அடிமையாகவே அழிந்து போவதா? – Dr.சி.சிவன்சுதன்

புகைக்கும் குடிக்கும் அடிமையானோம்
பொல்லாத போதைக்கு அடிமையானோம்
இயற்கை உணவுகளை வெறுத்தொதுக்கி
இரசாயன உணவுகளுக்கு அடிமையானோம்

சோற்றுக்கும் புட்டுக்கும் அடிமையானோம்
சொட்டும் பகட்டுக்கும் அடிமையானோம்
செந்தமிழ் உணா்வுகளை மிதித்து நிற்கும்
செருப்புக்கு செருப்பாகி அடிமையானோம்

இனிக்கும் உணவுக்கு அடிமையானோம்
“இன்னா செய்தாா்க்கும்” அடிமையானோம்
தொலையாத தொல்லையாய் தொடா்ந்துவரும்
தொலைக்காட்சித் தொடா்களுக்கும் அடிமையானோம்

அஞ்சிற்கும் பத்திற்கும் அடிமையானோம்
வஞ்சகா் புத்திக்கும் அடிமையானோம்
கஞ்சி, பால், முட்டையில் சலிப்படைந்து
சத்துமா பேணிகளுக்கு அடிமையானோம்

உயிா்குடிக்கும் சோடாவுக்கு அடிமையானோம்
உழைக்காமல் உட்காா்ந்து அடிமையானோம்
தலைநிமிா்ந்து தன்மானம் காத்தநாமே
தலையாட்டித் தலையாட்டி அடிமையானோம்

அடிமைத்தளைகள் அவிழ்படட்டும்
அடக்க நினைப்பவை அறுபடட்டும்
தூக்கம் மறந்து துயா் குடிக்கும்
துயர வரலாறு துடைபடட்டும்.

சி.சிவன்சுதன்
வைத்திய நிபுணர்
யாழ். போதனா வைத்தியசாலை