தொலைக்காட்சி நாடகங்களின் தாக்கம்

இன்றைய உலகு விஞ்ஞான உலகு. புதிது புதிது என நவீனமயமான உலகு. எங்கும் வளர்ச்சி, எதிலும் புதுமை. இத்தகைய இருபத்தியோராம் நூற்றாண்டிலே தொழில்நுட்ப சாதனங்களின் வளர்ச்சியும் போற்றுதற்குரியதே. தொழில்நுட்ப வளர்ச்சி மூலமாக தொடர்புசாதனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது. அவற்றுள் வானொலி, தொலைக்காட்சி, தொலைபேசி, இணையம், உலக வலைப்பின்னல் என்பன முதலிடம் வகிக்கின்றன. இவற்றில் விஷேட விதமாக தொலைக்காட்சியானது ஒலி, ஒளி இரண்டும் ஒருசேர கண்களுக்கும் செவிகளுக்கும் விருந்தளிக்கின்றது.

தெலைக்காட்சியில் பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றபொழுதிலும் தொலைக்காட்சி நாடகங்களின் தாக்கம் இன்று உலகளாவிய ரீதியில் பேசப்படும் விடயங்களில் ஒன்றாகும். இத்தகைய தொலைக்காட்சி நாடகங்கள் பல்வேறு நன்மைகளை அளிக்கின்றபோதிலும் அதில் தீமைகளும் நிறைந்தே உள்ளன.

அந்த வகையில் இன்று ஒளிபரப்பப்படும் தொலைக்காட்சி நாடகங்களினால் சமூகத்திற்குக் கிடைக்கின்ற நன்மைகளை எடுத்துநோக்குவோமெனின், பலர் தமது ஓய்வு நேரத்தைக் கழிக்க  அவற்றைப் பார்க்கின்றனர். பெரும்பான்மையாக இத்தகைய தொலைக்காட்சி நாடகங்களை இன்று சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் ஒன்றாகக்கூடியிருந்து பார்த்து இரசிக்கின்றனர். இன்று மாறிவரும் இந்த நவீன உலகில் குடும்பமாக ஒன்றாகக்கூடி உணவருந்தக்கூட முடியாத மனிதன் இத்தகைய சந்தர்ப்பங்களிலேனும் குடும்ப ஒற்றுமையை வலுப்படுத்த முன்வருகின்றமை மகிழ்ச்சிக்குரிய விடயமே.

பலரும் தமது பொழுதுபோக்குக்காக இந்நாடகங்களைப் பார்ப்பதால் அந்நேரம் புத்துணா்ச்சியும், மனநிம்மதியும் கிடைக்கின்றது. பிள்ளைகளைப் பாடசாலைக்கும், கணவன்மார்களை அலுவலகத்திற்கும் அனுப்பிவைத்துவிட்டு தனிமையிலே தனது வேலைகளில் ஈடுபடும் இல்லத்தரசிகளுக்கு இந்நாடகங்கள் ஓர் துணையாகவும், தனிமையைப்போக்கும் வழியாகவும் விளங்குகின்றன.

மேலும் இந்நாடகங்களைப் பார்ப்பதன் மூலம் கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறைகள், பாரம்பரிய கலாசார முறைகள் போன்ற இன்னும் பல நல் ஒழுக்கங்களைக் கற்றுக்கொள்ள முடிகின்றது.

இவ்வாறு சின்னத்திரை நாடகங்களினால் பல நன்மைகள் உள்ள போதும் தீமைகளே அதிகம் காணப்படுகின்றன. அவற்றை எடுத்துநோக்குவோமெனின், சின்னத்திரை நாடகங்களில் அதிக நேரத்தை செலவிடுவதன் மூலம் கண்கள் பாதிப்புக்குள்ளாகின்றன. அக்காட்சிகளிலே ஒளிபரப்படும் புகைத்தல், குடிவெறி, கலாசார சீர்கேடுகள் என்பவற்றின் காரணமாகத் தூண்டப்படும் இளைஞர் சமூகம் இன்று பாரியளவிலான வீழ்ச்சியை சந்தித்துக்கொண்டிருக்கின்றது. நாட்டின் பெரும் தூண்களான இளைஞர்கள் பாதிக்கப்படுவார்களாயின் நாளைய சமுதாயம் முன்னேற்றம் காண்பது எப்படி?

இன்று எல்லோரும் கூடியிருந்து சின்னத்திரை நாடகங்களில் மூழ்கியிருப்பதனால் ஆன்மீக காரியங்களில் ஈடுபட நேரம் ஒதுக்க முடிவதில்லை. ஒரு அன்னையானவள் தன் பிள்ளைகளை அன்புடன் அரவணைக்கவோ, ஒரு தந்தையானவர் தன் குடும்பத்தினருடன் சந்தோஷமாகப் பேசிப் பழகவோ முடிவதில்லை. இதனால் பிஞ்சு உள்ளங்கள் மன உளைச்சலுக்கு ஆளாகுவதுடன், நோயாளர்களாகும் நிலைமைகள்கூட உருவாகியிருப்பதும் யாவரும் அறிந்ததே.

இவ்வாறு தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் நாடகங்களினால் கிடைக்கும் நன்மைகளைவிட தீமைகளே அதிகமாகக் காணப்படுகின்றன. எனவே இவற்றிற்கு செலவிடும் நேரத்தைக் குறைப்பதுடன் நீர் கலந்த பாலிலிருந்து பாலை மட்டும் பிரித்தெடுக்கும் அன்னப்பறவையைப் போல் சின்னத்திரை நாடகங்களினால் கிடைக்கும் நன்மைகளை மட்டும் கற்றுக்கொண்டு தீமையான விடயங்களை விலக்கிவிடுவது சாலச்சிறந்தது.

– ம. ரொஷீன்