சுத்தமாய் இருந்த நமது சுற்றாடல் சத்தத்தால் அசுத்தமாகலாமா?

அன்று இயற்கையோடு ஒன்றி இனிமையாய் இருந்த எமது சுற்றாடல் பல்வேறுபட்ட தேவையற்ற சத்தங்களினால் குழப்பம் அடைந்து, மாசுபட்டு, மனிதர்களை நோயாளிகளாக மாற்றிக்கொண்டிருக்கும் அவலம் நடந்துகொண்டிருக்கிறது.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் கணிப்பீட்டின் மூலம் மனிதர்களுக்கு ஏற்படும் நோய்களில் 25சதவீதமான நோய்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சுற்றாடல் மாசடைவதனால் ஏற்படுகின்றது என்பது அறியப்பட்டிருக்கின்றது. சுற்றாடல் மாசடைவதற்குத் தேவையற்ற சத்தங்கள் ஒரு முக்கிய காரணியாக அமைகின்றது.

சத்தத்தினால் எமது சுற்றாடல் மாசடையும் பொழுது அது மனிதனை எவ்வாறு தாக்குகின்றது என்பதையும் அதனை எவ்வாறு தடுக்கலாம் அல்லது குறைத்துக்கொள்ளலாம் என்பதையும் நாம் தெரிந்து வைத்திருத்தல் அவசியமாகும். ஏனெனில் இத்தாக்கங்கள் ஏற்படுவதற்கு நாமே காரணமாக இருந்துகொண்டிருக்கின்றோம்.

எமது பிரதேசங்களில் சூழல் மாசடைவதற்குக் காரணமாக இருக்கும் பிரதான சத்தங்களாக வாகன இரைச்சல், வாகனங்களில் இருந்து ஏற்படுத்தப்படும் கோன் ஒலி, வீடுகளில் தொலைக்காட்சிப்பெட்டிகளில் இருந்து வெளிவரும் சத்தங்கள், வீட்டு உபகரணங்கள், ஜெனரேட்டர்கள் போன்றவற்றினால் ஏற்படும் சத்தங்கள், ஒலிபெருக்கிகளினால் ஏற்படுத்தப்படும் சத்தம், இயந்திரங்களின் சத்தம் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

இவ்வாறான சத்தங்களினால் எமது சுற்றாடலில் அமைதித்தன்மை குலையும் பொழுது இது மனிதர்களில் பல்வேறுபட்ட தாக்கங்களை ஏற்படுத்துகின்றது. இத்தாக்கங்களினால் ஏற்படும் விளைவுகளில் முக்கியமானவையாக மன அழுத்தம், மனச்சோர்வு, ஞாபக மறதி, நித்திரைக்குழப்பம், உயர் குருதி அமுக்கம், இருதய நோய்கள், மாரடைப்பு, கேட்கும்திறன் குறைவடைதல், கல்வி கற்றல் திறன் குறைவடைதல், இலகுவில் நோய்வாய்ப்படுதல் என்பவற்றைக் குறிப்பிடலாம்.

இத்தாக்கங்களில் இருந்து எம்மை நாம் எவ்வாறு தற்காத்துக்கொள்ளமுடியும்?

தெருக்களிலே எமது வாகனங்களில் இருந்து எழுப்பப்படும் கோன் ஒலிகளில் 95சதவீதமானவை அனாவசியமாக எழுப்பப்படுகின்றன. நல்லமுறையில் வாகனத்தைக் கட்டுப்படுத்தும் திறனும், மன அமைதியும், சுயநலமற்ற மனப்பாங்கும் இருந்தால் நாம் தேவையற்ற கோன்களை தவிர்த்துக்கொள்ளலாம். எமது கோபத்தையும், மனப்பதட்டத்தையும், அவசரத்தன்மையையும் வெளிக்காட்ட சில சமயம் கோன் அடித்தபடியே செல்கின்றோம். ஒவ்வொரு தடவையும் கோனில் கை வைக்க முன்பு எமது மனதில் கை வைத்துப் பார்ப்போம். நிச்சயமாக எம்மால் அனாவசிய கோன்களைத் தவிர்த்துக்கொள்ளமுடியும்.

எமது வாகனங்களின் சைலென்சர்களை நல்ல முறையில் பேணுவோம். இதன் மூலம் வாகன இரைச்சல்களைக் குறைக்க முடியும். ஒவ்வொரு மனிதனும் தெருக்களிலே பலமணிநேரங்களைச் செலவிடுகின்றான். பல மக்கள் தெருவோரம் குடியிருக்கிறார்கள். எனவே தெருக்களில் ஏற்படும் சத்தங்களைக் குறைப்பதன் மூலம் மக்களிற்கு ஏற்படும் தாக்கங்களைக் குறைத்துக்கொள்ள முடியும்.

வீடுகளில் தொலைக்காட்சி, வானொலி போன்றவற்றின் சத்தங்களை இயலுமானவரை குறைத்து வைத்துக்கொள்வோம். தேவையற்ற நேரங்களில் அவற்றை நிறுத்திவிடலாம். வீட்டு உபகரணங்கள் உதாரணமாக கிரைண்டர், மோட்டர், மின்பிறப்பாக்கி போன்றவற்றைத் தெரிவுசெய்யும்பொழுது அவற்றின் விலை, தராதரம் என்பவற்றைக் கருத்தில் கொள்வது போன்று அவை போடும் சத்தத்தினையும் கருத்தில் எடுத்து குறைந்த சத்தத்துடன் இயங்கும் உபகரணங்களைத் தெரிவுசெய்துகொள்வோம். மின் விசிறிகள் இயங்கும் பொழுது அவற்றிலிருந்து சத்தம் வெளிப்படின் அவற்றை நல்ல முறையில் திருத்திக்கொள்வோம்.

வணக்கஸ்தலங்களிலும், பொது இடங்களிலும் அனாவசியமாக ஒலிபெருக்கிகளை இயங்கவைப்பதன் மூலமும் அச்சுற்றாடல் மாசுபட்டு மக்களுக்கு தாக்கங்கள் ஏற்பட்டுவருகின்றன. மக்களை நோயாளிகளாக்கும் எந்த நடவடிக்கைகளையும் இறைவன் விரும்பமாட்டான் என்பதை மனதில் நிறுத்துவோம். எமது மனச்சாட்சிப்படி நடந்துகொள்வோம்.

சிறு பிரச்சினைகளுக்கும் சத்தம் போட்டுப் பேசுவதைத் தவிர்த்துக்கொள்வோம். மற்றவர்களைக் குறைகூறுவதை விடுத்து எம்மில் இருக்கும் தவறுகளை அறிந்து நிவர்த்திசெய்ய முயலுவோம்.

நாம் தொலைத்துவிட்ட அமைதியும் ஆரோக்கியமும் நிறைந்த உலகம் உருவாகுவோம் என நம்புவோம்.

சி. சிவன்சுதன்
வைத்திய நிபுணர்
யாழ்.போதனா வைத்தியசாலை