கண்பார்வையற்றவா்கள் புத்தகங்களை வாசிக்க உதவும் கருவி

கண்பார்வையற்றவா்கள் புத்தகங்களை வாசிப்பதற்காக புதிய கருவி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மோதிரம் போன்ற அமைப்புக்கொண்ட இக்கருவியினைச் சுட்டுவிரலில் அணிந்து அதன் உதவியுடன் கண்பார்வையற்றவர்கள் புத்தகங்களை வாசிக்க முடியும்.

இந்தக் கருவியை விரலில் அணிந்து புத்தகத்தில் உள்ள சொற்களின் மேல் விரலைக் கொண்டுசெல்லும்போது அக்கருவியில் பொருத்தப்பட்டிருக்கும் சிறிய கமரா மூலம் சொற்கள் படம் பிடிக்கப்பட்டு அவை ஒலி வடிவத்திற்கு மாற்றப்படுகிறது. இதற்கென விசேடமாக உருவாக்கப்பட்டிருக்கும் மென்பொருள் குறித்த கருவியால் படம்பிடிக்கப்படும் சொற்களை உடனடியாக ஒலி வடிவத்திற்கு மாற்றுகிறது.

சரியான முறையில் விரல்களை சொற்களின் மீது கொண்டு செல்வதற்கும் இதில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சொற்களின் தொடக்கம், முடிவு, இடைவெளி, புதிய வரி போன்றவற்றை உணரக்கூடிய வகையிலும், சொற்களைவிட்டு வெளியே விரல்கள் செல்லும் பட்சத்தில் சிறிய அதிர்வு மூலம் சரியான இடத்திற்கு விரலைக் கொண்டு செல்வதற்கு ஏற்றவகையிலும் இக்கருவி உருவாக்கப்பட்டுள்ளது.

இனி இந்தக் கருவியின் உதவியுடன் பார்வையற்றவா்களும் எதுவித சிரமமும் இன்றி அனைத்துப் புத்தகங்களையும் வாசித்தறிய முடியும்.