யாழ். பல்கலைக்கழக தடகள விளையாட்டுப்போட்டிகள்

யாழ். பல்கலைக்கழக 2014ஆம் ஆண்டுக்கான பீடங்களுக்கிடையிலான வருடாந்த தடகள விளையாட்டுப்போட்டிகள் 10.05.2014(சனிக்கிழமை) அன்று மதியம் 1.00மணி தொடக்கம் மாலை 5.30மணி வரையும், 11.05.2014(ஞாயிற்றுக்கிழமை) அன்று காலை 8.30மணி தொடக்கம் மாலை 5.30மணி வரையும், யாழ். பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலாநிதி. ஏ. புஸ்நாதன், பீடாதிபதி, வியாபாரக்கற்கைகள் பீடம், வவுனியா வளாகம், யாழ். பல்கலைக்கழகம் அவர்களும் அவரது பாரியார் திருமதி. விஜிதா புஷ்பநாதன், ஆசிரியர், வவுனியா, றம்பைக்குளம் மகளிர் மகாவித்தியாலயம் அவர்களும், சிறப்பு விருந்தினராக திரு. எஸ். மைக்கேல் ஜெயராஜ், அபிவிருத்தி உத்தியோகத்தர், பிரதேச செயலகம், மடு அவர்களும் கலந்து சிறப்பித்தனர். இப்போட்டிக்கு திரு. கே. கணேசநாதன், பணிப்பாளர், உடற்கல்வி அலகு, யாழ். பல்கலைக்கழகம் அவர்கள் தலைமை தாங்கியிருந்தார். இப்போட்டியில் அதிக வீரர்கள் பங்குபற்றித் தமது திறமைகளை வெளிக்கொணர்ந்திருந்தனர்.

இப்போட்டியில் முகாமைத்துவ கற்கைகள் வணிக பீட வீரர்களான ஜே. ஈ. றொஸ்கின் ஜோண்ஸ், பி. சிறின் டெஸ்லின் முறையே சிறந்த தட, கள வீரர்களாகத் தெரிவுசெய்யப்பட்டனர். கலைப்பீட வீராங்கனை எஸ். பார்த்தீபா, விவசாய பீட வீராங்கனை ரி. சயந்திகா முறையே சிறந்த தட, கள வீராங்கனைகளாகத் தெரிவுசெய்யப்பட்டனர். இப்போட்டியின் சிறந்த வீரராக முகாமைத்துவ கற்கைகள் வணிக பீட வீரர் பி. சிறின் டெஸ்லின் தெரிவுசெய்யப்பட்டார். இப்போட்டியில் மூன்று புதிய சாதனைகள் நிலைநாட்டப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. முகாமைத்துவ கற்கைகள் வணிக பீட வீராங்கனை எஸ். தாரணி தட்டெறிதல், ஈட்டி எறிதல் ஆகிய இரு நிகழ்வுகளிலும், கலைப்பீட வீராங்கனை ஜி. துஸ்யந்தி உயரம் பாய்தலிலும் புதிய சாதனைகளை நிலைநாட்டியிருந்தனர்.

இப்போட்டியில் ஆண்கள் பிரிவில் முகாமைத்துவ கற்கைகள் வணிக பீடம் முதலாம் இடத்தையும், கலைப்பீடம் இரண்டாம் இடத்தையும், விஞ்ஞானபீடம் மூன்றாம் இடத்தையும், பெண்கள் பிரிவில் முகாமைத்துவ கற்கைகள் வணிக பீடம் முதலாம் இடத்தையும், கலைப்பீடம் இரண்டாம் இடத்தையும், விஞ்ஞானபீடம் மூன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டன.

மொத்தப்புள்ளிகளின் அடிப்படையில் முகாமைத்துவ கற்கைகள் வணிக பீடம் முதலாம் இடத்தையும், கலைப்பீடம் இரண்டாம் இடத்தையும், விஞ்ஞானபீடம் மூன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டன.