இனிய நினைவுகளையே இனி எப்போதும் நினைப்பீர்

மனித வாழ்வில் நல்ல சம்பவங்களும் தீய சம்பவங்களும் மாறிமாறி நடந்த வண்ணம் இருக்கின்றன. நடந்த முடிந்த தீயவற்றை மட்டும் மீண்டும் மீண்டும் சிந்தித்து மனம் நொந்து கொண்டு இருப்போமாயின் நாம் நோய்வாய்ப்படும் சந்தர்ப்பம் அதிகமாகும். நாம் அன்றாடம் நல்ல விடயங்களை சிந்திக்க கூடியளவு நேரத்தையும் பிரச்சனையான விடயங்களைச் சிந்திக்க குறைந்தளவு நேரத்தையும் ஒதுக்கி கொள்ள வேண்டும். மனித மூளையும் இதற்கு ஏற்ற வகையிலேயே வடிவமைக்கப்பட்டு இருக்கின்றது. அண்மையில் நடாத்தப்பட்ட ஆய்வுகள் மனிதனின் நல்ல நினைவுகள் விரைவில் மங்குவதில்லை என்பதை உறுதி செய்வதுடன் தீய நினைவுகளை விரைவில் மங்கத் தொடங்குகின்றன என்பதையும் உறுதிசெய்கின்றன.

நாம் வாழ்க்கையில் சில விஷயங்களை நீண்ட நாட்களுக்கு நினைவு கொள்கிறோம். அதே நேரம் சிலவற்றை குறுகிய காலத்தில் மற்ந்து விடுகிறோம்.

இது எப்படி நடைபெறுகிறது என்பதை விஞ்ஞானிகள் இப்போது கண்டறிந்துள்ளார்கள்.

மனித குலத்தை மகிழ்ச்சியாக வைத்திருக்கவும், எதையும் தாங்கும் வல்லமை கொண்டவர்களாக மனிதர்கள் வாழ்வதற்காகவும் நல்ல நினைவுகள் நீண்டகாலம் நீடித்திருக்கின்றன என்று உளவியல் அறிஞர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

தீய நினைவுகளை விட்டொழித்து நல்ல நினைவுகளை தக்க வைத்துக் கொள்வது, வாழ்க்கையில் கசப்பான உணர்வுகள் மற்றும் நிலைமைகளை சமாளித்து சாதகமான அம்சங்களை முன்னெடுக்க உதவுகிறது என்று உளவியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

தீய நினைவுகள் விரைவாக மங்குகின்றன எனும் ஒரு கோட்பாடு 80 வருடங்களுக்கு முன்னர் முதல் முறையாக முன்வைக்கப்பட்டது.

பின்னர் 1970 ஆம் ஆண்டுகள் தொடக்கம் இதுகுறித்து பல்லின மக்களிடம் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக சுற்றுலாப் பயணம் தொடர்பான நினைவுகள் குறித்து ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. அதில் தாங்கள் அதில் கழித்த உல்லாசமான நாட்கள், சந்தித்த மக்கள் ஆகியவை குறித்து உடனடியாக நினைவு கூர்ந்தனர்.

அதே நேரம் தாமதமான விமானப் பயணம் போன்றவற்றை அவர்கள் நினைவு கூரவில்லை.

இதையடுத்து இந்த ஆய்வுக் கட்டுரையை எழுதியுள்ள உளவியல் விஞ்ஞானிகள், மனிதர்களிடையே விரும்பத்தகாத நினைவுகள் மற்றும் கசப்புணர்வுகள் வேகமாக மங்கி வருகின்றன என்று தெரிவித்துள்ளனர்.

ஆகவே இயற்கையாகவே தீய நினைவுகள் விரைவாக மங்கத் தொடங்குகின்றன என்பது நாடுகளையும் கலாச்சாரங்களை கடந்த ஒன்றாக உள்ளது என்று ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன என்று விஞ்ஞானிகள் தமது கட்டுரையில் தெரிவித்துள்ளனர்.