அடிமையாதல் ஒரு சாபக்கேடா?

அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல்
அரிது அதனிலும் அரிது கூன்
குருடு செவிடு நீங்கிப் பிறத்தல்

என்பது ஔவையின் வாக்கு.

இந்த அரிய மானிடப் பிறவியின் ஒரு சாபக் கேடு போதை வஸ்து.

போதை வஸ்து என்னும் போது மது மட்டும் தான் போதை வஸ்து என்பதில்லை கஞ்சா, அபின், ஹோரோயின் போன்ற பல்வேறுபட்ட வகைகள் காணப்படுகின்றன.

மாற்றம் என்பதை தவிர எல்லாமே மாறும் என்ற கோட்பாட்டிக்கிணங்க முன்னொரு காலத்தில் சொர்க்க பூமியாக விளங்கிய எமது யாழ் மண்ணும் தற்போது போதைவஸ்து மிகவும் அதிகமாக காணப்படும் ஒரு இடமாக விளங்குகின்றது. இதன் காரணமாக இங்கு பல்வேறு அக்கிரமச் செயல்கள் அதிகரித்து வருகின்றன. உதாரணமாக நேற்று போதைவஸ்து பாவித்தவன் இன்று அதற்குரிய பணத்திற்காக கொலை, கொள்ளை போன்றவற்றை மேற்கொள்கின்றான். இதனால் பல்வேறு சமுதாயச் சீர் கேடுகள் “குடி குடியைக் கெடுக்கும்” எனும் வாக்கிற்குணங்க ஏற்படுகின்றன.

ஆண்கள் கிழமைக்கு 50 Unit மதுவிற்கு அதிகமாகவும், பெண்கள் கிழமைக்கு 35 Unit மதுவிற்கு அதிகமாகவும் எடுப்பார்களாயின் அது பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும்.

அல்ககோல் அதிகமாக உட்கொள்வதன் உடனடித்தாக்கமாக மூளை, ஈரல்,போன்ற அங்கங்கள் பாதிக்கப்படுகின்றன. அத்தோடு வீதி விபத்திற்கு மிக முக்கிய காரணியாக அல்ககோல் பாவித்து வண்டியோட்டுதல் அமைகின்றது.

நீண்டகாலமாக அல்ககோல் உள்ளெடுப்பதால் அவர்களிற்கு உணவில் நாட்டமின்மை அல்லது பசிக்குறைவு ஏற்படும். இதல் விற்றமின் B, புரதச் சத்துக் குறைபாடு ஏற்படுகின்றது. அல்ககோல் ஆனது நரம்புத் தொகுதியை தாக்குவதால் கை,கால் விறைத்தல்(peripheral), உணர்ச்சியின்மை(neuropathy), வலிப்பு(epilepsy), மறதிக்குறைபாடு(dementia) என்பன ஏற்படலாம்.

கர்ப்பிணித் தாய்மார் அல்ககோலிளை அருந்துவதனால் அது சிசுவினைத் தாக்கும்.  (fetal alcoholic syndrome) பிள்ளைகள் பல விதமான அங்கக்குறைபாட்டுடன் பிறக்கும்.

அல்ககோலினால் உடல் ரீதியாக மட்டுமல்லாமல் உளரீதியாகவும் பாதிப்பு ஏற்படுகின்றது. நீண்டகாலமாக மிக அதிகளவு குடிப்பழக்கம் உடையவர்களுக்கு மனச்சோர்வு(Depression) ஏற்படுகின்றது. அது மட்டுமல்லாது அல்ககோல் பாவிக்காது தவிர்க்கப்படும் போது பதற்றம் ஏற்படுகின்றது.

அல்ககோல் பாவிப்பவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் சாத்தியக் கூறும் மிக அதிகமாகக் காணப்படுகின்றது. அவர்களின் தனித்துவத்தன்மையிலும் மாற்றம் ஏற்படுகின்றது.

உளப்பிளவை நோய்க்குரிய சில அறிகுறிகளும் அல்ககோல் பாவிப்பவர்களிடம் காணப்படுகின்றது.

அத்தோடு அல்ககோல் பாவிப்பவர்களிற்கு மலட்டுத்தன்மை(Sexual dysfunction) ஏற்படுகின்றது.

அல்ககோல் பாவிப்போரின் சமூகப் பிரச்சினைகளை எடுத்து நோக்குவோமாயின் இன்றைய எமது சமூகத்தில் காணப்படும் விவாகரத்திற்கு இது பொதுவான ஒரு காரணியாக அமைகின்றது. ஏனெனில் வீட்டில் சண்டை ஏற்படுதல் பெண்களைக் கொடுமைப்படுத்தல் போன்றவற்றிற்கு அல்ககோல் பாவனை ஒரு ஏதுவான காரணியாக அமைகின்றது. பிள்ளைகள் பெருமளவில் பாதிக்கப்படுகின்றார்கள்.
சற்று சிந்தியுங்கள்! தலைமுதல் கால்வரை எமது உடலின் ஒவ்வொரு பாகத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும் இந்த அல்ககோல் எமக்கு தேவையான ஒரு விடயமா???

கடவுள் கர்வத்துடன் படைத்த எமது உடல் இந்த மதுப் போத்தல்களிற்கு இரையாக்குவதற்காகவா???

மாற்றம் என்பதை தவிர எல்லாமே மாறக்கூடியது. நீங்கள் மனது வைத்தால் நீங்கள் குடிப்பழக்கத்தில் இருந்து விடுபட சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையை அண்மித்து அமைந்துள்ள குருந்தம் எனப்படும் அல்ககோல் புனர்வாழ்வு மையம் உங்களை அன்போடு வரவேற்கின்றது.

மதுவை மறப்போம் மாசற வாழ்வோம்.

Dr. பிரசாந்தி ஞானசம்பந்தன்.
உளநலப்பிரிவு
யாழ் போதனா வைத்தியசாலை.

நன்றி – www.jaffnadiabeticcentre.org