பேரிடர்பாடுகளில் நீர் முகாமைத்துவம் – சு. சரவணன்

எம் யாழ்ப்பாணம் மூன்று பக்கமும் கடலால் சூழப்பட்ட மிகச் சிறிய நிலப்பரப்பாகும், அத்துடன் நிலப்பரப்பினூடே ஊடறுத்துச் செல்லும் பாரிய உவர் நீரேரிகளையும் கொண்டுள்ளது. இதன் ஒரே நீராதாரம் நிலத்தடி நீர் மட்டுமே. அனைத்து நீர்த் தேவைகளுக்கும் குடாநாடு இந்நிலத்தடி நீரையே நம்பியிருக்கவேண்டிய நிலைமை, இந்த நிலத்தடி நீரோ வருடத்தில் 2-3 மாதம் மட்டும் பொழியும் பருவ மழையை மட்டும் நம்பியிருக்கும் கட்டாயத்தில் உள்ளது. இவ்வாறு காணப்படும் இந்த மிகச் சிறிய வில்லை வடிவிலான நிலத்தின் கீழ் நீர் எதிர்நோக்கும், எதிர்கொள்ள உள்ள பிரச்சினைகளும் பற்பல. நிலத்தடி நீர் மாசாதல் ஆனது இரு வழிகளில் நிகழ்ந்தவண்ணம் உள்ளது. மனித செயற்பாடுகளிலும் இயற்கையாலும் இந்த செயல் நிகழ்கின்றது.

2

இதனைவிட இன்று உலகு எதிர்கொள்ளும் பூமி வெப்பமாதல் (Global Warming) என்னும் செயற்பாட்டினால் இன்று கடல்மட்டமானது மிகவேகமாக மேலெழும்பிவருகின்றது. இந்நிலையில் மூன்று பக்கமும் கடலால் சூழப்பட்ட மிகச்சிறிய நிலப்பரப்புக்கொண்ட எம் குடாநாடு இதன் பாதிப்புக்கு உள்ளாவதற்கு இன்னும் எவ்வளவு காலம் செல்லும்? இதில் முதல் பாதிப்பு நிச்சயமாக மிகச்சிறிய ஒரு வில்லையாக கடல்நீரில் மிதக்கும் எம் நன்னீர்ப் படைக்கே.

 

3இதன் பிரதிபலிப்புக்களே Tsunami, பெரும் வெள்ளப்பெருக்குகள் (nisha) போன்றவை. இவை எம்மக்களை மோசமாக உடனடியாகவும் நீண்டகால அடிப்படையிலும் பாதிக்கும் விடயங்கள் ஆகும். இந்த நீரானது இயற்கையின் சீற்றங்கள் ஏற்படும்பொழுது மிகமோசமாகப் பாதிப்படைகின்றது. அண்மையில் ஏற்பட்ட Tsunamiயினால் பல நன்னீர்க் கிணறுகள் கடல் நீரால் மாசக்கப்பட்டு இன்றுவரை அதன் பழைய தன்மையைப் பெறமுடியாது காணப்படுகின்றன.

4அதே போல Nisha புயலின் போது பெய்த கடும் மழை வெள்ளத்தில் பல கிணறுகள் மூழ்கடிக்கப்பட்டன. அதனால் பல கிணறுகள் மிக மோசமான முறையில் மாசாக்கப்பட்டன. இதன்போது குடாநாடு முழுவதுமே மிக மோசமாக குடிநீர் மாசாக்கத்துக்குள்ளானது.

அதேவேளை எம் மனித செயற்பாடானது மிக மோசமாகவும் வேகமாகவும் எம் நிலத்தடி நீரை எம் குடிநீரை பாதித்தவண்ணம் உள்ளது. பல வழிகளில் இது நிகழ்கின்றபோதும் நாம் குறிப்பாக சில விடயங்களை இங்கே ஆராயவேண்டியுள்ளது. இவை அனேகமாக உடனடி பாதிப்பை மக்கள் உணரக்கூடிய வகையில் காட்டாத போதிலும் சமுதாயக் கட்டமைப்பையே மாற்றம்கொள்ளவல்ல பேரிடர்களாகும்.

 

மலசல கூடங்கள்

6குடாநாட்டில் பாவனையில் உள்ள மலசலகூடங்களில் 80% ஆனவை சாதாரண மலக்குழிகள் ஆகும். அத்துடன் அவையும் 15 – 20 வருடம் பழமையானவையே அதிகம். இவற்றின் அடிப்பகுதி சீமெந்து இடப்படாமல் திறந்த நிலையில் காணப்படுவதுடன் அவை நிலத்தடி நீரை மலத்தொற்றுள்ள நீரில் இருந்து பாதுகாக்கக்கூடியதாக இருப்பதில்லை. அன்றைய காலங்களில் இவை பயன்படுத்தும் பொழுது பயன்படுத்திய நீரின் அளவு மிகக் குறைவு. காரணம் அன்று squatting pan உடன் வாளி மூலம் நீர் பயன்படுத்தப்பட்டது. ஆனால் இன்று மலக்குழிகளில் எந்த மாற்றமும் செய்யப்படாமல் அவை Commode ஆக 7மாற்றப்பட்டுவருகின்றது. இவை Cistern tankஇல் உள்ள நீர் மூலம் கழுவப்படுகின்றது. அத்துடன் ஒவ்வொரு முறையும் சிறுநீர் கழித்தபின்னும் கூட Cistern tank இல் உள்ள நீர் மூலம் முழுமையாக கழுவப்படுகின்றது. இதன் மூலம் அதிகளவு நீர் மலக்குழிகளினுள் செல்கின்றது. இதனால் நிலத்தடி நீரானது மிக அதிகளவில் இந்நீரால் தொற்றுக்கு ஆளாகும் சந்தர்ப்பம் ஏற்படுகின்றது. இதனாலேயே எம் நில நீர் மிகமோசமாக மலத்தொற்றினால் பாதிக்கப்பட்டு இருக்கின்றது. புதியதாக மலசலகூடம் கட்டும் உரிமையாளர்களும் தற்பொழுது குடாநாட்டிற்கென சிபாரிசு செய்யப்பட்டுள்ள Septic tank, Soakage pit முறையை கடைப்பிடிப்பதில்லை. இதனால் எம் நிலத்தடி நீர் மிகமோசமாக பாதிக்கபட்டுவருகின்றது என்பதை எம் மக்கள் ஏன் கவனத்தில் கொள்ளவில்லை?

 

விவசாய இரசாயனப் பொருட்கள்

8போட்டி வியாபாரம், அதிக விளைச்சல், விளைபொருளின் தரம் என்பவற்றைக் கருத்திற்கொண்டு இன்று விவசாயிகள் அதிகம் நாடுவது செயற்கை உரத்தையே. இந்த செயற்கை உரங்கள் இயற்கைப்பசளைகளை விட மிகச்செறிவாக மூலகங்களைக்கொண்டுள்ளன. இதனால் சாதாரணமாக நிகழும் இயற்கை வட்டங்கள் மூலம் இவை அகற்றப்பட அதிக நாட்கள் எடுக்கும். அத்துடன் விவசாயிகள் இடும் உரத்தில் ஒரு சிறிய பகுதியே பயிர்களுக்கு பயன்படுத்தப்படுகின்றது. இதனால் இவை பல்வேறு கட்டங்களில் மனிதனைத் தாக்கும் அபாயம் உள்ளது. அத்துடன் இந்த செயற்கை உரங்கள் பயன்படுத்தும் பொழுது மிக அதிகளவிலான நீர் பாய்ச்சவேண்டிய கட்டாயமும் ஏற்படுகின்றது. இல்லையேல் இந்த செயற்கை உரத்தின் செறிவினால் பயிர்கள் புறப்பிரசாரணம் (Osmosis) மூலம் எரிந்துவிடும் அபாயமும் உள்ளது. இந்த செயற்கை உரப்பாவனையால் நேரடியாக ஏற்படும் பாதிப்புடன் இந்தப்பயிருக்குத் தேவையான நீரைவிட மிக அதிகளவிலான நீர் பயன்படுத்துவதால் எம் நீர் மாசாக்கத்திற்கு காரணமாக அமைகின்றது.

அவ்வாறு பயன்படுத்தும் நீரானது ஒரு பகுதி ஆவியாதல் மூலம் வளிமண்டலத்திற்கும் இன்னொரு பகுதி மீண்டும் நிலத்தடி நீரையும் அடைகின்றது. இவ்வாறு மீண்டும் நிலத்தடி நீரை அடையும் நீரே இந்த இரசாயனப் பொருட்களைக் கழுவிக்கொண்டு நிலத்தடி நீரை வந்தடைகின்றது. செயற்கை உரத்தில் காணப்படும் NO3, PO43-, NH4+ போன்ற உப்புக்கள் நீரில் அதிக செறிவில் காணப்படுகின்றமை இதனை நிரூபிக்க போதுமானதாக உள்ளது. அத்துடன் விவசாயிகள் பயன்படுத்தும் பீடை நாசினிகள், கிருமி நாசினிகள் என்பன நீரை மாசாக்கியவண்ணம் உள்ளது. இவை மனிதனுக்கு உடனடி, நீண்ட கால பாதிப்புக்களை ஏற்படுத்தக்கூடியவையாகும். அத்துடன் செயற்கை உரத்தில் காணப்படும் இரசாயனப்பொருட்கள் புற்றுநோயைத் தூண்டக்கூடியதாகவும் உள்ளது.

மேற்படி இரு விடயங்களிலும் எம் நன்னீரானது மாசடைதலைவிட கடல் நீராலும் எம் மனித செயற்பாட்டாலும் இயற்கையாலும் பாதிப்பக்குள்ளாகிவருகின்றது. நிலத்தடி நன்னீரானது மிக அதிகளவில் வெளியெற்றப்படும்போது அவை நன்னீரால் மீள்நிரப்பலுக்கு உள்ளாக முடியாத நிலையில் கடல் நீரானது எம் நன்னீர் படுக்கையினுள் உட்புகுகின்றது. இதனால் எம் நன்னீரானது உவர் நீராக மாற்றமடையத்தொடங்கியுள்ளது. இது இருவகையில் நடைபெற்றவண்ணம் உள்ளது.
1. கடல் நீர் உட்புகுதல் (intrusion)
2. கடல் நீர் மேலெழுதல் (up coning)

9எம் நன்னீர் படுக்கையானது ஒரு மிக மெல்லிய வில்லை வடிவாக கடல் நீரில் மிதந்த வண்ணம் காணப்படுகின்றது. இந்த வில்லையின் கரைப்பகுதியில் நீரானது அதிகளவில் எடுக்கப்படும் பொழுது மிக இலகுவாக கடல் நீரானது உட்புகுந்து விடுகின்றது. அத்துடன் நடுப்பகுதியில் நீரானது அதிகளவில் எடுக்கும் சந்தர்ப்பத்தில் கடல் நீர் மேலெழும்பி எம் நன்னீரை தொற்றடையச் செய்யும் சாத்தியம் காணப்படுகின்றது.

 

10அத்துடன் இன்று குடாநாட்டில் இடப்பற்றாக்குறை, சாதாரண கிணறு அமைக்க எடுக்கும் காலம், பணம் என்பவற்றைக் கருத்தில்கொண்டு எம்மக்கள் குழாய்க்கிணறுகளை அதிகளவில் அமைக்க ஆரம்பித்துள்ளார்கள். அத்துடன் இந்தக் குழாய்கள் மிக ஆழமானவையாகக் காணப்படுகின்றன. இந்த குழாய்க் கிணற்றில் இருந்து நீரானது எடுக்கப்படும் சந்தர்ப்பங்களில் கடல் நீரானது உட்புகுதல் இரு வழிகளிலும் நிகழ அதிக சந்தர்ப்பங்கள் உள்ளது. மேற்கூறப்பட்ட இயற்கைச் சீற்றங்களின் போதும், யுத்த காலங்களின் போதும் எம்மக்களுக்கு மிகவும் பரீட்சையமான இடம்பெயர்வுகள், முகாம் வாழ்கை, தற்காலிக இருப்பிடங்கள் என்பனவற்றை எம் மக்கள் எதிர்கொள்ளவேண்டியுள்ளது. இந்நிலையில் நீர் வழங்கல் சுகாதாரம் தொடர்பில் தேசிய ரீதியில் மிக முக்கிய நிறுவனம் என்ற வகையில் இத்தகைய பேரிடர்களின் போது நீர் வழங்கல் சம்பந்தமான மேற்கொள்ளப்படவேண்டிய நடைமுறைகள் மக்களின் உரிமைகளை பற்றி இங்கு எடுத்துக்கூறல் மிகவும் பொருத்தமாக இருக்கும்.

ஒவ்வொரு மனிதனும் சுத்தமானதும் சுகாதாரமுமான நீரைப் பெற்றுக்கொள்ள முழு உரிமையும் கடமையுமுள்ளவர்களாவர். இந்த உரிமையானது சர்வதேச சட்டங்களிலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இச்சட்டங்களானவை போதுமான பாதுகாப்பான ஏற்றுக்கொள்ளப்பட முடிகின்ற மற்றும் தனி நபர்களின் சொந்த மற்றும் குடும்பத்தேவைக்கான மட்டிலான தண்ணீருக்கு வழிவகை செய்யும் உரிமையை உணர்த்துகின்றது. இது மனிதன் உயிர் வாழ்வதற்கான அவசியத்திற்கு அளிக்கப்படும் உத்தரவாதங்களில் ஒன்றாகும். இதனைப் பூர்த்தி செய்யும் பொறுப்பு அரச, அரச சார்பற்ற சகலருடைய பொறுப்பாகும்.

பேரிடர் ஆரம்ப கட்டங்களில் தண்ணீரும் சுகாதாரமும் உயிர் வாழ்வதற்கு முக்கியமான அளவில் தீர்மானகரமானவையாக இருத்ததல்வேண்டும். பேரிடர்களினால் பாதிக்கப்பட்ட மக்கள் பொதுவாக நோயினால் மரணமடைவதற்கும் உடல் நிலை மோசமடைவதற்கும் ஏற்றவகையில் பலவீனமாவர்களாகவே உள்ளனர். இதற்குக் காரணம் போதுமான சுகாதாரமின்மை, போதுமான தண்ணீர் வழங்கல் இல்லாமை மற்றும் மோசமான தூய்மையின்மை ஆகியவையாகும். இந்நோய்களில் மிகமுக்கியமானவை வாய் மற்றும் மலம் மூலமாக பரவும் வயிற்றுப்போக்கு போன்ற தொற்று நோய்களாகும். பிற நீர் மற்றும் சுகாதாரம் தொடர்பான நோய்களில் திண்மக்கழிவு மற்றும் தண்ணீருடன் தொடர்புடைய கிருமிகளின் மூலமாகப் பரவும் நோய்களும் அடங்கும்.

பேரிடர்களில் நீர் வழங்கல் மற்றும் சுகாதார திட்டங்களில் முக்கிய நோக்கமே மலம் மற்றும் வாய் மூலமாகப் பரவும் நோய்களைக் குறைப்பது, நல்ல தூய்மையான நடைமுறைகளை மேம்படுத்தவதன் மூலமாக நோய்களைச் சுமந்துவரும் கிருமிகளைப் பற்றி அறிவூட்டல் பாதுகாப்பான குடிநீர் வழங்குவது மற்றும் நல ஆரோக்கியத்தடனும் கண்ணியத்துடனும், பாதுகாப்பு மற்றும் வசதிகளுடனும் மக்கள் வாழ்வதற்கான நிலைமைகளை உருவாக்குவது ஆகும்.

பெரும்பாலான பேரிடர் சூழ்நிலைமைகளில் நீர் கொண்டுவரும் பொறுப்பானது பெண்கள் மற்றும் குழந்தைகளின் மீதே சுமத்தப்படுகின்றது. சமூகத்தில் நீர் மற்றும் சுகாதார வசதிகளைப் பயன்படுத்தும்போது, உதாரணமாக இடம்பெயர்ந்த மக்கள் உள்ள சூழ்நிலையில் பெண்கள் மற்றும் வளர் இளம் பெண்கள் பாலியல் வன்முறைக்கும் சுரண்டலுக்கும் உட்படக்கூடிய பலவீனமான நிலையிலிருப்பர். இந்த அபாயங்களைக் குறைக்கவும் தரமான பேரிடர் எதிர்கொள்ளல் நடவடிக்கையை மேற்கொள்ளவும் நீர் வழங்கலிலும் சுகாதாரத் திட்டங்களிலும் எங்கெல்லாம் முடிகிறதோ அங்கு பெண்களின் பங்கேற்பை ஊக்குவிக்கவேண்டும். திட்டமிடுவதிலும், முடிவு எடுப்பதிலும் மற்றும் உள்ளுர் மேலாண்மையிலும் பெண்களும் ஆண்களும் சமமாக பங்கேற்பது ஒட்டுமொத்த பாதிக்கப்பட்ட மக்களும் பாதுகாப்பான மற்றும் எழிமையாக பெறக்கூடிய நீர் வழங்கலையும் சுகாதார சேவைகளையும் உறுதி செய்வதற்கு உதவும். இச்சேவைகள் சமமாகவும் தகுந்ததாகவும் அமைவதை உறுதிப்படுத்தவும் உதவும்.

நீர் என்பது வாழ்கைக்கும் நலத்திற்கும் மனித கண்ணியத்திற்கும் அவசியமானதாகும், மோசமான சூழ் நிலைகளில் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய இயலாத அளவில் போதுமான நீர் கிடைக்காமல் இருக்கலாம். இவ்வாறான சமயங்களில் உயிர் வாழ்வதற்கான தேவையான பாதுகாப்பான குடிநீர் வழுங்குவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். பொரும்பாலான சமயங்களில் முக்கியமான நலப் பிரச்சினைகளுக்கு காரணம் போதுமான நீர் கிடைக்காமையும் தூய்மையற்றிருப்பதுமாகும் அசுத்தமான தண்ணீரை அருந்துவதும் ஆகும்.

அனைத்து மக்களும் பாதுகாப்பான சமமான அளவில் குடிப்பதற்கும் சமைப்பதற்கும் சொந்த மற்றும் வீட்டுத் தூய்மைக்கும் போதுமான நீரைப் பெறத் தகுதியுள்ளவர்கள், நீர் மூலங்கள் போதுமான அளவில் வீடுகளுக்கு அருகாமையில் இருந்தால் தான் குறைந்தபட்ச நீர்த்தேவைக்காவது பயன்படுத்த முடியும்.

 • குடிப்பதற்கும் சமையலுக்கும் தனிப்பட்ட தூய்மைப் பராமரிப்பிற்கும் எந்த வீட்டிலும் நாளொன்றுக்கு 15லீட்டர்கள் பயன்படுகின்றது.
 • வீட்டில் இருந்து நீர் மூலகத்திற்கான அதிகபட்ச தூரமானது 500மீட்டர் அளவில் இருக்க வேண்டும்.
 • நீர் மையத்தில் வரிசையில் நிற்கும் நேரம் 15 நிமிடங்களுக்கு மேலாகாமல் இருக்க வேண்டும்.
 • ஒரு 20 லீட்டர் தண்ணீர்த் தொட்டியை நிரப்புவதற்கு 3 நிமிடங்களுக்கு மேல் ஆகக் கூடாது.
 • நீர் மையத்தில் போதுமான அளவு நீர் தொடர்ச்சியாகவோ அல்லது முறையாகவோ கிடைக்கும்படி இருக்கவேண்டும்.

உயிர் வாழ்வதற்கான அடிப்படை நீர்த் தேவைகள் ஒரு எளிமையான அட்டவணை.

 உயிா்வாழ உள்ளெடுக்கப்படும் நீா் (குடிநீராக அல்லது உணவாக)  2.5லீட்டா் தொடக்கம் 3லீட்டா்  தட்ப வெப்ப நிலை, தனிநபரின் உடலமைப்பு போன்றவற்றால் வேறுபடலாம்
 அடிப்படைத் தூய்மைப்பராமரிப்பு  2லீட்டா் தொடக்கம் 6லீட்டா்  சமூகம், நடைமுறைகள் மற்றும் பயன்பாடு போன்றவற்றால் வேறுபடலாம்
 அடிப்படைச் சமையலுக்கான நீரின் தேவைகள்  3லீட்டா் தொடக்கம் 6லீட்டா்  சமூகம், நடைமுறைகள் மற்றும் உணவு வகைப் பயன்பாடு போன்றவற்றால் வேறுபடலாம்
 மொத்தமாகத் தேவைப்படக்கூடிய நீரின் அளவு  7.5லீட்டா் தொடக்கம் 15லீட்டா்
 • தண்ணீர் பாதுகாப்பானதாகவும் போதுமான தரத்திலும் குடிக்கக் கூடியதாகவும் சொந்த மற்றும் குடும்பத்தின் தூய்மைப்பராமரிப்பிற்கும் பயன்படுத்துவதாகவும் நலத்திற்கு கேடு விளைவிக்காததாகவும் இருக்கவேண்டும்.
 • நீராதரங்களுடன் மலம் போன்ற கழிவுகள் கலக்கும் ஆபத்து இல்லாமலிருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
 • நீர் வழங்கும் இடத்திலிருந்து பெறபபட்ட 100மில்லி லீட்டர் நீரின் மாதிரியில் எந்த மலம் சார்ந்த கிருமிகளும் இல்லை என்பது உறுதி செய்யப்பட வேண்டும்.
 • மக்கள் ஏற்கனவே கிடைக்கின்ற நீர் ஆதரங்களில் இருந்து அல்லது பாதுகாப்பான சுத்தீகரிக்கப்பட்ட தண்ணீர் குடிக்கின்றனர் என்பது உறுதியாக்கப்படவேண்டும்.
 • தண்ணீர் வழங்கப்பட்ட பின்னர் அது அசுத்தமாவதைக் குறைக்க முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும்.
 • குழாய் மூலமாக தண்ணீர் வழங்குவதில் அல்லது அனைத்து தண்ணீர் வழங்கல் முறைகளிலும் அபாயகரமான காலங்களில் அல்லது வயிற்றுப்போக்கு போனற தொற்று நோய் இருப்பது தெரிந்தால் சுத்திகரிப்பு முறைகளினால் அத்தொற்றை அகற்றிவிடவேண்டும். தொற்று அகற்றப்பட்ட தண்ணீரில் குழாயில் இருந்து விடும்போது ஒரு லீட்டருக்கு 0.5மில்லிகிராம் குளோரின் எச்சம் இருக்கவேண்டும். நீரின் கலங்கல் தன்மை குறைவாக இருக்கவேண்டும்.
 • மக்கள் தாங்கள் குடிப்பதற்கும் சமைப்பதற்கும் சொந்த தூய்மைப் பராமரிப்பிற்கும் போதுமான அளவில் தண்ணீரை சேகரிக்கவும், பத்திரப்படுத்தவும், பயன்படுத்தவும் போதுமான வசதிகளைக் கொண்டிருக்கவேண்டும். குடிநீரானது அருந்தும் வரை பாதுகாப்பானதாக இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டும்.
 • ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தபட்சம் 10லிருந்து 20லீட்டர்கள் கொள்வனவு கொண்ட இரு தண்ணீர்த் தாங்கிகள் இருக்க வேண்டும். அத்துடன் மேலதிகமாக தண்ணீரைப் பத்திரப்படுத்திக் கொள்ளும் தொட்டிகளும் இருக்கவேண்டும். அப்போதே வீட்டில் எப்போதும் தண்ணீர் இருப்பதை உறுதிப்படுத்த முடியும்.
 • தண்ணீர் சேகரிப்பு மற்றும் பத்திரப்படுத்தும் தொட்டிகளும் குறுகலான கழுத்துப்பாகங்களைக் கொண்டிருக்கவேண்டும். அல்லது பாதுகாப்பாக வைத்திருக்கவும் எடுக்கவும் அல்லாத கையாளப்படக்கூடியதுமான முறைகளைக் கொண்டிருக்கவும் வேண்டும்.

இவை அனைத்தும் நாம் நிலத்தடி நீரை மட்டும் கொண்டே மேற்கொள்ளவேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். ஆயினும் இவ்வாறான பேரிடர்கள் ஏற்படும்பொழுது மக்களுக்கான குடிக்கத் தகுந்த நீர் வளத்தை அடையாளம் காணவேண்டியிருப்பதுடன் அதிலிருந்து பெருந்தொகையில் நீர்வளம் பாதிக்கப்படாத வகையில் நீரினைப் பெறுவது என்பது மிகக் கடினமான ஒன்றாக உள்ளது. அவ்வாறு அதிக நீர் எடுக்கப்படும் போது நல்ல நீர் வளமாக அடையாளம் காணப்பட்ட நீர் வளம்கூட மிக வேகமாக மாற்றத்திற்குள்ளாவதை அனுபவத்தில் உணர முடிகின்றது.

எம்மீது மேல் குறிப்பிட்ட மிக மோசமான மாசாக்கலையும் எதிர்கொண்டு எம்மக்களுக்கு சாதாரண வேளையிலும் இவ்வாறு பேரிடர்கள் ஏற்படும் அசாதாரண வேளையிலும் நல்ல குடிநீரை வழங்கும் பாரிய பொறுப்பு சுமத்தப்பட்டுள்ளது. எமக்கு இயற்கையின் கோர விளையாட்டுக்களைத் தவிர்க்கும் சக்தி இல்லை எனினும் அருஞ்சொத்தான இந்த நிலத்தடிநீரை மாசாதலிலிருந்து காக்கவேண்டிய பாரிய கடமை ஒவ்வொரு குடாநாட்டு குடிமகனுக்கும் உள்ளது என்பதை உணர்ந்து செயற்பட வேண்டும்.

சு. சரவணன்
இரசயானவியலாளர்
தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச்சபை