ஹொக்கி நடுவர்களுக்கான கருத்தரங்கும் பயிற்சிப்பட்டறையும்

யாழ் மாவட்ட ஹொக்கி சங்கத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டு இலங்கைக் ஹொக்கிச் சம்மேளனத்தினால் நடாத்தப்பட்ட ஹொக்கி நடுவர்களுக்கான கருத்தரங்கும் பயிற்சிப்பட்டறையும் இம்மாதம் 7ஆம் மற்றும் 8ஆம் திகதிகளில் யாழ் பரியோவான் கல்லூரியில் நடைபெற்றது. இதற்கு வளவாளர்களாக இலங்கைக் ஹொக்கி சம்மேளன நடுவர் குழுத்தலைவரும் சர்வதேச நடுவருமான எச்.எம்.சி. பண்டார மற்றும் சர்வதேச நடுவர் எம்.ஜே.எம். நவுசாட், இலங்கைக் ஹொக்கிச் சம்மேளன உப தலைவர்களான ஆர். மகேஸ்வரன் மற்றும் கே. ஜெயரட்ணம், யாழ் மாவட்ட ஹொக்கி சங்கத்தின் நடுவர் குழுத்தலைவரான ஜு.டீ. மதியழகன் ஆகியோர் பங்குபற்றியிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து எழுத்து மூலமான பரீட்சையும் இடம்பெற்றது. இதிலே 67 ஆண்கள் மற்றும் 10 பெண்கள் உள்ளடங்கலாக 77 பேர் பங்குபற்றியிருந்தனர். இலங்கையில் எந்த ஒரு இடத்திலும் இடம்பெற்ற கருத்தரங்கிலும் இவ்வளவு தொகையினர் பங்கு பற்றியிருக்கவில்லை என்பதை இலங்கைக் ஹொக்கி சம்மேளனத்திலிருந்து வருகை தந்தவர்கள் பாராட்டியிருந்தனர். கருத்தரங்குகள், விளக்கங்கள் மற்றும் எழுத்து மூலப் பரீட்சை என்பன தமிழ் மொழி மூலம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறான ஒரு நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இடம் பெற்றமை இதுவே முதற் தடவையாகும்.

1970ஆம் ஆண்டுகளில் யாழ் மாவட்ட ஹொக்கியின் தரம் உயர்ந்திருந்ததுடன் தேசிய ரீதியிலும் பலர் பிரகாசித்து தேசிய அணியிலும் பலர் இடம்பெற்றிருந்தனர். அத்துடன் தேசிய ரீதியான சுற்றுப்போட்டிகளும் இங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பின்னர் 1980களில் நாட்டு சூழ்நிலை காரணமாக இவ்விளையாட்டின் ஆர்வம் குறைந்திருந்தது. ஆனாலும் 2000ஆம் ஆண்டிற்குப்பின்னர் பாடசாலை, கழக மட்டங்களில் இதன் ஆர்வம் அதிகரித்தது. ஆனாலும் போட்டிகளுக்கு பரீட்சை மூலம் தகுதியான நடுவர்களை நியமிக்கமுடியாத நிலை காணப்பட்டதுடன் விளையாட்டின் மூலம் பெற்ற அனுபவத்தைக்கொண்டு நடுவர்களாக கடமையாற்றி வந்தார்கள்.

இதனைப் போக்கும் முகமாக யாழ் மாவட்ட ஹொக்கி சங்கம் யாழ் மாவட்ட ஹொக்கி நடுவர்களை உருவாக்கும் நோக்கமாக எமது வளவாளர்களைக் கொண்டு கருத்தரங்குகள் மற்றும் பரீட்சையையும் நடாத்தி 2009 ஆம் ஆண்டிலே நடுவர்களை உருவாக்கியிருந்தது. அதன் பின்னர், யாழ் மாவட்ட மட்ட மற்றும் வட மாகாண மட்ட போட்டிகளுக்கு இப்பரீட்சையிலே சித்தியடைந்தவர்களையே நடுவர்களாக நியமித்து பாடசாலை, கழக மட்ட போட்டிகளை நடாத்தி வந்தது. போட்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்க நடுவர்களின் தேவையும் அதிகரித்தது. இதனால் மீண்டும் 2012ஆம் கருத்தரங்குகள் மற்றும் பரீட்சையையும் நடாத்தியது. இப்பரீட்சையிலே சித்தியடைந்தவர்களும் நடுவர் குழாமுடன் இணைக்கப்பட்டனர். இது தவிர தேவைக் கேற்ப நடுவர்களுக்கான கருத்தரங்குகளும் எமது சங்கதத்தினால் நடாத்தப்பட்டு வந்தது.

இப்போது தேசிய மட்ட பரீட்சை இங்கு நடாத்தப்பட்டதால் இப்பரீட்சையிலே சித்தி பெற்றவர்கள் இனிவரும் காலங்களில் மாவட்ட மட்ட, மாகாண மட்ட மற்றும் தேசிய ரீதியிலான போட்டிகளுக்கு நடுவர்களாக கடமையாற்றக்கூடிய நிலை ஏற்படுத்திக்கொடுக்கப்படும். ஆனாலும் 2013, 2014 ஆம் ஆண்டுகளில் தேசிய மட்ட போட்டிகளில் யாழ் மாவட்ட நடுவர்கள் கடமையாற்றியிருந்ததும் குறிப்பிடத்தக்கது. அத்துடன் தேசிய ரீதியில் நடைபெற்ற நடுவர்களுக்கான கருத்தரங்குகள் மற்றும் பயிற்றுனர்களுக்கான பயிற்சிக் கற்கை நெறிகளிலும் சிலர் கலந்து கொண்டு அனுபவங்களைப் பெற்றுள்ளனர்.