மார்பிலே பாய்வதற்காகவே வளர்க்கப்படும் கடாக்கள்

புகைத்தல் நாகரீகத்தின் அடையாளமாகக் கருதப்பட்ட ஒரு காலம் இருந்தது. அது தற்பொழுது மாற்றம் பெற்று புகைப்பிடிப்பவர்களை தீண்டத்தகாதவர்கள் போலப் பார்க்கும் காலம் ஒன்று துளிர்விட்டு வருகின்றது. காரணம், புகைப்பிடிக்கும் பழக்கம் அவரை மட்டும் தாக்குவதில்லை. அவரைச்சுற்றி இருப்பவர்களையும் பாதித்து நோயாளி ஆக்கிவிடும் என்பதுதான். இதன் காரணமாகவே பொது இடங்களில் புகைப்பது தண்டனைக்குரிய குற்றம் என சட்டவிதி கூட நடைமுறைக்கு வந்திருக்கின்றது.

புகைப்பதனால் பாரிசவாதம், மாரடைப்பு, புற்றுநோய், சுவாசம் சம்பந்தமான நோய்கள், இரத்தக்குழாய் சம்பந்தமான நோய்கள் என பல பாரதூரமான நோய்கள் ஏற்படுகின்றன என்பது எம் எல்லோருக்கும் தெரியும். இருந்தும் இப்பழக்கத்தைத் துடைத்தெறியும் மார்க்கம் எமக்குத் தெரியவில்லை.

புகைப்பது ஒவ்வொருவரினதும் தனி மனித உரிமை. ஒருவனைப் புகைக்க வேண்டாம் என்று வற்புறுத்துவதற்கு யாருக்கும் உரிமை இல்லை. புகைப்பதை நிறுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளலாம், அவ்வளவு தான். நீங்கள் புகைக்க விரும்பினால் சன நடமாட்டமற்ற நல்ல காற்றோட்டமான இடத்திற்குச் சென்று புகைத்துக்கொள்ளுங்கள். இதன் மூலம் உங்கள் குடும்பத்தையும் பிள்ளைகளையும் மற்றவர்களையும் நீங்கள் வெளிவிடும் புகையின் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம். ஏற்படும் பாதிப்புக்கள் உங்களுடன் மட்டும் மட்டுப்படுத்தப்படும். மற்றவர்கள் தப்பித்துக் கொள்வார்கள்.

புகைத்தலிற்கு அடிமையாகி இருக்கும் ஒருவர் அந்த அடிமைத்தன்மையினை உடைத்துக்கொண்டு வெளியே வருவாராக இருந்தால், புகைக்கும் பழக்கத்தை முற்றிலும் கைவிடுவாராக இருந்தால் அந்தப் பழக்கத்தினால் உடலில் ஏற்பட்ட தாக்கங்களில் பெரும்பகுதி திருந்தி வருவதற்கான சந்தர்ப்பம் இருக்கிறது. புகைக்கும் ஒவ்வொருவரும் இப்பழக்கத்திலிருந்து வெளியே வர உண்மையாக விருப்பப்பட்டால் அதை நடைமுறைப்படுத்துவது கஸ்டமாக இருக்காது. அதனை நடைமுறைப்படுத்த முயலும்பொழுது சில வேண்டத்தகாத அறிகுறிகள் தோன்றினால் வைத்தியரின் உதவியை நாட முடியும். புகைக்கும் பழக்கமுடைய ஒவ்வொருவரையும் சந்திக்கும் பொழுது அவரை இந்தப் படுகுழியிலிருந்து தூக்கிவிட நாம் கை கொடுப்போம். அவர்களுக்குப் பொருத்தமான அறிவுரைகளை வழங்குவோம்.

கஞ்சாச் செடி வளர்ப்பது தண்டனைக்குரிய குற்றம் என்பது எம் எல்லோருக்கும் தெரியும். ஆனால் பல இலட்சம் மக்களைப் பாதித்து நிற்கும் புகையிலைச் செடியை வளர்ப்பது தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்படுவதில்லை. இதற்கான காரணமும் எதுவென்று எனக்குத் தெரியாது.

பயிரிடப்படும் ஒவ்வொரு புகையிலைச் செடியும் யாரோ ஒரு மனிதனை நோயாளியாக்கும். இதே விளைநிலத்தில் ஒரு மரக்கறியைப் பயிரிட்டால் அது யாரோ ஒரு மனிதனை வாழவைக்கும். வளர்த்த கடா மார்பிலே பாய்ந்தால் கவலைப்படுகிறோம். ஆனால் மார்பிலே பாய்வதற்காகவே பல புகையிலைச் செடிகளை வளர்த்து வருகிறோம்.

ஒரு சிகரெட், மனிதனுக்கு விடுக்கும் இறுதி அறிவிப்பு:

நீ என்னை உறிஞ்சுகையில் உன் உயிருக்கு உலை மூட்டப்படுகின்றது. எனக்குக் கொள்ளி வைக்கத் துணிந்த உன் நெஞ்சு, நான் எரியும் செந்தணலில் கருகும். உன் உதிரம் கொதித்து இரத்த நாளங்கள் மரத்துப்போகும். உன் உடம்பு புற்றுநோய்ப் பூக்களாகும். உனக்கும் ஒரு நாள் கொள்ளி வைக்கப்படும். முடிவில் சேர்ந்தே சாம்பலாவோம் வா! நாளை சாம்பல் மேட்டில் சங்கமம் ஆகுவோம்.

சி. சிவன்சுதன்
வைத்திய நிபுணர்
யாழ்.போதனா வைத்தியசாலை