குழாய்க்கிணறுகளும் குழப்பங்களும் – சு. சரவணன்

அவசரமான உலகம் இது. குறைந்த நேரத்தில் அதிகளவிலான பலன்களைப் பெறுவதே நவீன மனிதர்களின் நோக்கம். அதற்கு துணைபோகும் அதி நவீன தொழில்நுட்பங்கள். அவை எம் தேவைகளைக் குறுகிய நேரத்தில் வினைத்திறனுடன் பூர்த்தி செய்யினும் அவை மறைமுகமாக எம்மால் மீளமுடியாத பாரிய பக்க விளைவுகளை ஏற்படுத்திநிற்பது யாரும் மறுக்கமுடியாத வெளிப்டை உண்மை. இதன் வெளிப்பாடுகளே இன்றைய பாரிய பூமி அனர்த்தங்கள், வெப்பமாகும் பூமி, மாற்ற முடியாத உயிர்கொல்லி நோய்கள் போன்றனவாகும்.

நீண்ட யுத்த அழிவுகளிலிருந்து மெல்ல மீண்டுவரும் எம்குடாநாடும் இந்த நவீன தொழில்நுட்பத் தொற்றலுக்கு ஆளாகாமல் தப்பவில்லை. நிலமட்ட வீடுகள் இன்று வானைத் தொடும் கோபுரங்களாக, மாடிகளாக, ஒரு வீடு இருந்த வளவினுள் 2 – 3 வீடுகள் அமைக்கப்படுகின்றன. இதுவரை சினிமா வழி பார்த்த நவீன நகரம் (Modern City) இன்று எம் கண்முன்னே உருவாகி வருகின்றது. பல பரப்பளவில் கட்டப்படும் வீடுகளும் கட்டடங்களும் இன்று சில குழி அளவிலான நிலங்களிலேயே கட்டப்படுகின்றது. இவற்றை தாங்கும் சக்தி எம் நிலத்திற்கு உள்ளதா என்ற கேள்வி இன்றும் கேள்விக்குறியாவே உள்ளது. இதற்கான தொழில்நுட்பம் மட்டும் ஏன் இன்னும் குடாநாட்டிற்கு வரவில்லையோ தெரியவில்லை.

இந்த இடநெருக்கடியால், நிலத்தடி நீர் வளத்தையே ஓர் நீர் மூலமாக நம்பியிருக்கும் எம் குடாநாடு தான் நீர் பெறும் வழிமுறைகளையும் மாற்றியமைக்கவேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதன் வெளிப்பாடே இன்று அதிகளவில் குடாநாட்டில் தோண்டப்படும் குழாய்க்கிணறுகள். ஆம், கையால் துளையிடுபவர்களாலும், பாரிய இயந்திரங்கள் மூலம் துளையிடுபவர்களாலும் எம் குடாநாடு அம்மணமாக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது என்பதே உண்மை. இதனைக் கட்டுப்படுத்தும் நடைமுறைகள் பெயரளவில் மட்டுமே திணைக்களங்களில் உள்ள நிலையில், நாளுக்கு நாள் அதிகளவான துளைகள் எம் பூமித்தாயின்மேல் போடப்பட்டுக்கொண்டுதான் உள்ளது.

உண்மையில் வெட்டுக்கிணற்றைவிட மிக விரைவாக அமைக்கக் கூடிய, குறுகிய இடத்தேவை கொண்ட குறைந்த செலவில் அமைக்கப் படக்கூடியவையே குழாய்க் கிணறுகள். இவை எம் வெற்றுக்கண்ணால் காணமுடியாதளவு எமக்கு ஏற்படுத்தும் பாரிய தீங்குகளை எம் மக்கள் அறிந்துகொள்வது மிக அவசியம்.

பின்வரும் இரு படங்கள் எம் குடாநாட்டின் நிலக்கீழ் நீர்ப்படைகள் எவ்வாறு அமைந்துள்ளன என்பதை பல ஆய்வின் பின் காணப்பட்ட தோற்றப்படாகும்.


பாறைகளின் இடையே பல படைகளாக காணப்படினும் இவை நீரியல் அழுத்தம் காரணமாக எம் நிலக்கீழ் நீர்ப்படையானது மேற்காட்டப்பட்டவாறு ஓர் வில்லை போன்றே உவர் நீரின் மேல் மிதந்தவண்ணம் காணப்படுகின்றது.

சாதாரண கிணறுகள் அமைக்கப்படும் பொழுது அவற்றில் நீர் எடுக்கும் அளவும் குறைவாகக் காணப்படுவதுடன் எடுக்கப்பட்ட நீர் மீள் நிரம்பல் அடைய வேண்டிய நேரம் கிடைக்கின்றது. ஆனால் குழாய்க் கிணறுகள் அமைக்கப்படும் பொழுது அவை நீர்த்தாங்கு படைகளில் பாரிய நீர்த்தளம்பலை ஏற்படுத்துகின்றன. அத்துடன் கனரக இயந்திரங்களைக் கொண்டு குழாய்க்கிணறுகள் அமைக்கப்படும்பொழுது நிலத்திற்குக் கீழான தரையமைப்பில் பாரிய மாற்றங்கள், வெடிப்புக்கள் ஏற்படுகின்றன. இதனால் நிலத்தடி ஓட்டம் தடைப்படுகின்றதோடல்லாமல் திசைமாறுகின்றது. இதனால் தொலைவில் உள்ள மலக்குழிகளோ கழிவுகளோ எம் நிலக்கீழ் நீரை தொற்றடையச்செய்ய அதிக வாய்ப்புக்கள் ஏற்படுத்தப்படுகின்றன.

இத்துடன் இவ்வாறு இயந்திரங்கள் கொண்டு அமைக்கப்படும் குழாய்க்கிணறுகள் அதிகளவு ஆழமாகவும் அதிக நீர் தள்ளும் சக்தி கொண்டவையாகவும் காணப்படுகின்றன. இதனால் அவை அதிகளவு நீரை எடுப்பதற்கு தூண்டுகின்றன. இதனால் மேற்காட்டப்பட்ட படத்தில் உள்ளவாறு உவர் நீரானது வேகமாக “மேல் எழும்பல்” “உட்புகுதல்” மூலம் எம் நன்னீர் படைகளை மாசாக்கத் தொடங்கிவிட்டன.

இதேபோன்று நன்னீர்க் கிணறுகளினுள் நீர் கொள்சக்தியை அதிகரிக்க எண்ணி ஆழமாகக் குழாய்க் கிணறுகளை அமைத்தலின் மூலம் மக்கள் நீரின் தரத்தில் பாரிய மாற்றங்களை அனுபவம் மூலம் நன்கு அறிந்திருப்பார்கள். அதே போல குழாய்க் கிணறுகள் மூலம் தொடங்கப்பட்ட நீர் விநியோகத் திட்டங்கள் ஆரம்பத்தில் நன்னீரை வழங்கிய போதும் இன்று அவை மாற்றமடைந்து நீரை விநியோகிப்பது நாம் எடுத்துரைத்த விடயங்களுக்கு சான்றுபகரும் உண்மைகளாகும்.

காலத்தின் தேவைக்காக குழாய்க்கிணறுகள் அமைக்கலாம். ஆயினும் அதற்குரிய தொழில்நுட்ப ஆலோசனைகளைப் பெற்று மேற்கொள்ளல் வேண்டும். ஆயினும் எம்மக்களுக்கு இத்தொழில்நுட்பம் கைக்கெட்டாத ஒன்றாகவே காணப்படுகின்றது. நிலத்தடி நீரை நாம் உரியமுறையில் பெற்றுக்கொள்ள நீர்ப் புவியியல் ஆலோசனை (Hydro Geological Survey) எனும் நுட்பம் மிக அவசியம். ஆயினும் உரிய தரப்பினரால் இதற்கான கட்டணங்கள் ரூபா.30,000.00 தொடக்கம் ரூபா.40,000.00 வரை அறவிடப்படுகின்றது.

அம்மணமாக்கப்பட்டுக்கொண்டிருக்கும் குடாநாட்டைக் காக்க உங்கள் பங்களிப்பு என்ன? உரிய திணைக்களங்கள் எம்மக்களுக்கு உரிய முறையில் பங்களிப்பைச் செய்யுமா? இன்றேல் எப்பயிரும் விளையும் எம் வளப்பூமி பாலைவனமாவது நிச்சயம். எம்மக்கள் மீண்டும் ஓர் பாரிய இடப்பெயர்வை நீருக்காக எதிர்கொள்ள வேண்டிய நிலையும் ஏற்படலாம். இதற்கான தீர்வுதான் யார் கையில்?

சு. சரவணன்
இரசயானவியலாளர்
தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச்சபை