பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான உதைபந்தாட்டப் போட்டிகள் – 2014

யாழில் வரலாற்றின் முதல் பதிவு…!

பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான விளையாட்டுப்போட்டிகள் 1950ஆம் ஆண்டுஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பகாலத்தில் குறைந்தளவு எண்ணிக்கையான போட்டிகளுடன் ஆரம்பிக்கப்பட்டாலும் இன்று 14 பல்கலைக்கழகங்களுக்கு மத்தியில் 22 விளையாட்டுகளைக்கொண்ட 35 போட்டிகள் இடம்பெற்றுவருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான விளையாட்டுப்போட்டிகள் நடைபெற்றுவருகின்றன. மேலும் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை ஏதாவது ஒரு பல்கலைக்கழகத்தினால் விசேடமாக ஒழுங்குபடுத்தப்பட்டு நடாத்தப்படுகின்ற இப்போட்டிகள் இலங்கைப் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான விளையாட்டுப்போட்டிகள் (SLUG/Mini Olympic) என சிறப்புப் பெயருடன் 1980 இலிருந்து ஆரம்பிக்கப்பட்டு நடாத்தப்பட்டுவருகின்றது. இறுதியாக 2013 இல் இலங்கைப் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான விளையாட்டுப்போட்டிகளை மொறட்டுவ பல்கலைக்கழகம் மிகவும் கோலாகலமாக நடாத்தியிருந்தது. தொடா்ந்து 2016ஆம் ஆண்டுக்கான இலங்கைப் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான விளையாட்டுப்போட்டிகளை யாழ்.பல்கலைக்கழகம் நடாத்தவுள்ளமை இங்கே குறிப்படத்தக்கதொன்றாகும்.

பல்கலைக்கழகங்களுக்கு இடையிலானவிளையாட்டுப்போட்டிகளைப் பொறுத்தவரையில் ஒவ்வொரு பல்கலைக்கழகமும் ஏதாவதொரு போட்டியை நடாத்திவருவது வழமையாகவிருக்கின்றது. யாழ்.பல்கலைக்கழகத்தைப் பொறுத்தவரையில் யுத்தத்தின் பிடியில் அகப்பட்டிருந்தகாலத்தில் எந்தவொருபோட்டியையும் யாழ் மண்ணில் நடாத்தமுடியாத சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தது. எனினும் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் வித்தியானந்தன் அவர்களுடைய காலப்பகுதியில் வலைப்பந்தாட்டம் மற்றும் உதைபந்தாட்டம் என்பவற்றை நடாத்த முன்னெடுப்புகள் செய்யப்பட்டவேளையிலும் அது சில அசம்பாவிதங்களினால் கைகூடாமல் போனதுபெரும் ஏமாற்றமே!

இவ்வாறாக எந்தவொரு போட்டியையும் நடாத்தப்பெற்றிராத வேளையில் யுத்தத்தின் முடிவின் பின்னராகவரலாற்றின் ஏட்டிலே பதிக்கும்படியாக முதற்தடவையாக 2011 இல் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான துடுப்பாட்டப்போட்டியினை மிகவும் சிறப்பாக ஒழுங்குசெய்து நடாத்தியிருந்தது. அதனைத் தொடர்ந்து 2012 இல் மீளவும் துடுப்பாட்டப்போட்டியினை நடாத்த வாய்ப்பினைப் பெற்று நடாத்தி வெற்றிகொண்டது.

2014ஆம் ஆண்டுக்கான பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான விளையாட்டுப்போட்டிகளில் உதைபந்தாட்டப் போட்டியானது யாழ்.பல்கலைக்கழக வரலாற்றிலே முதற்தடவையாக யாழ்.பல்கலைக்கழக உடற்கல்வி அலகினால் ஒழுங்குசெய்யப்பட்டு இம்மாதம் 8ஆம், 9ஆம்மற்றும் 10ஆம் திகதிகளில் நடைபெற்றுவருகின்றது. 8ஆம், 9ஆம் திகதிகளில் லீக் மற்றும் காலிறுதிப்போட்டிகள் யாழ் பல்கலைக்கழக மற்றும் யாழ்ப்பாணக்கல்லூரி மைதானங்களிலும் 10ஆம் திகதியன்று அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் யாழ்.பல்கலைக்கழக மைதானத்திலும் இடம்பெறுகின்றன. மேற்படி போட்டிகளில் இலங்கையிலுள்ள 14 பல்கலைக்கழகங்கள் பங்குபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

யாழ்.பல்கலைக்கழக உதைபந்தாட்ட வரலாற்றினை எடுத்துநோக்குமிடத்து பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான விளையாட்டுப்போட்டிகளில் 1976/77 காலப்பகுதியில் யாழ்.பல்கலைக்கழகமானது முதற் காற்பதிவினைத் தடம் பதித்து 3ஆம் இடத்தினைப் பெற்றுக்கொண்டது. அதனைத் தொடர்ந்துஅடுத்துவரும் இரு ஆண்டுகளும் தொடர்ச்சியாக 1ஆம் இடத்தைப்பெற்று யாழ்.பல்கலைக்கழகம் உதைபந்தாட்டத்தில் தமக்கென முத்திரை பதிக்கத்தொடங்கி இன்றுவரை பங்குபற்றிய அனைத்துப் போட்டிகளிலும் சிறந்த பெறுபேற்றினை வெளிக்காட்டியிருப்பது சுட்டிக்காட்டத்தக்கதாகும். எனினும் இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் காரணமாக சில வருடகாலங்கள் தெற்கிற்கு சென்று இப்போட்டிகளில் பங்குபற்ற முடியாமை கவலைக்குரிய விடயமாகும். மேலும், இனப்பிரச்சனை நடைபெற்றுக்கொண்டிருந்தவேளையிலும் வசதிவாய்ப்புக்கள் மிகவும் அரிதாகவே இருந்தவேளையிலும் யாழ்.பல்கலைக்கழக விளையாட்டுச் சமூகத்தின் உதவியுடன் மிகுந்த சிரமத்துக்கு மத்தியிலும் தெற்குக்குச் சென்று 1ஆம் இடத்தைப் பெற்றமை எம் பலத்தைப் பறைசாற்றிநிற்கின்றது. இறுதிக்கட்டயுத்தம் காரணமாக 2006-2008 காலப்பகுதியில் எந்தவொரு போட்டிகளிலும் பங்குபெறமுடியாத சூழ்நிலையிலும் அதற்குப்பின்னர் இடம்பெற்ற ஐந்துபோட்டிகளில் மூன்றுபோட்டிகளில் 1ஆம் இடத்தினையும் ஏனைய இரண்டில் 1ஆம் மற்றும் 3ஆம் இடத்தையும் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

UniFBPlaces

இவ்வாண்டினை எடுத்துநோக்குமிடத்து பாடுமீன் கழகத்தின் 50ஆம் ஆண்டின் நிறைவாக வடமாகாணமட்டத்தில் 60 கழகங்களுக்கு இடையில் ஒழுங்குசெய்யப்பட்டு நடாத்தப்பட்ட சுற்றுப்போட்டியில் யாழ்.பல்கலைக்கழகமானது 1ஆம் இடத்தைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான விளையாட்டுப்போட்டிகளில் தமது சிறப்பான பெறுபேற்றினை வெளிப்படுத்துவர் என்பது அனைவருடையதும் எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது.

– தொகுப்பு: சிகோ –