யாழ்ப்பாணம் ஒரு சுதந்திர பூமி

ஒரு வாகனம் மற்றைய வாகனங்களுடன் இந்தப்பகுதியூடாக பேசிக்கொள்கிறது. இது மனிதனின் சுகவாழ்வுக்கு எப்படி உதவப்போகிறது என சிந்தியுங்கள்..

ஜப்பானில் பிறந்து இங்கிலாந்து தேசத்தில் தவழ்ந்து இன்று இந்த யாழ்ப்பாண மண்ணிலே பவனி வந்தவாறு உங்களுடன் பேசிக் கொண்டிருக்கிறேன். இப்பொழுதுதான் சுதந்திரம் என்பதன் உண்மையான அர்த்தம் புரிகின்றது.

கூட்டமாகச் செல்வதற்கும், பிடித்த இடத்தில் நிற்பதற்கும், புகைப்பதற்கும், தண்ணி அடிப்பதற்கும், நினைத்தபடி நடமாடுவதற்கும், எங்கும் எப்படியும் சத்தம் செய்து சல்லாபிப்பதற்கும், ஒடுங்கிய தெருக்களிற்கூட ஊர்ந்து ஊர்வலம் வைப்பதற்கும் இப்படியாக எல்லா உரிமைகளும் நிறைந்த இந்த உன்னத பூமியிலிருந்து என் உடன் பிறப்புக்களான வாகனப் பெருந்தகைகளுடன் பேசுவதில் பெருமிதம் அடைகிறேன்.

மனிதர்களுக்குக்கூட தெருக்களில் புகைப்பதற்கு அனுமதியில்லை. ஆனால் பாருங்கள் நாம் எப்படிப் புகைத்தவாறு புறப்பட்டுச் செல்கிறோம். இந்தப் புகையால் மனிதர்களின் நுரையீரல்தான் கருகும். அவர்களின் நுரையீரல்களுக்குத்தான் கறுப்புக் கம்பளம் போர்த்தப்படும். எமக்கு எதுவும் ஆகப்போவதில்லை. நாம் ஏன் அவர்களுக்காகக் கவலைப்படவேண்டும்? எமக்காக அவர்கள் எப்பொழுது கதைத்திருக்கிறார்கள்? கவலைப்பட்டிருக்கிறார்கள்?

பிற நாடுகள் என்றால் நாம் இப்படி நினைத்தபடி புகைக்க விட்டுவைப்பார்களா? அதுதான் இந்த மண்ணின் மகிமை.

தெரு முடக்குகளிலும் சந்தடி மிக்க இடங்களிலும், ஏன் பாடசாலை வாசல்களிலும் கூட எவ்வளவு ஆறுதலாக நின்று நிதானித்து ஓய்வெடுக்க முடிகின்றது. எந்த நாட்டில் கிடைக்கும் இந்தச் சுதந்திரம்?

வழிநெடுக கோன் அடித்துப் பேசி ஆர்ப்பரிக்கும் உரிமை மேலைத்தேசங்களில் எங்கே கிடைக்கப்போகிறது? சத்தத்தால் சுற்றாடல் அசுத்தமாகிப்போகும் என்பது உண்மைதான். ஆனால் அது நம்மை ஒன்றும் செய்யாது. மனிதனைத்தான் தாக்கி நோயாளி ஆக்கிவிடும்.

எமது பேச்சுச் சுதந்திரம் பற்றிப் பேசுவோமாயின், வைத்தியசாலை வீதிகளில், ஏன் வைத்தியசாலை வாசலிற்கூடக் கோன் அடித்துப் பேசிக்கொள்ளும் பேச்சுச்சுதந்திரம் வேறு எந்தத் தேசத்தில் இருக்கிறது? அங்கு சிகிச்சை பெறுவது மனிதர்கள்தான். வாகனங்கள் அல்ல. எனவே நாம் ஏன் இதையிட்டு அலட்டிக்கொள்ளவேண்டும்?

சாலைகளின் குன்று குழிகளில் நிறைந்திருக்கும் மழைத் தண்ணீரை அடித்துக்கொண்டு செல்வதில் எத்தனை ஆனந்தம்? அந்தத் தண்ணீர்த் திவலைகளில் நனையும் மனிதர்கள் காட்டும் அபிநயம் எத்தனை அழகு? மேலைத்தேசத் தெருக்களில் அடிப்பதற்கு ஒரு குழி தண்ணீராவது கிடைக்குமா? என்ன நாடுகள் அவை!

நான் இங்கிலாந்து தேசத்தில் இருந்த காலத்தில் பட்ட கஸ்டங்கள் எத்தனை? சுதந்திரமாக அந்த பரந்த தெருக்களில் நடமாட முடியாது. எத்தனை விதிமுறைகள், எத்தனை கட்டுப்பாடுகள். அப்பப்பா! அத்தனை கட்டுப்பாடுகளையும் விதிமுறைகளையும் தகர்த்தெறிந்து எம் இஸ்டத்துக்கு இந்த மண்ணில் சுதந்திரமாக ஓடித் திரிகின்றோம். இந்த விதிமுறைகளை மனிதர்கள் தம் சுயநலத்திற்காக வாகன விபத்துக்களிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்காக எம்மீது திணிப்பதை நாம் எப்பொழுதும் அனுமதிக்க முடியாது. நாம் ஓடுவதற்கு விதிமுறைகள் வகுக்க மனிதன் யார்? தெருவிலே நாம் மனிதர்களைத் தட்டிவிட்டுப் போனாலும் தட்டிக்கேட்க யார் இருக்கிறார்கள்?

மேலைத்தேய நாடுகளில் உரிமைகள் எதுவுமின்றி இயந்திர வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கும் என் இனிய வாகனப் பெருந்தகைகளே! யாழ்ப்பாணம் வந்துவிடுங்கள். உங்களுக்கு சுதந்திரம் எதுவுமின்றி கட்டுப்பாடுகளுடன் வழுக்கி ஓடும் பெருந்தெருக்கள் வேண்டுமா? அல்லது பூரண சுதந்திரத்துடன் புழுதி கிளப்பி குலுக்கி ஓடும் குறுந்தெருக்கள் வேண்டுமா? எனச் சிந்தியுங்கள்.

வாருங்கள்! ஒரு வரலாறு சமைப்போம். வாகன உரிமை தலைமையகத்தை யாழ் மண்ணிலே நிறுவுவோம். எம்மில் ஏறி சவாரி செய்ய முயலும் மனிதன் மண் கவ்வட்டும்.

சி. சிவன்சுதன்
வைத்திய நிபுணர்
யாழ்.போதனா வைத்தியசாலை