அந்திக்கரையினிலே……

என்னைச் சுற்றி தீப்பந்தங்களின் சுடர்கள் துடித்துக் கொண்டிருக்கின்றன. அவற்றின் நடுவே நான் நீட்டி நிமிர்ந்து படுத்திருக்கிறேன். நான் இத்தனை வருடங்கள் வாழ்ந்து முடித்ததில் தேடிக்கொண்ட உறவுகள் என்னைச் சுற்றி நிற்கின்றன.

75 வருடங்களுக்கு முன்பு நானும் எனது அப்புவும் சேர்ந்து முற்றத்தில் நட்ட மாமரம் நிழல் பரப்பி நிற்கிறது. நேற்று இரவு கூட நான் குழை முறித்துப்போட்ட ஆட்டுக்குட்டி பசியில் கத்தும் குரல் கேட்கிறது. எனது பேரக்குழந்தைகள் எனக்குப் பந்தம் பிடித்துக்கொண்டிருக்கிறார்கள். நான் எனக்கு வெளியே நின்று நடப்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்றேன்.

“கிழவனுக்கு நல்ல நிறைவான சாதான்” யாரோ பேசிக்கொள்வது கேட்கிறது. சாவிலும் நிறைவு இருக்குமோ? அவர் எதை நினைத்து இப்படிச் சொல்லியிருப்பார்? பாயில் கிடந்து அழுந்தாமல் நான் செத்துப்போனதைச் சொல்லியிருப்பாரோ? அல்லது நான் கடைசிவரை பிள்ளையின் அனுசரணையுடன் ‘நான்’ என்ற இறுமாப்புக் குன்றாமல் இருந்து செத்துப்போனதைச் சொல்லியிருப்பாரோ?

சில சமயம் நான் சாதிக்க வேண்டியவற்றை எல்லாம் சாதித்து என் கடமைகள் எல்லாவற்றையும் முடித்து சந்தோஷமாகச் செத்துப்போனதாக நினைத்துக்கூட அவர் அதைச் சொல்லியிருக்கலாம்.

கொள்ளி வைக்க ஆயத்தமாக நிற்கும் என் ஒரே மகன் இப்பொழுதும் விக்கி விக்கி அழுதுகொண்டிருக்கிறான். அவன் அப்படித்தான் முன்பு சிறியவனாக இருக்கும் பொழுதுகூட பள்ளிக்கூடம் போவதற்கு இதே மாதிரி அழுவான். போயும் போயும் இந்த தொண்ணூறு வயதுக் கிழவன் செத்துப்போனதற்கு அழுகிறானே!

அவனுக்கு ஆறுதல் சொல்ல நினைக்கிறேன். முடியவில்லை. எனது வாய் எனக்கே அந்நியமாகிப்போய் அதற்கு வாய்க்கரிசியும் போடப்பட்டிருக்கிறது.

நான் பூரணமாக வாழ்ந்து முடிந்தாகி விட்டது. பேரப்பிள்ளைகளின் சந்தோஷங்களையும், ஏன் பூட்டப்பிள்ளை ஒன்றையும் கூடப் பார்த்து விட்டேன். இனியும் ஏன் வருத்தம், துன்பம் என்று பாயில் கிடந்து அவதிப்பட வேண்டும்? எனக்கு இனி விடுதலை. இதற்குப் போய் இவன் அழுதுகொண்டிருக்கிறானே?

என்னுடைய இந்த ஒரே மகனைப் பார்த்து சில நாட்களுக்கு முன் நான் பேசிய வார்த்தைகள் ஞாபகம் வருகின்றன.

“டேய்! என்னுடைய சவத்திலையும் முழிக்காதை. எனக்கு நீ கொள்ளியும் வைக்கப்படாது.”

எதற்காக நான் இப்படிச் சொல்ல வேண்டி வந்தது? என்னை இவ்வாறு சொல்ல வேண்டிய கட்டத்திற்கு அவன் கொண்டு வந்தான். இப்பொழுது மட்டும் ஏன் விக்கி விக்கி அழுதுகொண்டிருக்கிறான்? ஊர் உலகத்திற்காகவா? இல்லை. அவனை எனக்குத் தெரியும். அவனின் ‘பொய்’ அழுகையையும் ‘மெய்’ அழுகையையும் வித்தியாசப்படுத்தவும் எனக்குத் தெரியும். இந்தக் கிழவன் இறந்து போனான் என்பதற்காகத்தான் அழுது கொண்டிருக்கிறான். பாசம் என்று சொல்லுவது வெளிப்பூச்சல்ல. அது அவனை அறியாமலேயே அவனின் ஊனிலே உறைந்து போயிருக்கும் ஓர் உள்ளுணர்வு.

இவன் சின்னவனாக இருந்த காலம் எனக்கு அப்படியே ஞாபகம் இருக்கிறது. சரியான குழப்படி. சொல்லே கேட்க மாட்டான். மண்ணில் படுத்து உருளுவான். மண்ணை அள்ளித் தலையில் போடுவான். எல்லாவற்றையும் எறிந்து உடைப்பான். புத்தகம் கொப்பிகளைக் கண்டால் கிழிப்பான் அல்லது கிறுக்கி வைப்பான்.

“ஏன்டா இப்படிச் செய்தனி?” என்று கேட்டால் பிஞ்சு மொழியில் அதற்கும் ஒரு விளக்கம் சொல்வான். ஆனால் எனக்கு ஏனோ கோபம் வருவதில்லை. அவன் புத்தி தெரியாத பிள்ளை. இவற்றை எல்லாம் சகித்துக்கொள்ள வேண்டியது எனது கடமை என்பது எனக்குத் தெரியும்.

அதேபோல நானும் தளர்ந்துபோய் புத்தி சற்றுத் தடுமாறிப்போய் இருக்கும் நேரத்திலே கதைப்பவற்றையும் செய்பவற்றையும் அவன் அமைதியாகத் தாங்கிக் கொண்டால் என்ன? இந்த 90 வயதுக் கிழவனைக் கண்டிக்க இவன் யார்? இதற்காகத்தான் அன்று இவனை ஏசவேண்டி வந்தது.

என்னுடைய மகனுக்கு ஓயாத வேலைதான். பாவம், அமைதியாக வீட்டில் உறங்கக்கூட அவனுக்கு நேரம் போதாது. ஆனால் நானும் ஒரு காலத்தில் இதே போல ஆயிரம் விஷயங்களைப் பேசி பல அலுவல்கள் பார்த்தவன்தான். அப்படிப்பட்ட என்னைப்பார்த்து “உங்கடை அலுவலை மட்டும் பார்த்துக்கொண்டு தேவையில்லாத விஷயங்களில் தலைபோடாமல் இருங்கோ” என்று சொன்னானே. அது எப்படி முடியும்? எத்தனையோ விஷயங்களையும் காரியங்களையும் செய்து பழகிப்போன இந்த மனிதன் வீட்டிற்குள்ளே முடங்கிப்போய் இருக்கிறானே.

என்னுடைய உலகம் இந்த வீடும் அதன் சுற்றுவட்டாரமுமாய் ஒடுங்கிப்போய் இருக்கும் போது அந்த அலுவல்களைப் பற்றி பேசாமல் எதைப்பற்றிப் பேசுவது? இவனுக்கு இப்போது விளங்காதுதான். ஆனால் விளங்கும் காலம் ஒன்று வரும். இவனுடைய மகன் இவனுக்கு விளங்கப்படுத்துவான்.

“கிழவனுக்கு வயது போனாலும் கடைசிக்காலம் மட்டும் கர்வம் கொஞ்சங்கூடக் குறையவே இல்லை.”

யாரோ பேசுவது கேட்கிறது. கவனித்துப்பார்க்கிறேன். முன் வீட்டுக்கந்தையர்தான். வாய்நிறைய வெற்றிலையுடன் யாருடனோ பேசிக்கொண்டிருக்கிறார். முந்தநாள் இதே கந்தையர் என்னைச் சந்தித்து “உங்களைப் போல நல்ல மனிதர் ஊருக்கை யார் இருக்கினம்?” என்று கேட்டது ஞாபகம் வருகிறது.

வயது போனால் கர்வமும் சேர்ந்தே போக வேண்டும் என்று யார் சொன்னது? கிழவன் என்றால் பிறர் சொல்லுக்குக் கட்டுப்பட்டு இருந்து சாக வேண்டியதுதான் என்று நினைக்கிறார்களா?

அடுத்த வீட்டுச்செல்லையா என் மகனைத் தடவிக்கொடுத்து ஆறுதல் சொல்லிக்கொண்டிருக்கிறார். மகனும் பாவம்தான். ராத்திரியில் இருந்து சாப்பாடு தண்ணி இல்லாமல்… இப்பொழுதும் அழுதுகொண்டே இருக்கிறான். நான் பேசியதை நினைத்துத்தான் அழுகிறானா?

இல்லை… இருக்காது. அவனுக்கு என்னை நன்றாகத் தெரியும். கோபம் வரும்போது நான் எல்லை மீறிப் பேசுபவன் என்பது அவனுக்குத் தெரியும். நான் இறந்துபோனதை நினைத்துத்தான் அவன் அழுது கொண்டிருக்கிறான்.

மகனுக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டிருக்கும் செல்லையாவும் பாவம்தான். அவருக்கு 5 பிள்ளைகள். இரண்டு வெளிநாட்டில், இரண்டு கொழும்பில். இங்கு இருக்கும் மகனுடனும் ஏதோ பிரச்சினை. தனியத்தான் இருக்கிறார்.

என்னுடைய மகன் என்றால் என்னை இப்படித் தவிக்க விட்டிருப்பானா? எனக்குக் காய்ச்சல் வந்தால் அவனுக்கு நித்திரை வராது. இப்படிப்பட்ட மகனைத்தான் நான் “எனக்குக் கொள்ளியும் வைக்கப்படாது” என்று பேசினேன். ஏன்? நான் அப்படிச் சொல்லாமல் விட்டிருக்கலாம்.

மகனுடன் இறுதியாகச் சில வார்த்தைகள் பேசவேண்டும் என்ற ஒரு துடிப்பு என்னுள் இருந்துகொண்டிருக்கிறது. நான் பேசத் துடிக்கும் இந்த வார்த்தைகள் அவனின் இதயத்திற்கு கேட்கும் என்று நம்பி பேசிப்பார்க்கிறேன்.

“தம்பி! உன்னிலே எனக்குக் கோபம் இல்லை. சொல்லிலே சொல்ல முடியாத அன்பு மட்டும்தான் இருக்கிறது. நீ என்னுடையவன் என்ற உரிமையில் நான் எல்லை மீறிப் பேசியவை உண்மையில்லை. நீ ஓயாமல் உழைத்துக்கொண்டேதான் இருக்கிறாய். எனக்காக, உன் குடும்பத்திற்காக, ஏன் இந்த ஊருக்காகவும் உழைத்துக்கொண்டுதான் இருக்கிறாய். இப்படி உன்னால் முடியுமாக இருக்கும் காலத்திலேயே உன்னைப்பற்றியும் கொஞ்சம் சிந்தித்துப்பார். பிற்காலத்தில் உன் பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள். இது காலத்தின் ஒரு கட்டாயத்தேவை. பெரியவர்கள், மூத்தவர்கள் என்று ஏட்டிலும் எழுத்திலும்தான் முக்கியத்துவம் இருக்கிறது. நடைமுறையில் அந்தக் கௌரவம் கிடைப்பதேயில்லை.

இவ்வளவு காலமாக எங்களுக்காகவே உழைத்துத் தேய்ந்துபோன ஒரு உயிர் என்ற உணர்வு இருப்பதேயில்லை. குழந்தைகளைப் போலவே முதியவர்களும் இலகுவில் நோய்வாய்ப்படும் தன்மை உடையவர்கள். ஆனால் குழந்தைகளுக்குக் கிடைப்பது போன்ற கவனிப்பும் பாதுகாப்பும் மருத்துவ வசதிகளும் முதியவர்களுக்குக் கிடைக்கிறதா? ஏன்? இவர்களைத் தேவையற்றவர்கள் என்று நினைக்கிறார்களா? உழைப்பை உறுஞ்சி எடுத்தபின் பிழிந்து எறியும் சக்கைகள் என்று நினைக்கிறார்களா?

உனக்குத் தெரியும் எழுபத்து நான்காம் ஆண்டு உணவுக்குப் பெரிய பஞ்சம் வந்தது. அதில் இறந்து போனவர்களில் பெரும் பங்கினர் முதியவர்கள் என்பது உனக்குத் தெரியுமா? இது எதைக் காட்டுகின்றது?

உன்னுடைய அந்திக்காலத்தில் உனக்காகக் குரல் கொடுக்க, பாதுகாக்க யாருமே இல்லாமல் போகலாம். நீ தான் உனக்குப் பாதுகாப்பு. உன்னைப்பற்றியும் கொஞ்சம் இப்பொழுதே சிந்தி. நான் இப்படியெல்லாம் பேசிக்கொண்டுபோவது உன்னை மறைமுகமாகக் குற்றம் சுமத்துவதற்காக என்று நினைக்காதே. நீ உண்மையில் அப்படிப்பட்டவனும் அல்ல. உன் அந்திக்காலத்திலும் எனக்கு அக்கறை இருக்கிறது என்பதுதான் உண்மை.

சந்ததிக்குச் சந்ததி மனிதன் மாறிக்கொண்டிருக்கிறான். இன்று நீ ‘பிழை’ என்று நம்பிக்கொண்டிருக்கும் ஒன்றை உன் அடுத்த சந்ததி ‘புனிதம்’ என்று சொல்லலாம். இந்தக் கொள்கை வேறுபாட்டை ‘சந்ததி இடைவெளி’ என்று சொல்லுவார்கள், உனக்குத் தெரிந்திருக்கும். இந்த இடைவெளியை சகித்துக்கொள்வது உன் கடைசிக்காலத்தில் கஷ்டமாக இருக்கும். அதுதான் பல பிரச்சினைகளுக்கு அடிநாதமாயும் இருக்கும். எனவே நீ இதை சகித்துக்கொள்ள இப்பொழுதிலிருந்தே உன்னைத் தயாராக்கிக்கொள். ஏனெனில் நீ தனிமனிதனாக நின்று அடுத்த சந்ததியைத் திருத்தமுடியாது.”

நான் மீண்டும் மகனைப் பார்க்கிறேன். இப்பொழுதும் அழுதுகொண்டே இருக்கிறான். நான் பேசியவை அவனது மனதிற்குக் கேட்டிருக்குமா? அன்று நான் பேசியவை என் நெஞ்சிலிருந்து வரவில்லை என்பதை விளங்கிக்கொண்டிருப்பானா? என்னுடைய மகன். நான் வளர்த்த மகன். அவனுக்கு உலகம் தெரியும். இயற்கையின் நியதிகளும் புரியும். “எனக்கு நீ கொள்ளி வைக்கப்படாது” என்று நான் சொன்ன பின்பும் கொள்ளி வைக்க ஆயத்தமாகி நிற்கிறானே. அதிலிருந்து தெரியவில்லையா? அவனுக்கு எல்லாம் தெரியும் என்று.

“தம்பி! எனது ஆவி இங்கிருந்து போகவேண்டிய நேரம் நெருங்கிக் கொண்டிருக்கின்றது. அதற்கு முன் சில விஷயங்கள் கேட்பேன். செய்வாயா? முற்றத்தில் நிற்கும் மாமரத்தைத் தறிச்சுப்போடாதை. அந்த சிவத்த ஆட்டுக்குட்டியை இறைச்சிக்காரனுக்கு விற்றுப்போடாதை. எனது பூட்டப்பிள்ளைக்குக் கர்ணனின் கதை சொல்லிப் பாதியில் இருக்கிறது. அதை முடித்துவை. செய்வாயா?”

சி.சிவன்சுதன்
வைத்திய நிபுணர்.
யாழ் போதனா வைத்திய சாலை.