பு வைத்தால் சூசியம்
அருந்தும் உணவிலெல்லாம் அநியாயம் செய்கிறோம்!

கொத்தினால் பிட்டு! குழலிட்டால் குழல்பிட்டு
மொத்தென்று குழைத்துப் பிழிந்தால் இடியப்பம்
அதனையும் ஒற்றை மாவிலேயே ஆக்கி வைத்து
மொத்தமாய் விழுங்குகிறோம்!
விழுங்கி விட்டுத் தூங்குகிறோம்!

இதனால் ……………
தொந்தி பெருக்கும், தினம் தொப்பை பல உருவெடுக்கும்
முந்தி வரும் சலரோகம், சாப்பிட்டால் மூச்சு முட்டும்!
சந்தியிலே போகையிலே சனம் பார்த்துக் கதைகதைக்கும்
பந்தியிலே குந்தி விட்டால் காற்சட்டை கிழிந்து விடும்!

உலகத்தில்பல பேரும் உணராத மருத்துவத்தை
சுலபத்தில் சொன்னவர்கள் நம்முன்னோர்,
சொன்னவற்றில்சிலவற்றைப் பேணும்
நாம் சிந்தித்து வாழ்ந்திருந்தால், பலவற்றைத்
தவிர்த்திருப்போம்! பலமோடு வாழ்ந்திருப்போம்!

 

மருத்துவர் கதிரேசபிள்ளை தர்ஷ்னன்,
மாவட்ட பொது வைத்தியசாலை,
சிலாபம்.

நன்றி – http://www.jaffnadiabeticcentre.org/