வாழ்க்கையை வசந்தமாக்குவோம்

வாழ்க்கையை சுகமாகவும் ஆரோக்கியமாகவும் பயனுள்ள முறையிலும் வாழ்ந்து முடிக்கவேண்டிய கடமை எம் அனைவருக்கும் உண்டு. எல்லோருக்கும் மரணம் நிச்சயமானது. ஒன்றரை நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த யாரும் இன்று உயிருடன் இல்லை. இன்னும் ஒன்றரை நூற்றாண்டு காலத்தில் இன்று இருப்பவர்கள் யாரும் உயிருடன் இருக்கப்போவதுமில்லை. இந்தக் குறுகிய இடைவெளியில் மனிதனின் வாழ்க்கை முற்றுப்பெற்றுவிட்டதாகக் கருதமுடியாது. அதன் பின்பும் அவன் நினைவுகளாய், காற்றாய், மண்ணாய், செடி கொடியாய் இங்குதான் இருக்கப்போகிறான். இந்தவகையிலே எமது இருப்பை உறுதியாக்க வாழும் காலத்தில் எமது உடலின் ஆரோக்கியம் பேணப்படவேண்டும் என்ற தேவை இருக்கிறது. சித்திரம் வரைவதற்கு சுவா் ஆரோக்கியமானதாக இருக்கவேண்டும். ஆரோக்கியமான சுவரில் வரைந்த சித்திரம்தான் காலம் கடந்து வாழும்.

நோயற்று வாழ்வது எப்படி? நோயுற்றும் சுகமாக வாழ்வது எப்படி? என்றெல்லாம் தெரிந்து வைத்திருப்பதும் ஒரு கலைதான்.

கடுமையான நோய்நிலைகளிலே பெரும்பாலானவை மனிதனின் கவனக்குறைவினாலும் போதியளவு மருத்துவ அறிவு இல்லாததனாலுமே ஏற்படுகின்றன. எனவே, நாம் மருத்துவம் சம்பந்தமான தகவல்களை அறிவதில் அதிகம் ஆா்வம்காட்டவேண்டும். அதற்கமைய எமது வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்ள முயலவேண்டும். எதனையும் வருமுன் காப்பதற்கு முயற்சிப்போம். அதனையும் மீறி வருபவை எமது கைகளில் இல்லை. அதை ஏற்றுக்கொள்ள முயலுவோம்.

எமது சிறார்களுக்கு சுகம் சம்பந்தமான அறிவைச் சிறுவயதிலே புகட்டுவோம். தினமும் உடற்பயிற்சி செய்யும் பழக்கத்தையும் உடல் நிறையைப் பேணும் பழக்கத்தையும் சிறுவா்களுக்குச் சொல்லிக்கொடுக்கவேண்டியது ஒவ்வொருவரினதும் கடமையாகும். அது அவா்களின் எதிர்கால வாழ்க்கை வசந்தமாவதற்கு உறுதுணையாக நிற்கும். எமது எதிர்காலத்தூண்கள் உறுதிபெறும். நல்ல சிந்தனைகளை வளா்ப்போம். தீய பழக்கங்களை ஒழிப்போம். வாழ்வை வசந்தமாக்குவோம்.

சி.சிவன்சுதன்
மருத்துவ நிபுணர்.
யாழ் போதனாவைத்தியசாலை.