இயந்திர வாழ்க்கை

அந்தக்காலத்து மனிதன் இயற்கையுடன் ஒன்றி மிகவும் ஆரோக்கியமாக வாழ்ந்திருக்கிறான். அன்றைய மருத்துவ முறைகள் மனிதனை ஆரோக்கியமானவனாக வாழ்வதற்கு உதவியிருக்கின்றன. ஆனால் இன்று உலக நடைமுறைகள் இயந்திரமயமாக்கப்படுவதால் மனிதன் நோயாளி ஆகிக்கொண்டிருக்கிறான். இயந்திரங்கள் மனிதனை நோயாளியாக்குகின்றன. புதிய மருத்துவ முறைகளால்கூட ஒன்றும் செய்ய முடியாதுள்ளது.

உலகம் இயந்திரமயமாகி சுதந்திரங்கள் பறிபோய் பூமிக்காற்றுப் புகையாகி, புழுதிமண்டலமாகி, ஓசோன் படலத்தில் ஓட்டை விழுந்து, பூமியைக் கதிர்வீச்சுக்கள் தாக்க, இலட்சக்கணக்கான பச்சை மரங்கள் வெட்டிச் சாய்க்கப்பட்டு, பாவப்பட்ட இந்த மண் பாலைவனமாகிக்கொண்டிருக்கிறது. இயற்கையான இனிய கனிகளுக்குக்கூட இரசாயனம் தெளிக்கப்பட்டுப் பகட்டான நச்சுக் கனிகள் ஆக்கப்பட மனிதன் நோய்வாய்ப்பட்டுக்கொண்டிருக்கிறான்.

இதன் மறுபுறத்தைப் பார்த்தால் பண்டைய காலம் போல் நாம் பழையபடி காட்டுக்குப் போய் வேட்டையாட முடியுமா? எந்தக் காட்டுக்குப் போவது? எதனை வேட்டையாடுவது? இயந்திரங்கள் அனைத்தையும் இல்லை என்று அழித்துவிட்டு மின்சாரமின்றி, வாகனங்களின்றி, தொலைபேசியின்றி, பேனா, பென்சில், பேப்பர், புத்தகங்கள் எதுவுமின்றி மருத்துவத் தொழில்நுட்பமும் விவசாய விஞ்ஞானமும் இலத்திரனியல் சாதனங்களும் இன்றி, வகை தெகையின்றிப் பெருகிநிற்கும் இந்த மனுக்குலத்தைப் பராமரிப்பது எப்படி? விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சியினூடே எமது சுகத்தையும் கட்டிவளர்ப்பது எப்படி என்றுதான் நாம் சிந்திக்க வேண்டும். இயந்திரங்களால் சூழல் மாசடைவதையும், மனிதன் நோய்வாய்ப்படுவதையும் குறைக்க என்ன செய்யவேண்டும் என்று சிந்திக்க வேண்டும். இதற்கு எம் எல்லோரினதும் ஒன்றுபட்ட முயற்சி தேவை.

விஞ்ஞான வளர்ச்சியினால் மனிதன் சராசரியாக வாழும் வயதெல்லை அதிகரித்திருக்கிறது. கற்கை, கற்பித்தல் செயற்பாடுகளில் புரட்சிகர மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. தகவல் பரிமாற்றத்தில் ஏற்பட்ட பாரிய வளர்ச்சியினால் உலகம் ஒரு குடும்பம் போல நெருங்கி வந்திருக்கின்றது. இந்த நல்ல மாற்றங்களை எமது சுகாதார மேம்பாட்டுக்குப் பயன்படுத்திக்கொள்வோம்.

 

சி.சிவன்சுதன்
வைத்திய நிபுணர்
யாழ். போதனா வைத்தியசாலை