5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் உண்பதை வழிப்படுத்த சில பயன்தரும் குறிப்புகள்

 • குழந்தையைக் குடும்ப உறுப்பினர்கள் அனைவருடனும் சேர்ந்து உணவு உண்ண வசதி செய்யுங்கள்.
 • குழந்தைக்கென தனியான உணவு நேரத்தை அமைப்பதிலும் இது சிறந்தது.
 • குழந்தைக்கென தனியான கோப்பை, கரண்டி, கப் என்பவற்றைக் கொடுங்கள்.
 • குழந்தை தன் கைகளைக் கழுவிக்கொள்ள அனுமதியுங்கள்.
 • குழந்தையைக் கவரும் வகையில் உணவை அலங்கரித்து அளியுங்கள்.
 • உண்ணும் போது அவர்களின் முழுக்கவனமும் உணவின் மேல் இருக்கக்கூடியதாகப் பார்த்துக் கொள்ளுங்கள். தொலைக்காட்சியில் கார்ட்டூன் பார்த்துக்கொண்டு சாப்பிடுவது, பராக்குக் காட்டியபடி உண்ணக் கொடுப்பது என்பவற்றைத் தவிருங்கள்.
 • உணவின் பெயர்களையும் அவற்றின் நன்மைகளையும் கூறுங்கள்.
  உ-ம்..கரட் சாப்பிடுவது கண்ணுக்கு நல்லது.
  பழங்கள் சாப்பிட்டால் தோல் மினுமினுப்பாக இருக்கும்.
 • ஒரே உணவு வகைகளைத் தினமும் கொடுப்பதைத் தவிருங்கள்.
  உ-ம்..கிழமையில் இரண்டு நாட்களுக்கு மேல் கோழி இறைச்சி தேவையில்லை.
 • ஒரே வகையான பிடித்த உணவை உண்ணும்போது தேவையான    சத்துக்கள் எல்லாம் கிடைப்பதில்லை போன்ற எண்ணக்கருக்களைக்    குழந்தையின் சிறுவயதிலேயே அறிமுகப்படுத்துங்கள்.
 • ஏற்கனவே தயாரித்த பக்கெற்றுக்களில் அடைக்கப்பட்ட “ரெடிமேட்“ உணவுகளில் குழந்தை தங்கியிருப்பதைத் தவிருங்கள். இது பிற்காலத்தில் ஒழுங்கற்ற உணவுப் பழக்கத்தைப் பிள்ளையில் ஏற்படுத்தும்.
 • உணவின் உப்புச் சுவை குறைவாக இருத்தல் நல்லது.
 • இனிப்புச் சுவையுள்ள உணவுகளை இயலுமான அளவு குறையுங்கள்.
 • உணவில் சிறிதளவு எண்ணெய்/ மாஜரீன்/ பட்டா் உள்ளதா என்பதை உறுதிசெய்யுங்கள். (முக்கியமாக நிறை குறைவுள்ள பிள்ளைகளில்)
 • உணவின் பின் தயிர்/ யோக்கட் என்பன கொடுப்பதைப் பழக்குங்கள்.
 • குழந்தைக்கு உணவைக் குறித்த நேரத்தில் கொடுப்பதிலும், அவருக்குப் பசிக்கும் போதும், தேவைக்கேற்ப கொடுப்பதுவுமே முக்கியம்.
 • குழந்தை தானாகவே உணவை அளைந்து உண்ண அனுமதியுங்கள். இதன் மூலம் அவர்கள் எடுத்து உண்ண ஆரம்பிக்கிறார்கள்.
 • குழந்தை உண்ண விருப்பப்படாவிடின், உணவைத் திணிக்க வேண்டாம். அது குழந்தைக்கு உணவின்மேல் விருப்பத்தைக் குறைக்கும்.
 • குழந்தையை ஓடி விளையாட அனுமதிப்பதன் மூலமும், பிரதான சாப்பாட்டுக்குமுன் வேறு எதனையும் உண்ணக்கொடுக்காமல் இருப்பதன் மூலமும் குழந்தையின் பசியைத் தூண்டலாம்.
 • குழந்தை ஒவ்வொருநாளும் ஒரே அளவில் சாப்பிடாது. அதனை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதேபோல் நோயுள்ள குழந்தையின் சாப்பாட்டு முறைகளும் சிறிது தளர்வாகவே பின்பற்றப்பட வேண்டும்.
 • குழந்தையின் நிறை அதிகரிப்பு, உயர அதிகரிப்பு என்பவற்றில் ஆர்வம் காட்டுங்கள்.
  உ-ம்..அதீத நிறை/ நிறைக்குறைவு.
 • ஒழுங்கான உணவுப்பழக்கத்தின் மூலம் நிறை, உயரம், அழகான உடலமைப்பு என்பவற்றைப் பேண முடியும் என்ற அறிவை இளவயதிலேயே அறிமுகப்படுத்துங்கள்.
 • பண்டிகைக் கால உணவுகள், விழாக்கால விருந்து உணவுகள் எப்போதும் உண்பதற்கு உகந்தவையல்ல என அறிவுறுத்துங்கள்.

 

Dr. (திருமதி) பி. செல்வகரன்,
நீரிழிவுச் சிகிச்சை நிலையம்,
யாழ். போதனா வைத்தியசாலை.