எம்மை நாமே காத்துக்கொள்ள முயல்வோம்

உண்மைகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவர வேண்டியது எம் ஒவ்வொருவரினதும் கடமையாகும். நாம் நோய்வாய்ப்படும் போது எமது நோயின் உண்மையான நிலை பற்றித் தெரிந்துகொள்ளும் உரிமை எமக்கு இருக்கிறது. ஒருவர் தனக்குத் தீவிரமான நோய் நிலை இருக்கிறது எனத் தெரிந்துகொண்டால் அவர் தனது மிகுதி வாழ்க்கையை அதற்கு ஏற்றாற்போல் திட்டமிட முடியும். தான் சந்திக்க விரும்பும் மனிதர்களைச் சந்திக்க முடியும். தான் பேச விரும்புபவர்களுடன் பேச முடியும். தான் நிறைவேற்றிமுடிக்க வேண்டும் என்று நினைத்து நிலுவையிலுள்ள சில காரியங்களை நிறைவேற்றி முடிக்க முடியும். சிலர் தனது இறுதிச்சடங்குகள் எவ்வாறு நடைபெறவேண்டும் என்பதைக்கூடத் திட்டமிடுவார்கள். எனவேதான் கடுமையான நோய் நிலை ஒன்று ஏற்படும் பொழுது அதனை அந்த நோயாளிக்கே தெரியப்படுத்தவேண்டும் என்ற தேவை எழுகின்றது.

எல்லோருக்கும் மரணம் நிச்சயமானது. ஒன்றரை நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர்கள் யாரும் இன்று உயிருடன் இல்லை. இன்னும் ஒன்றரை நூற்றாண்டுகளில் இன்று இருப்பவர்கள் யாரும் உயிருடன் இருக்ககப்போவதில்லை. இந்தக் குறுகிய இடைவெளியில் மனிதனின் வாழ்க்கை முற்றுப்பெற்றுவிட்டதாகக் கருத முடியாது. அதன் பின்பும் அவன் நினைவுகளாய், சரித்திரமாய் இங்குதான் இருக்கப்போகிறான். எனவே ஒருவன் தனது வாழ்க்கையைப் பூரணப்படுத்திக்கொள்வதற்குத் தனது நோய் நிலை பற்றிய தகவல்களும் தேவையானதாக இருக்கலாம்.

இவ்விடயத்திற்கு இன்னொரு பக்கமும் இருக்கிறது. சிலருக்குத் தமக்குக் கடுமையான நோய்நிலை ஏற்பட்டிருக்கிறது என்பதை ஜீரணிக்கமுடியாமல் இருக்கும். அதன் காரணமாக அவர்களின் மிகுதி வாழ்க்கை மிகவும் துன்பகரமானதாகவும், குழப்பம் நிறைந்ததாகவும், நம்பிக்கை, பிடிப்பு இல்லாததாகவும் மாறிவிடுகிறது. இந்த நிலை ஏற்படுவதை அவரது உறவினர்கள் பலர் விரும்புவதில்லை. இது அவருக்கு ஏற்பட்டிருக்கும் கஸ்டங்களைக் கூட்டுவதாகவே அமையும் என்று கருதுகிறார்கள். இதனால் நோயாளிக்கு நோய் நிலையின் உண்மைத் தன்மையை மறைக்க முற்படுகின்றனர். நல்ல நோக்கத்திற்காகவே இதனைச் செய்ய முயலுகின்றனர்.

இன்னும் சில நோயாளர்களும் நோயாளர்களின் நெருங்கிய உறவினர்களும் நோயின் பிரச்சினையான பக்கங்கள் பற்றிப் பேச விருப்பப்படுவதில்லை. அவர்கள் அது பற்றிப் பேச விருப்பப்படாத சந்தர்ப்பங்களில் வைத்தியர் அவர்களின் அந்த விருப்பத்தை நிறைவேற்றவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். ஒரு நோயாளி தனது கடுமையான நோய் நிலை பற்றித் தனது உறவினர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டாம் என்று வைத்தியரைக் கேட்டுக்கொள்ளும் சந்தர்ப்பத்தில் அதனையும் நிறைவேற்றவேண்டிய கடப்பாடு வைத்தியருக்கு இருக்கிறது. இவ்வாறு உறவினர்களுக்கு இந்தத் தகவல்கள் மறைக்கப்படும்பொழுது வைத்தியர் நோயாளியின் உறவினர்களின் கோபத்திற்கு ஆளாகவேண்டிய சந்தர்ப்பங்களும் ஏற்படுகின்றன. இவற்றை சமாளித்துக்கொள்வது வைத்தியரின் கடமையாகின்றது.

நோயாளி ஒருவரின் மனநிலை அல்லது அறிவுநிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கும் பொழுது அவருடன் வைத்தியர் உரையாட முடியாது. இந்தச் சந்தர்ப்பத்தில் நோயாளியின் நிலை பற்றி அவரின் நெருங்கிய உறவினர்களுடன் பேசவேண்டிய கடப்பாடு வைத்தியருக்கு உண்டு.

நோயின் கடுமைத் தன்மையை நோயாளிக்கோ அல்லது அவரின் உறவினர்களுக்கோ தெரியப்படுத்துவது என்பது வைத்தியருக்குக்கூட ஒரு சஞ்சலமான விடயம்தான். இது பல படிமுறைகளைக் கொண்டது. இதில் கவலைப்படவேண்டிய விடயம் யாதெனில் கடுமையான நோய்நிலைகளிலே பெரும்பாலானவை மக்களின் கவலையீனங்களாலும் அவர்களுக்குப் போதிய மருத்துவ அறிவு இல்லாததாலுமே ஏற்படுகின்றது. இவ்வாறானதொரு நிலை வந்துவிடக்கூடாது என்ற ஏக்கத்தின் காரணமாகவே மருத்துவர்கள் சிலர் நோயாளர்களுடன் கண்டிப்பாக நடந்துகொள்ளவேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்படுகின்றது. எதனையும் வருமுன் காப்பதற்கு முயற்சி எடுப்போம். அதனையும் மீறி வருபவை எமது கைகளில் இல்லை.

எம்மைப் பாதுகாப்பதற்கு எம்மால் இயன்றவற்றைச் செய்வது எம் ஒவ்வொருவரினதும் கடமையாகும்.

சி. சிவன்சுதன்
வைத்திய நிபுணர்
யாழ்.போதனா வைத்தியசாலை