ஆரோக்கியமாக வாழ சிறந்த நற்பழங்கள்

இயற்கையன்னை எமக்களித்துள்ள ஏராளமான கொடைகளில் ஒரு முக்கிய இடத்தைப்பிடிப்பது விதவிதமான சுவைகள் மிகுந்த பழங்கள் ஆகும். பழங்கள் வெறும் சுவைக்காக மட்டுமல்ல, ஒரு முழு உணவாகக் கொள்ளக்கூடியவை. ஒவ்வொரு பழமும் அது சிறியதோ, பெரியதோ பல ஊட்டச்சத்துக்களைத் தன்னகத்தே உள்ளடக்கியுள்ளது. பழங்களை எம் உணவில் சேர்த்துக்கொள்வது மிகவும் நல்லது என்பது யாவரும் அறிந்ததே.

பழங்கள் மிக வேகமாக சீரணமடையக் கூடியவையாதலினால் இவற்றைத் தனியாக உண்பதுதான் நல்லது. பொதுவாக இரவில் மற்ற உணவுகளைத் தவிர்த்து, பழங்களை மட்டும் உட்கொள்வது சாலச் சிறந்தது.

இனி சில முக்கியமான பழங்கள் பற்றியும் அவற்றில் என்னென்ன சத்துக்கள் இருக்கின்றன என்பது பற்றியும் அவற்றைச் சாப்பிடுவதன் பயன்கள் பற்றியும் பாா்ப்போம்.

 

மாம்பழம்:

mango

கனிகளின் அரசன் எனக்கருதப்படும் மாம்பழம் முக்கனிகளில் முதல் கனி என்ற அந்தஸ்தைப் பெற்றுள்ளது. இதில் பழச்சர்க்கரை, புரதம் இவற்றுடன் விட்டமின் ஏ, பி, சி ஆகிய அனைத்தும் உள்ளன. மாம்பழம் இரத்த இழப்பைக் கட்டுப்படுத்தக்கூடியது. இரவில் மாம்பழமும் ஒரு குவளை பாலும் அருந்துவது உடல் நலத்திற்கு மிக நல்லது. மாம்பழத்தைத் தோலுடன் உண்பதே நல்லது, ஏனெனில் தோலில்தான் அதிக அளவு விட்டமின் சி காணப்படுகிறது. மேலும், கால்சியம், பொட்டாசியம், சோடியம் மற்றும் பாஸ்பரம் இதில் அதிக அளவு உள்ளது.

 

பலாப்பழம்:

jackfruit

முக்கனிகளில் இரண்டாம் இடத்தைப் பிடிப்பது பலா. பலாப்பழத்தில் விட்டமின் ஏ,சி மற்றும் பொட்டாசியம், கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் முதலிய தாதுப்பொருட்கள் காணப்படுகின்றன. பலாக்கொட்டையின் விட்டமின் பி1 மற்றும் பி2 அடங்கியுள்ளன. நன்கு பழுத்த பலாச்சுளைகளை மட்டுமே உண்ணவேண்டும், பழுக்காத பலாப்பழம் மற்றும் சமைக்காத பலாக்கொட்டையைச் சாப்பிடுவது செரிமானத்தைப்பாதிக்கக்கூடியது.

 

வாழைப்பழம்:

banana

வாழைப்பழமானது முக்கனிகளில் மூன்றாவது இடத்தைப்பிடிக்கின்றது. இது விலை மலிவானதாக, ஏழைமக்களும் எளிதில் வாங்கி உண்ணக்கூடியதாகவும் இருக்கின்றது. இதில் அடங்கியுள்ள சத்துக்கள் இது மற்றப் பழங்களுக்கு சற்றும் சளைத்ததில்லை என்பதற்கு சான்று. மூலநோயினையும் மலச்சிக்கலையும் எளிதில் தீர்க்கக் கூடியதான இப்பழம், அனைத்து விட்டமின்கள், தாதுப்பொருட்களைக் கொண்டுள்ளது. குறிப்பாக ஏராளமான பொட்டாசியம் இதில் அடங்கியுள்ளது. கண்பார்வைக்கோளாறுகளைத் தீர்க்கக் கூடியது என்று இப்பழம் கருதப்படுகிறது. வளர்ச்சிக்கு உதவுகிறது. ஆனால் உடல் பருமனை அதிகப்படுத்தும் என்பதால், எடைக்குறைப்பில் ஈடுபட்டிருப்பவர்கள் இதனை அதிக அளவு உட்கொள்ளக்கூடாது.

 

பப்பாளிப்பழம்:

papaya

 

பப்பாளியில், பழச்சர்க்கரைகளான குளுகோசும், ஃபிரக்டோசும் சம அளவில் காணப்படுகின்றன. நன்கு கனிந்த பப்பாளியில் ஏராளமான விட்டமின் சி, விட்டமின் ஏ, குறைந்த அளவில் விட்டமின் பி1, பி2 மற்றும் செரிமானத்துக்கு உதவும் பப்பாயின் என்ற நொதியப்பொருள் ஆகியவை அடங்கியுள்ளன. வயிற்றுக்கடுப்பு, மலச்சிக்கல், செரிமானமின்மை இவற்றுக்குக்கு அருமருந்தாகத் திகழும் பப்பாளி, கல்லீரல், கணைய மற்று சிறுநீரக நோய்களைக்கட்டுப்படுத்துவதுடன், பெண்களுக்கு மாதவிலக்கின் பொழுது ஏற்படும் சிக்கல்களைப் போக்கவும் உதவுகிறது. பழுக்காத பப்பாளியைச் சாப்பிட்டால், குடல்புழுக்கள் வெளியேறும். இதில் உள்ள கார்பின், பைப்ரின் போன்றவை இதயத்திற்கும், இரத்தம் உறைதலுக்கும் துணைபுரிகிறது.

 

மாதுளம்பழம்:

pomogrante

இரும்புச் சத்து அதிகமுள்ள மாதுளை, இரத்தத்தில் சிவப்பு அணுக்களை அதிக அளவு உற்பத்தி செய்யத் துணை புரிகிறது. உடலில் ஆக்சிஜனேற்றத்தைத் தடுப்பதில் பங்கு வகிக்கிறது. இதய நோய்களைக்கட்டுப்படுத்துவதிலும், கொழுப்புச்சத்தினைக்குறைப்பதிலும் முக்கியப்பங்காற்றும் மாதுளை, பெண்களுக்கு மார்பகப்புற்றுநோயை ஏற்படுத்தும் செல்களை அழிக்கக்கூடிய தன்மை படைத்தது.

 

ஆப்பிள் :

apple

இதில் விட்டமின் சி குறைவுதான் எனினும், இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. ஆப்பிளில் அடங்கியுள்ள சில வேதிப்பொருட்கள் ஆக்சிஜனேற்றத்தைத் தடுக்கக்கூடியவை. இது புற்றுநோயினைக்கட்டுப்படுத்தக்கூடியது என்பதை பல ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. கலோரி குறைவு (Negative Calorie) என்பதால் உடல் எடையினைக் கட்டுப்படுத்துவதற்கும் இது உதவுகிறது. ஆப்பிளில் உள்ள ஃபீனால் வகை வேதிமங்கள் மூளையின் நரம்பு மண்டலத்தைப் பாதுகாப்பதால், அல்சைமர், பார்கின்சன் நோய்களில் இருந்தும் ஆப்பிள் சாப்பிடுவது மூலம் விடுபடலாம்.

 

திராட்சைப்பழம்:

grapes

 

கறுப்பு மற்றும் பச்சை நிறத்தில் கிடைக்கும் திராட்சையில் பலவகைகள் உண்டு. இது பெரும்பாலும் நீராலும், மாவுப்பொருட்கள் மற்றும் சியல் தாதுப்பொருட்களை உள்ளடக்கியதாவும் உள்ளது. திராட்சையில் ஃபிரக்டோஸ், டெக்ஸ்ட்ரோஸ், கார்போஹைடிரேட் மற்றும் மாலிக் அமிலம், சிட்ரிிக் அமிலம், இரும்புச்சத்து, கால்சியம், தாமிரம், பொட்டாசியம் முதலியனவும் அடங்கியுள்ளன. இது இரும்புச்சத்து அதிகம் உள்ளமையால், பெண்களுக்குப் பொதுவாக ஏற்படும் மாதாந்தத்தொல்லைகளைக் கட்டுப்படுத்துவதுடன் உடலுக்கு பலம் தருகிறது. அடிக்கடி சளித்தொல்லையால் அவதிப்படுபவர்கள் உலர்திராட்சையை மட்டுமே உண்பது நல்லது, திராட்சை எலும்புகளுக்கும், பற்களுக்கும் உறுதியைத் தருவதுடன், இதயத்துடிப்பை சீராக்கவும் உதவுகிறது.