தாய்ப்பாலூட்டல் – வாழ்விற்கான ஒரு வெற்றி தரும் இலக்கு – Dr.ந.ஸ்ரீசரபவணபவானந்தன்

உலக தாய்ப்பாலூட்டும் வாரம் ஆவணி 1-7, 2014

World Brest Feeding week 2014 – Aug 1-7
Brest Feeding : A winning Goal For LIFE

தாய்ப்பாலூட்டலின் முக்கியத்துவம் கருதி இந்த வருடமும் ஆவணி 1ம் திகதி தொடக்கம் 7ம் திகதி வரை உலக தாய்ப்பாலூட்டல் வாரம் அனுஷ்டிக்கப்படுகின்றது. இந்த வருடத்தின் தொனிப்பொருள் பின்வருமாறு அமைகின்றது. “தாய்ப்பாலூட்டல் வாழ்விற்கான ஒரு வெற்றி தரும் இலக்கு” ஒவ்வொரு குழந்தைக்கும் தாய்ப்பாலூட்டலை பிறந்ததிலிருந்து வெற்றிகரமாக வழங்கும் போது, சுகதேகியான ஒரு குழந்தையை ஒரு குடும்பம் பெற்றுக்கொள்ளும். அதன் மூலம் வாழ்வு வளமடையும் என்பதே இத்தொனிப்பொருளின் கருத்தாகும். எனவே தாய்ப்பாலூட்டலை ஊக்கிவிப்பதற்காகவும், அதனை இடையூறின்றி ஒரு தாய் தன் குழந்தைக்கு குறைந்தது இரு வருடம் வரை வழங்க உதவவேண்டும் என்பதற்காகவும், மக்களிடையே தாய்ப்பாலூட்டலின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் உலக தாய்ப்பாலூட்டல் வாரம் ஒவ்வொரு வருடமும் ஆவணி 1 -7 ம்திகதி வரை கொண்டாடப்படுகின்றது.

ஐக்கிய நாடுகள் சபையினால் 1990ம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட மில்லேனியம் அபிவிருத்தி இலக்குகளில் ஒன்றான ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு வீதத்தை 1990ஆம் ஆண்டில் காணப்பட்டதை விட கால்வாசியாக 2015 ஆம் ஆண்டளவில் குறைப்பதற்கு உலகளாவிய ரீதியில் தாய்ப்பாலூட்டலை ஊக்கிவித்தலும் முக்கியமாக அமைகிறது. குழந்தைக்கு முதல் 6 மாதம் வரைக்கும் தனித்தாய்ப்பாலூட்டலும், அதன் பின்னர் தாய்ப்பாலை தொடர்ந்து கொண்டே சரியான முறையில் மிகை நிரப்பு ஆகாரமூட்டலும் ( Complementing Feeding) அக்குழந்தையின் நல்வாழ்வுக்கு இன்றியமையாதவையாகும். எனவே தான் நாம் தாய்ப்பாலூட்டலை ஊக்குவிப்பதற்கும், தாய்ப்பாலூட்டல் முறையை பாதுகாக்கவும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். அதற்காக தாய்ப்பாலூட்டலின் நன்மைகள் பற்றி நாம் அறிந்திருக்க வேண்டும்.

தாய்பாலூட்டலினால் குழந்தைக்கு கிடைக்கும் நன்மைகள்

1. தாய்ப்பாலானது குழந்தைக்கு ஏற்ற (குறைமாதமாயினும், நோயுற்றவராயினும்) அனைத்து வகை சத்துக்களும் அடங்கிய இலகுவில் சமிபாடடையகூடிய பூரண உணவு என விஞ்ஞான ரீதியில் நீரூபிக்கப்பட்டுள்ளது.
2. குழந்தையினுடைய உணர்வுகளையும், உளநலத்தையும் தாய்பாலூட்டல் பூர்த்திசெய்யும் உதாரணமாக குறைமாத குழந்தைகளை எடுத்தால் தாய்ப்பாலூட்டலை பெறாத குழந்தைகள் அதிகமாக இறக்கிறார்கள்.
3. தாய்க்கும் குழந்தைக்குமிடையேயான பாசப்பிணைப்பும் அன்பும் தாய்ப்பாலூட்டும் போது அதிகரிக்கும்.
4. தாய்ப்பாலில் கிருமித் தொற்றுக்கான எதிர்ப்பு சத்திகள் அதிகமாக உள்ளன. இந்த எதிப்பு சக்திகள் மாப்பாலில் காணப்படுவதில்லை. எனவே தாய்பாலிருந்தும் குழந்தைகளுக்கு சளிக்காய்ச்சல், வயிற்றோட்டம், காதினூள்ளே கிருமிதொற்று போன்றவை ஏற்படும் வாய்ப்பு, மாப்பால் அருந்தும் குழந்தைகளைவிட மிக குறைவாக உள்ளது.
5. தாய்ப்பாலருந்திய குழந்தைகளின் மூளைவளர்ச்சியும், IQவும் மாப்பாலருந்திய குழந்தைகளைவிட அதிகமாகும்.
6. தாய்பாலருந்திய குழந்தைகளுக்கு பிற்காலத்தில் ஒவ்வாமை நோய்களான எக்சிமா, அஸ்சமா (இழப்பு) போன்றவை ஏற்படுவது குறைவடையும்.
7. மாப்பாலருந்திய குழந்தைகளை விட தாய்ப்பால் அருந்திய குழந்தைகளுக்கு அதிகநிறை (Obesitg) உயர் குருதி அமுக்கம் ( High Blood presure) சலரோகம் போன்ற நாட்பட்ட நோய்கள் பிற்காலத்தில் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவு என ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

தாய்பாலூட்டலினால் தாய்க்கு கிடைக்கும் நன்மைகள்

1. தாய்ப்பாலூட்டலை நீண்டகாலம் மேற்கொண்ட ஒரு தாய்க்கு மார்பக புற்றுநோய்கள் ஏற்படாது.
2. அதேபோல் தாய்பாலை அருந்திய பெண் குழந்தைகளுக்கும் பிற்காலத்திலத்தில் மார்பகப் புற்று நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு மாப்பாலருந்திய பெண்குழந்தைகளை விட மிககுறைவாகும்.
3. தாய்ப்பாலூட்டலை மேற்கொள்ளும் தாய் அதிக நிறையுடையவராயின் அவரின் நிறையை குறைக்க தாய்ப்பாலுட்டல் வழிவகுக்கும். அதேபோல் தாய்ப்பாலூட்டலை தொடங்கும் போது மீண்டும் கர்ப்பமடைவதற்கா வாய்ப்பு குறைவு என்பதால் தாய்ப்பாலூட்டல் ஒரு இயற்கையான கர்ப்பதடைமுறையாக அமைகின்றது.

தாய்ப்பாலூட்டலினால் குடும்பத்திற்கு கிடைக்கும் நன்மைகள்

1. தாய்பாலை பணம் கொடுத்து வாங்க வேண்டியதில்லை மாப்பாலிற்காகவும் பாத்திரங்களுக்காவும் பணம் செலவழிக்க வேண்டியதில்லை.
2. தாய்பாலருந்தும் குழந்தை சுகதேகியாக வளர்வதால் வைத்தியத்திற்காகவும் பணம் செலவழிக்க தேவையுமில்லை அனாவசியமாக வைத்தியசாலைக்கு அலையவும் வேண்டியதுமில்லை.
3. எனவே குடும்பத்திற்கு மகிழ்ச்சியும் சுகவாழ்வும் கிடைக்கும்.
மேற்குறிப்பிட்டன போன்ற இன்னும் பல நன்மைகள் தாய்பாலூட்டலினால் கிடைப்பதினால் இப்போது உலகலாவிய ரீதியில் தாய்ப்பாலூட்டலை பலரும் சிபாரிசு செய்கின்றார்கள். பல வளர்ச்சியடைந்த நாடுகளிலும் இப்போது தாய்ப்பாலுட்டலை ஊக்கிவிப்பதற்க்கான பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகள் நடைபெறுகின்றன. தாய்ப்பாலூட்டலை பாதுகாப்பதற்காக பல சட்டங்களும் உள்ளன.
இலங்கையிலும் குடும்ப சுகாதார பணியகமானது பலவழிகளிலும் தாய்ப்பாலூட்டலை ஊக்கிவிக்கின்றது. சுகாதார ஊழியர்களுக்கு பல்வேறு பயிற்சிகளையும் குழந்தைப்பேறு நடைபெறும் வைத்தியசாலைகளில் தாய்பாலூட்டல் முகாமைத்துவ அலகுகளையும் (Lactation Management Centre) நிறுவி வருகின்றது. இந்த வகையில் யாழ் போதனா வைத்தியசாலையிலும் தாய்ப்பாலூட்டல் சம்பந்தமான பிரச்சினைகளை தீர்க்க தாய்பாலூட்டல் முகாமைத்துவ அலகு உள்ளது. தாய்ப்பாலூட்டல் சம்பந்தப்பட்ட பிரச்சினை உள்ள தாய்மார்கள் அப்பிரிவுக்கு நேரடியாகவோ அல்லது தொலைபேசி மூலமாகவோ ( தொலைபேசி. இலக்கம் 021 222 2661 ext – 338/309) பகல் வேளைகளில் தொடர்பு கொள்ளலாம். மேலும் இந்த தாய்ப்பாலூட்டல் வாரத்தில் தாய்ப்பாலூட்டலை ஊக்கிவிப்பதற்கும், பாதுகாக்கவும் முயற்சிக்க வேண்டும்.

Dr. ந.ஸ்ரீசரபவணபவானந்தன்
குழந்தை நலவைத்திய நிபுணர்
யாழ் போதனா வைத்தியசாலை