சுணை நீர்த் தாக்கம் வடகடற்பகுதியில் அதிகரிக்கக் காரணம் என்ன?

கடந்த சில மாதங்களாக சுணை நீர்த்தாக்கம் காரணமாக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுவரும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. வட கடற்பகுதியில், குறிப்பாக பாஷையூர், அரியாலை, கல்முனைப்பகுதி, கொழும்புத்துறை, மண்டைதீவு, வேலணைப் பகுதிகளில் கடற்றொழிலில் ஈடுபட்டுவரும் மீனவர்களே இதனால் பெருமளவில் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். பலர் பல தடவைகள் இதன் தாக்கத்துக்கு உட்பட்டிருக்கிறார்கள். இது ஒரு பெரும் பிரச்சினையாக உருவெடுத்துவருகின்றது. இதன் காரணமாக மீனவர்கள் தொழிலுக்குச் செல்ல அச்சப்படுவதுடன், இதன் தாக்கத்துக்கு உட்படுபவர்கள் 3-4 தினங்களுக்குத் தொழிலுக்குச் செல்ல முடியாத நிலையும் ஏற்படுகின்றது. பல மீனவ அமைப்புக்கள் இதன் தாக்கத்தைக் கட்டுப்படுத்த உதவுமாறு கோரிக்கை விடுத்துவருகின்றன.

இதன் தாக்கத்துக்கு உட்பட்டவர்களுக்கு சில கடுமையான அறிகுறிகள் தோன்றுகின்றன. உடல் வலி, கடுமையான தோல் எரிவு, வாந்தியும் வயிற்று வலியும், சுவாசிப்பதில் சிரமம், மயக்கத்தன்மை, களைப்பு, அதிகரித்த வியர்வை, உடல் உறுப்புகளில் தாக்கம் போன்ற அறிகுறிகளுடனேயே பொதுவாக இவர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுகின்றார்கள்.

மீனவர்களிடையே சுணை நீர்த் தாக்கம் சம்பந்தமாக நிலவிவரும் சில தப்பபிப்பிராயங்களும், தவறான முதலுதவிச் சிகிச்சைகளும் இதன் தாக்கம் மேலும் அதிகரிக்கக் காரணமாக அமைகின்றன. கடலிலே காணப்படுகின்ற ஒரு வகை நஞ்சு நீர், தமது உடலில் படுவதனாலேயே இது ஏற்படுவதாக பல மீனவர்கள் நம்புகின்றனர். இது தவறான ஒரு நம்பிக்கையாகும். கடலிலே காணப்படுகின்ற சில வகையான ஜெலி மீன்கள் உடலில் படுவதனாலேயே இது ஏற்படுகின்றது. இந்த ஜெலி மீன்கள் சிறியவையாகவும் மெல்லிய நிறமுடையவையாகவும் இருப்பதால் கடல் நீரிலே இவற்றை அடையாளம் காணுவது சிரமமாக இருக்கின்றது. இந்த ஜெலி மீன்களின் தாக்கத்துக்கு உட்பட்ட மீனவர்கள், பல தவறான ‘கை’வைத்திய முறைகளைக் கையாள்வதால், இதன் தாக்கம் மேலும் அதிகரிக்க வாய்ப்பாக அமைந்துவிடுகின்றது. ஜெலி மீன் தாக்கத்துக்கு உள்ளானவர்கள் தமக்கு ஏற்பட்ட அந்தத் தாக்கத்தை உடனடியாக மற்றவர்களுக்குக் கூறத் தயக்கம் காட்டுகின்றார்கள். காரணம், இதனைப் பிறருக்குக் கூறினால், தம்மிலே ஏற்பட்டிருக்கும் தாக்கத்தின் வீரியத் தன்மை அதிகரிக்கும் என்று நம்புகின்றார்கள். இதனால் அனாவசியமான தாமதங்கள் ஏற்படுகின்றன. அத்துடன் இந்தச் சந்தர்ப்பத்தில் அவர்கள் தமது சிறுநீரைத் தாமே எடுத்து அருந்தும் செயலையும் செய்து வருகிறார்கள். இது பாதுகாப்பானது அல்ல. நோவைக் குறைத்து சிறுநீர் வெளியேறுவதை அதிகரிப்பதற்காக மதுபானங்களை அருந்துதல், கடி ஏற்பட்ட இடத்தை ‘ஸ்பிரிற்’ இனால் அல்லது மதுபானங்களினால் கழுவுதல், கடுக்காய் போன்றவற்றைப் பாவித்து வயிற்றோட்டத்தை ஏற்படுத்துதல் போன்ற பலவகைக் கை வைத்திய முறைகளைக் கையாண்டுவருகிறார்கள். இவை பாதுகாப்பற்ற முறைகள் மட்டுமல்ல, ஜெலி மீன்களால் ஏற்படும் பாதிப்பு வீதத்தையும் அதிகரிக்கச்செய்யும்.

சுணை நீர்த்தாக்கம் என்று பொதுவாக அழைக்கப்படும் சில நச்சுவகை ஜெலி மீன்களின் தாக்கம், யாழ்.குடாக்கடலில் அதிகமாகக் காணப்பட்டாலும், வன்னி பூநகரிப் பகுதி, மன்னார் போன்ற பகுதிகளிலும் குறைந்த அளவில் காணப்படுகின்றது. கடற்தாழை அதிகமுள்ள குடாக்கடல் பகுதிகளிலேயே இந்த சுணை நீர்த்தாக்கம் அதிகளவில் ஏற்படுகின்றது. மீனவர்களும், சுழியோடிகளும், சுற்றுலாப்பயணிகளும் ஜெலி மீன்களின் தாக்கத்துக்கு உட்பட்டுவருவது நீண்டகாலமாக நடைபெற்றுவருகின்றது. ஆனால் அண்மைக் காலங்களில் இவற்றின் தாக்கம் பெருமளவு அதிகரித்துவருகிறது. இவற்றின் தாக்கத்தினால் பலர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். இந்தச் சுணை நீர்த்தாக்கம் அதிகரிப்பதற்குப் பல காரணங்கள் இருக்கமுடியும். இந்த விஷத்தன்மை உள்ள சிறிய ஜெலி மீன்களின் எண்ணிக்கை எமது கடற்பரப்பிலே அதிகரித்து வருவதே இதற்கான காரணமாக இருப்பதற்கான சாத்தியக்கூறுகளே தென்படுகின்றன. இவை எண்ணிக்கையில் அதிகரித்து வருவதற்கு காலநிலை மற்றும் சுற்றாடல் மாற்றங்கள் காரணமாக இருக்கமுடியும். அத்துடன் இந்த ஜெலி மீன் வகைகளை உணவாக உட்கொள்ளும் மீன்கள், எமது கடற்பரப்பிலே அழிந்துவருவதும் ஜெலி மீன்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்குக் காரணமாக இருக்கமுடியும்.

ஜெலி மீன் தாக்கத்துக்கு உட்பட்டு கடுமையான அறிகுறிகள் ஏற்பட்டவர்கள் உடனடியாக வைத்தியசாலைக்கு வந்தால், பொருத்தமான சிகிச்சை அளிப்பதன் மூலம் அவர்களின் அறிகுறிகள் 24 மணி நேரத்தினுள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியும். அத்துடன் இதனால் ஏற்படக்கூடிய பின்விளைவுகளையும் தடுக்கமுடியும். இதற்கு முதலுதவியாகத், தாக்கப்பட்ட இடத்தை கடல் நீரினால் நன்கு அலசிக் கழுவுதல், ஜெலி மீன்களின் பகுதி உடலில் ஒட்டியிருக்கிறதா என்று கவனமாக ஆராய்ந்து அவற்றை அகற்றுதல் என்பவற்றைக் கையாளவேண்டும். ‘ஸ்பிரிற்’ அல்லது மதுபானங்களினால், தாக்கப்பட்ட பகுதியைக் கழுவுவதைத் தவிர்க்கவேண்டும். தாக்கப்பட்டவரை உடனடியாகக் கரைக்குக் கொண்டுவந்து மருத்துவ உதவியை நாடுவது நல்லது. எல்லா வகையான ஜெலி மீன்களும் நஞ்சுத் தன்மை உடையவை அல்ல. அழகான ஆபத்தில்லாத பலவகை ஜெலி மீன்களும் உள்ளன. சில வகை ஜெலி மீன்கள் உணவாகப் பயன்படுகின்றன. ஏற்றுமதி செய்யப்படுகின்றன. வடகடலில் காணப்படுகின்ற ஜெலி மீன்கள் சம்பந்தமாகவும் அவற்றின் தாக்கங்கள் சம்பந்தமாகவும் ஆய்வுகளை ஆரம்பித்திருக்கிறோம். இந்த ஆய்வின் மூலம் பல புதிய தகவல்களை அறிந்து கொள்வதுடன், ஜெலி மீன்களால் ஏற்படும் பாதிப்புக்களைக் குறைத்துக்கொள்வதற்கான வழிமுறைகளையும் கண்டறியமுடியும்.

சி.சிவன்சுதன்
வைத்திய நிபுணர்.
யாழ் போதனா வைத்திய சாலை.