மேனி “மெய்” தானா?

பொய்யாமொழிப் புலவரினால் “மெய்” என்று சொல்லப்பட்ட மேனி, உண்மையிலேயே “பொய்“ ஆகி, சாம்பல் புழுதியாகி, புதைகுழிக்கும் போய்க்கொண்டிருக்கும் இந்த வேளையிலே மேனியை மெய் என்று சொல்வதிலும் பார்க்க “பொய்” என்று சொல்லுவது கூடப் பொருத்தமாய் இருக்குமோ? என்று எண்ணத்தோன்றுகின்றது.

இரவுகள் கூட பகல்போல் ஆகி பந்தல்போட்டுத் திருவிழா காணும் கோயில்கள் இருந்த ஊரெங்கும் சாமத்திலும் களைகட்டும் சாராயக் கடைகள் முளைவிட்டமை எப்படி? படித்துப்பெயா் எடுத்த பரம்பரையில் உதித்தவா்கள் குடித்துக் குடிமுழுகிப் போகத் துணிந்தது எப்படி? இந்தக் கடைகளால் பொய்த்துப் போய்க்கொண்டிருக்கும் மேனிகள் எத்தனை? வாகனங்கள் புகையூதக்கூடாது என்று எத்தனை எத்தனை தடைகள் எல்லாம் போட்டோம். ஆனால் வாய்கள் புகையூத வாங்கிப் புகைப்பதற்கு எத்தனை கடைகள் போட்டு வைத்திருக்கிறோம்? உயிர் குடிக்கும் சிகரெட்டை வாங்கவும் விற்கவும் தடைபோட எமக்கு நாதி இல்லாமல் போனது ஏன்? புகையில் கருகும் மேனியைக் காப்பாற்றிக்கொள்ள எமக்கு துப்பில்லாமல் போனது ஏன்? உடம்பு என்ற மெய்யையும் ஆன்மா என்ற உயிரையும் ஆரோக்கியமாக  ஒட்டவைக்க என்ன செய்யவேண்டும் என்று எல்லோரிடமிருந்தும் ஆலோசனைகள் வந்தவண்ணமே இருக்கின்றன. இதில் யார் சொல்வதைக் கேட்பது? எது உண்மை? பக்கத்துவீட்டு அம்மா சொல்வது மெய்யா? டாக்குத்தா் ஐயா சொன்னது பொய்யா? முன்வீட்டு அம்மம்மா செய் என்று சொன்னதை செய்யாமல் விடலாமா? விளம்பரங்களை மெய்யென்று நம்பவா? எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும், அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு என்ற அருள்வாக்கியம் புரியாமல் போனதால், பல மெய்கள் பொய்த்துக்கொண்டிருக்கின்றன.

தினமும் பிணியுற்று, அடிபட்டு, வெடிபட்டு, சுடுபட்டு காணாமலும் போய்க்கொண்டிருக்கும் உடம்புகளை “மெய்” என்று சொல்ல எப்படி மனம்வரும்? மெய்களெல்லாம் தோல்விகண்டு துவண்டு போவது ஏன்? தோல்வி மனப்பான்மையில் நஞ்சருந்தி மடிந்துபோகும் மனிதா்கள்தான் எத்தனை?

யேசுநாதரின் மெய் சிலுவையில் அறையப்பட்டபொழுதுகூட உண்மை மடிந்துவிட்டதாக யாரும் கருதவில்லை. தோல்விபோன்ற அந்தத் தோற்றப்பாடுதான் பின்னா் பெருவெற்றிக்கு வழிசமைத்தது. நம்பிக்கையுடன் எம்மெய்களைக் காப்பாற்ற என்ன செய்யப்போகிறோம்? உடல், உள, சமூக, ஆன்மீக நன்னிலை என்ற மெய்யின் மெய்ப்பொருளை எங்கே தேடப்போகிறோம்? இது சம்பந்தமாக சிந்திக்கவும் செயற்படவும் நிறைய இடம் இருக்கின்றது.

சி. சிவன்சுதன்
வைத்திய நிபுணர்
யாழ்.போதனா வைத்தியசாலை