கடலில் புதையும் கரையோரங்கள்

இறுதியாகக் கிடைத்த பல்வேறு தகவல்களின் படி சுற்றாடல் வேகமாக வெப்பமடைந்து வருவதனால், கடல்நீர் ஆண்டுதோறும் 3 – 10mm  வரை உயர்ந்து வருவதாகவும்,  நிலத்தடி நீர் அதிகமாக உறுஞ்சி எடுத்துப் பாவிக்கப்படுவதால் நீர்மட்டம் ஆண்டுதோறும் 6 – 100mm  என்ற வேகத்தில் அமிழ்ந்து வருவதாகவும் கண்டறிப்பட்டிருக்கின்றது. இதனால் இலங்கையின் உயரம் குறைவான கரையோரப்பகுதிகள் பெரிதும் பாதிக்கப்படலாம் என்ற அச்சம் தோன்றியிருக்கின்றது. இந்த ஆபத்தைத் தடுப்பதற்கு அல்லது குறைப்பதற்கு சுற்றாடல் வெப்பமடைவதைத் தடுக்கும் நடவடிக்கைகளும், நிலத்தடி நீர் மேலதிகமாக உறுஞ்சி எடுப்பதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளும் அவசியமாகும்.

நிலத்தடி நீர் வகைதொகையின்றி உறிஞ்சப்படுவதால் கடலோர நகரங்களின் பூமிமட்டம் வேகமாக உள்ளிறங்குவதாக நிலவியல் விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள். சென்னை, கொழும்பு போன்ற கடலோர நகரங்கள் இதனால் கூடுதலாக பாதிக்கப்படுவதாக அவர்கள் கூறுகிறார்கள்.

ஏற்கெனவே, சுற்றுச்சூழலில் ஏற்பட்டுவரும் கடுமையான பாதிப்புக்கள் காரணமாக புவியானது வேகமாக வெப்பமடைந்து வருகிறது. இதன் விளைவாக கடலின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் சென்னை, கொழும்பு போன்ற கடலோர நகரங்களின் கடற்கரையோர பகுதிகள் படிப்படியாக கடலில் மூழ்கும் ஆபத்து அதிகரிக்கும் என்று விஞ்ஞானிகள் ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்திருக்கிறாரகள்.

இத்தகைய எச்சரிக்கைகளுக்கு மத்தியில், இது போன்ற பெரு நகரங்களில் நிலத்தடி நீரை வேக வேகமாக உறிஞ்சி எடுப்பதால் இந்த நகரங்களின் நிலமே கூட படிப்படியாக உள்ளிறங்கி வருவதாக விஞ்ஞானிகள் தற்போது கண்டறிந்து எச்சரித்திருக்கிறார்கள்.

கடல் மட்டம் உயர்வதைவிட நிலம் வேகமாக உள்ளிறங்குகிறது

அதாவது, உலகின் சில பகுதிகளில் கடல்நீர் மட்டம் அதிகரிப்பதைவிட, நிலம் உள்ளிறங்குவது என்பது மோசமான பிரச்சினையாக மாறிவருவதாக, ஐரோப்பிய ஒன்றியத்தின் நிலவியல் விஞ்ஞான ஒன்றிய அவையின் கூட்டத்தில் பேசிய விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கிறார்கள். சில கடலோர நகரங்களில் கடலின் நீர்மட்டம் அதிகரிக்கும் வேகத்தைவிட, நிலப்பகுதியானது பத்து மடங்கு அதிக வேகமாக உள்ளிறங்கிக்கொண்டிருப்பதாக இந்த விஞ்ஞானிகள் எச்சரித்திருக்கிறார்கள்.

இந்த நிலம் உள்ளிறங்குவதற்கு பெருமளவு மனிதனே நேரடிக் காரணம் என்றும் இந்த நிலவியலாளர்கள் எச்சரித்திருக்கிறார்கள். உதாரணமாக டோக்கியோ நகரில் வரைமுறையில்லாமல் நடந்த நிலத்தடி நீரை உறிஞ்சி எடுத்த செயலால், டோக்கியோ நகரின் நிலமட்டம் சில இடங்களில் சுமார் இரண்டு மீட்டர் ஆழத்துக்கு உள்ளிறங்கியது. ஒருவழியாக டோக்கியோ நகரில் நிலத்தடி நீரை உறிஞ்சி எடுப்பதற்கு கடும் தடை விதிக்கப்பட்ட பிறகே இந்த நிலம் உள்ளிறங்கும் செயல் நின்றது.

டோக்கியோ மாதிரியை மற்ற நகரங்கள் பின்பற்ற பரிந்துரை செய்துள்ளனா்.

டோக்கியோ நகரைப்போலவே ஜாகர்தா, ஹோ சி மின் நகரம், பாங்காங் உள்ளிட்ட பல நகரங்களிலும் நிலம் உள்ளிறங்கிக் கொண்டிருப்பதாக இந்த கூட்டத்தில் பேசிய விஞ்ஞானிகள் எச்சரித்திருக்கிறார்கள்.

இந்த நகரங்களின் நிலம் உள்ளிறங்கும் போக்கு குறித்து ஆராய்ந்த நெதெர்லாந்து நாட்டின் நிலவியல் விஞ்ஞானி கில்ஸ் எர்கென்ஸ் தலைமையிலான குழுவினர், டோக்கியோ நகரில் நிலத்தடி நீர் அதிகபட்சமாக உறிஞ்சப்பட்டதால் ஏற்பட்டதைப் போன்ற மோசமான பாதிப்பை மேற்சொன்ன நகரங்களும் சந்திக்கும் என எச்சரித்திருக்கின்றனர்.

இதைத் தடுக்கவேண்டுமானால், நிலத்தடி நீரை வகை தொகையில்லாமல் உறிஞ்சி எடுப்பதை இந்த நகரங்கள் உடனடியாக நிறுத்தவேண்டும் என்றும், அதற்கு மாற்றாக வேறு நீராதாரங்களை கண்டறிந்து இந்த நகரங்கள் எல்லாம் பயன்படுத்த ஆரம்பிக்கவேண்டும் என்றும் அவர்கள் பரிந்துரை செய்திருக்கிறார்கள். இந்த விஷயத்தில் டோக்கியோ நகரின் முன் மாதிரியை மற்ற பாதிக்கப்பட்ட நகரங்கள் கடைபிடிக்கவேண்டும் என்றும் அவர்கள் யோசனை செய்திருக்கிறார்கள்.

அவர்களின் பரிந்துரையை சென்னை, கொழும்பு போன்ற தெற்காசிய கடலோர நகர அரசுகளும் இப்போது முதலே கவனத்தில் எடுத்து செயற்படுவதே அந்த நகரங்களின் எதிர்கால நிலம் உள்வாங்கும் ஆபத்தை தடுப்பதற்கான வழிமுறையாக இருக்கக்கூடும் என்கிறார்கள் நிலவியல் விஞ்ஞானிகள்.