யாழ். பல்கலைக்கழக விளையாட்டு விருதுகள் விழா 2013

யாழ். பல்கலைக்கழக உடற்கல்வி அலகும் விளையாட்டு அவையும் இணைந்து நடாத்திய 2013ஆம் ஆண்டுக்கான யாழ். பல்கலைக்கழக விளையாட்டு விருதுகள் வழங்கும் விழாவானது 19.07.2014 (சனிக்கிழமை) மாலை 5.00மணிக்கு யாழ். பல்கலைக்கழக விளையாட்டு மைதான திறந்தவெளி அரங்கிலே மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

இவ்விழாவுக்கு பிரதம விருந்தினராக யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியை. (செல்வி.) வசந்தி அரசரட்ணம் அவர்களும், சிறப்பு விருந்தினராக முன்னாள் இலங்கை வலைப்பந்தாட்ட அணித் தலைவியும்(1997/1998) வெள்ளவத்தை ஹற்றன் நெஷனல் வங்கியின் உதவி முகாமையாளருமான திருமதி. ஜெயந்தி சோமசேகரம் டி சில்வா அவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இவ்விழாவிலே யாழ் பல்கலைக்கழக விளையாட்டு வீரர்கள் 86 Colours விருதுகளையும், 31 Half Colours விருதுகளையும் பெற்றுக்கொண்டனர். மேலும், பூப்பந்தாட்டம், கரம், சதுரங்கம், மேசைவரிப்பந்தாட்டம், கராத்தே ஆகிய விளையாட்டுக்களின் பல்கலைக்கழக திறந்த சுற்றுப்போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசில்களும், சிறந்த புதுமுக மாணவர்களுக்கான பரிசில்களும், சிறந்த துடுப்பாட்ட வீரர்களுக்கான பரிசில்களும், சிறந்த தடகள விளையாட்டு வீர, வீராங்கனைக்காக பரிசில்களும், சிறந்த விளையாட்டு வீரருக்கான பரிசிலும் வழங்கப்பட்டன. தொடர்ந்து பீடங்களுக்கிடையிலான புதுமுக மாணவர்களுக்கான போட்டிகளிலும், அனைத்துப் பீடங்களுக்கிடையிலான போட்டிகளிலும் வெற்றியீட்டிய அணிகளுக்கான பீட ரீதியான பரிசில்கள் வழங்கப்பட்டன. மேலும், 11ஆவது இலங்கைப்பல்கலைக்கழகங்களுக்கிடையிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றியீட்டிய அணிகளுக்கான, மாணவர்களுக்கான பரிசில்களும், இலங்கைப் பல்கலைக்கழக விளையாட்டுச் சங்கத்தினால் வழங்கப்பட்ட 2012ஆம், 2013ஆம் ஆண்டுகளுக்கான Colours விருதுகளைப் பெற்றுக்கொண்ட மாணவர்களுக்கான பரிசில்களும் வழங்கப்பட்டன. தொடர்ந்து ரஷ்யாவிலே நடைபெற்ற உலகப் பல்கலைக்கழகங்களுக்கிடையிலான விளையாட்டுப் போட்டியிலே கலந்துகொண்ட மாணவனுக்கான பரிசில் வழங்கப்பட்டது.

மேலும், விருந்தினர்களின் உரைகளும், கண்ணைக்கவரும் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன. பல்கலைக்கழக பீடாதிபதிகள், துறைத் தலைவர்கள், விரிவுரையாளர்கள், போதனாசிரியர்கள், உத்தியோகத்தர்கள், மாணவர்கள் மற்றும் விளையாட்டு ஆர்வலர்கள் பலரும் இவ்விழாவிலே கலந்து சிறப்பித்து பல்கலைக்கழக விளையாட்டு வீரர்களுக்குத் தமது பராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் வழங்கினார்கள்.

– சதா