நீரிழிவு ஓரிழிவு இல்லை!

ஆடி அடங்கிய ஆவியின் அறிவுரை
ஆரிவன் பேர்சொல்லாத பேயனெண்டு நினைக்கிறியள்
காரியம் முடிஞ்செனக்குக் கனகாலம் ஆச்சுதப்பா
சூரியனும் சுட்டெரிக்கும் சுடுகாடு வீடெனக்கு
வீரியமோ குறையவில்லை விளம்புகிறேன் என் கதையை ……

ஆடென்ன மாடென்ன அவசரத்திற்கடுததவீட்டுப்
பேடென்ன பெரியகடை இறாலென்ன அவிச்ச கரு
வாடென்ன வதக்கியதைக் கள்ளோடு சேர்த்தடிக்க
கேடென்று தோணவில்லை கெட்ழிஞ்சு போனனப்பா!

எண்ணையிலே மிதக்காத எதையும் நான் தொட்டதில்லை
வெண்ணெய் இறைச்சியுடன் போத்தலையும் விட்டதில்லை
திண்ணையிலே இருந்து ஊர்வம்பளந்த தொழில் தவிர
கண்ணைத் திறந்து ஒரு காரியமும் பார்த்ததில்லை

ஒருநாளில் தேத்தண்ணி ஒன்பது குடிக்காமல்
இருவேளை இறைச்சிவகை எண்ணெயில் பொரிக்காமல்
திருநாள் நிகழ்சியெண்டால் திறம்கிடாயொண் டடிக்காமல்
ஒருநாளும் இருந்ததில்லை ஒத்துகொள்ள வேணுமிங்கே….

அருமையாய் சேர்த்து அளவாக உண்ணாமல்
எருமைபோல் தின்று அதை இரைமீட்டகாரணத்தால்
உருவம்பெருத்து எந்தன் உடம்பெல்லாம் உப்பிவிடச்
சருவம்போல் ஆனேன் சலரோகம் வந்ததப்பா….

“நிப்பாட்டும் சீனி நிறைகுறையும், கொழுப்புவகை
எப்பவுமே வேண்டாம் எதிலும் அளவுடனே
தப்பாமல் மருந்து, தழை, குழைதான் சாப்பாடு”
அப்பாவிடாக்குத்தர் அன்பாகச் சொல்லிவைத்தார்

கள்ளமாய்த் தானும் கள்ளடிக்க முடியவில்லை
பிள்ளைகளும் என்னைப் பேசத் தொடங்கிவிட்டார்
எள்ளளவும் இரக்கமின்றி என்மனையாள் எனக்கென்று

கிள்ளவே தோணாத கீரையெல்லாம் சமைத்துவைப்பாள்
எண்டாலும் எனக்குத் தடிப்போ மிகஅதிகம்
கொண்டாலும் கொல்லட்டும் சலரோகம் அதற்கு அஞ்சிக்
கண்டதெல்லாம் உண்ணாமல் காலம் கழிப்பதுவோ…

எண்டுநான் என்விதியை எழுதத் தொடங்கி விட்டேன்
மருந்தை வெறுத்தேன் மதுவகைகள் தானெடுத்தேன்..
அருந்த அனுதினமும் அறுதேநீர் அதுதவிர
விருந்தை விழுங்கிவிட்டு வேலையின்றித் தூங்கலுற்றேன்….
இருந்த நிலைமையின்னும் இழிவாகிப்போச்சுதப்பா…..

காலிலே வந்தபுண்ணோ தொடர்ந்துநின்று தொல்லைதர
காலறுத்து காலறுத்துக்காலிழந்து போனபின்னால்
ஒலமிட்டு அழுதுநின்ற உறவினரைத் தான்பிரிந்து…
காலன் கயிற்றைநான் காதலுடன் தொட்டு விட்டேன்

பார்த்தேன் என் சுற்றம் பதைபதைக்கும் கோலமதை….
வேர்த்தேன் விறுவிறுத்தேன் வெறுமையன்றோ எஞ்சியது…..
காற்றோடு கலந்தபின்தான் கண்திறந்தேன் தினமழுது
தீர்த்தாலும் தீராது நான்புரிந்த பாதகங்கள்!

ஆதலினால்……

எங்களுடல் என்றுமொரு கோயிலேன்று தான்கருதி
பங்கமின்றிப் பார்த்துவரல் வேண்டும் – என்றும்
தங்கு நலம் வேண்டியதற் கேற்றவகை தானறிந்து
பொங்குமின்பம் காணுதல் வேண்டும்ஃ

உணவுவனை, உடலுழைப்பு உள்ளத்து அமைதி, இவை
கணமும் கருத்திருத்தல் வேண்டும் – தினம்
பணம் சேர்த்தல் மட்டுமிங்கு பார்த்திருந்தால் சீக்கிரத்தில்
பிணமாகிப் போகும் நிலை தோண்றும்

பாவியாக வாழ்ந்து எந்தன் நலன் கெடுத்த காரணத்தால்
ஆவியாகிப் போனகதைகேட்டீர் – இதைக்
காவியமாய் எண்ணி மனம் கொண்டுதினம் வாழ்ந்திருந்தால்
சாவுதொலை தூரமென்று காண்பீர் ….!

Dr.கதிரேசபிள்ளை தர்ஸணன்
மாவட்ட பொது வைத்தியசாலை
சிலாபம்