நீர் தேடும் குடாநாடு – சு. சரவணன்

போர் எனும் கொடியவனின் பிடியில் இருந்து விலகி இன்றுதான் எம் குடாநாடு சிறிது ஆறுதல் கொள்ளத்தொடங்கியுள்ளது. இதுவரை தம் உயிரைப்பற்றியும் அதைக் காக்கத் தேவையான உணவு, உடை, உறையுள் என மிக அடிப்படைத்தேவைகளை மட்டுமே சிந்தித்து வாழவேண்டிய கட்டாயத்தில் இருந்த எம் மக்கள் எமது குடாநாட்டின் அபிவிருத்தி, தமது அடிப்படை வசதிகளைப் பெருக்கல், விவசாயப் பொருட்கள் ஏற்றுமதி, முதலீடு என பல கட்டங்களாக முன்னேறத் தொடங்கியுள்ளனர். விவசாயம் செய்யாமல் தரிசாக இருந்த பல நிலங்கள் மீண்டும் புத்துயிர் பெறத்தொடங்கியுள்ளன. புகையிலை, வெங்காயம் போன்ற ஏற்றுமதி விவசாயப் பயிர்கள் பெருமளவில் பயிரிடப்படுகின்றன.

புதிது புதிதாகக் கட்டடங்கள் தெருவெங்கும் தோன்றத் தொடங்கியுள்ளன. பெருமளவு வெளிமாவட்ட முதலீட்டாளர்கள் பெரும் முதலீடுகளுடன் எம் மண் நோக்கி படையெடுக்கத் தொடங்கியுள்ளார்கள். எம் வெளிநாடுவாழ் தமிழர்களின் பணம் இன்று புதிய வீடுகள், மதில்கள், கடைகளாக யாழ்ப்பாணத்தில். ஆம் இது தான் எம்மக்கள் எதிர்பார்த்த அழகு யாழ்ப்பாணம்.

இந்நிலையில் இந்த துரித அபிவிருத்தியை எதிர்கொள்ளும் வகையில் எம் நீர்வளம் எம்மிடம் உள்ளதா? எம் நீர்த்தேவை வெறும் குடிநீர்தான் என்றால், எத்தனையோ போத்தல் நீர் விற்கும் நிறுவனங்கள் யாழ்ப்பாணத்திற்குப் படையெடுக்கத் தயாராக உள்ளன. ஆனால் எம் தேவைகள் தான் என்ன? அவற்றின் அன்றைய அளவென்ன? இன்றைய பரிமாணம் என்ன? இதனை எம் நிலத்தடி நீர்வளம்தான் தாங்குமா? இன்றைய நிலத்தடி நீரின் தரம் எம்மக்களின் குடிநீர்த்தேவைக்கு உகந்ததாக உள்ளதா? நாளை? இவற்றை சிறிது விளக்கமாகவே நாம் சிந்திப்பது நன்று.

எமது நீர்த்தேவையை குறைந்தது நாம் மூன்று வகைகளாக வகைப்படுத்தலாம்.

 1. விவசாயம்
 2. அன்றாட வீட்டு நீர்ப்பாவனை
 3. குடிநீர்

 

விவசாயம்

யாழ் குடாநாட்டு மக்களின் மிக முக்கிய தொழிலாக அன்றும் இன்றும் இருந்து வருவது விவசாயமாகும். அன்றைய காலங்களில் மக்கள் தம் விவசாய நீர்த்தேவைக்காக கப்பி, துலா, சூத்திர கிணறுகள் போன்ற பாரம்பரிய முறைகளை பின்பற்றினர். இவற்றின் மூலம் அவர்களால் மிக அதிகமான நீரைப் பெற்றுக்கொள்ள முடியாமல் இருந்தபோதிலும் அவர்கள் அப்பயிர்ச்செய்கைத் தேவைக்கு அவ்வாறு மட்டுமே நீரை எடுத்தார்கள். நீர் பெருமளவில் எடுப்பதாக இருந்தாலும் அதனை எடுக்க அவர்கள் கூடிய நேரத்தைச் செலவழிக்க வேண்டியிருந்தது. இதனால் நிலத்தடி நீரின் அடிப்படைக் கட்டமைப்பில் மாற்றங்கள் பெரிதளவில் ஏற்படவில்லை. காரணம் எடுக்கப்பட்ட நீரினை மீள்நிரப்ப போதிய நேரம் நிலத்தடி நீருக்குக் கிடைத்தது.

அடுத்த கட்டமாக எம்மக்கள் தொழில்நுட்ப அபிவிருத்தியின் பயனாக நீர்ப்பம்பிகளை பயன்படுத்தும் கட்டத்திற்கு வந்தார்கள். இதன்மூலம் அவர்கள் எடுக்கும் நீரின் அளவு அவர்களுக்கே தெரியாத நிலை. அத்துடன் அந்தப் பெருமளவு நீரானது சிறிது நேரத்தில் எடுக்கப்பட்டுவிடுகிறது. அவ்வாறு எடுக்கப்படும் நீர் முழுமையாக பயிர்களுக்காகப் பயன்படுத்தப்படுவதும் இல்லை.

இவ்வாறு மேலதிக நீரின் ஒரு பகுதியானது மீண்டும் நிலத்தினுள் செல்கின்றது. மிகுதி ஆவியாக வளிமண்டலத்திற்குச் செல்கின்றது. இதில் ஒரு பகுதி மீண்டும் நிலத்தடி நீரைத்தானே சென்றடைகின்றது என்றால் அதுவும் எம்மை அடுத்த கட்ட அபாயத்திற்கு இட்டுச் செல்கின்றது.

மழை நீரானது மிகவும் பாதுகாப்பாக வடிகட்டப்பட்டு நிலத்தின்கீழ் சேகரிக்கப்பட்டுள்ளது. இதனை, இவ்வாறு விவசாய மேலதிக நீர் சென்றடையும் பொழுது மிகவும் அபாயகரமான விவசாய இரசாயனப் பொருட்களையும் கொண்டுசெல்கின்றது. அத்துடன் மழையினால் கழுவப்பட்டுச் செல்லும் நீரும் நீர்நிலைகளை அடையும் பொழுது பெருமளவிலான விவசாய நஞ்சுகளை கொண்டு செல்கின்றது. இதனால் இன்று குடாநாட்டின் நன்னீர் உள்ள பிரதேசங்களாகக் குறிப்பிடப்படும் பகுதிகளின் நிலத்தடி நீரானது மிகவும் நஞ்சாக்கப்பட்டுள்ளது.

இன்றைய சுமூக நிலையில் விவசாயத்தின் அளவும் அதிகரித்துள்ள நிலையில் நீரின் தேவையும் கூடி விவசாய இரசாயனங்களின் பயன்பாடும் மிக அதிகளவில் அதிகரித்துள்ளது. இதனால் நிலத்தடி நீரின் தன்மை மிக வேகமாக மாற்றமடையத் தொடங்கியுள்ளதுடன் அதிகளவில் நஞ்சாகும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக விரிவான ஆய்வுகள் மக்களின் சுகாதாரத்துடன் தொடர்புபடுத்தி பெரியளவில் நடாத்தப்படவேண்டும். அத்துடன் சிறியளவில் நடாத்தப்படும் ஆய்வுகளும் சாதாரண மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தக் கூடியவகையில் அவர்களைச் சென்றடையக்கூடியவகையில் ஊடகங்களின் வழியாகப் பிரசுரிக்கப்படுவதுடன் இதிலிருந்து அம்மக்களைக் காக்கும் வகையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும்.

அன்றாட வீட்டு நீர்ப்பாவனை

விவசாய நீர்ப்பாவனை போன்று எம் வீட்டு நீர்த்தேவையும் மிகப்பலமடங்கு அதிகரித்தே உள்ளது. எம் வீட்டின் சில அநாவசிய நீர்த்தேவைகள் கட்டாய நீர்த்தேவையாக மாறியுள்ளது. கைவாளிகள் மூலம் கிணற்றில் இருந்து அள்ளப்பட்டு தேவைக்கேற்ப பாவிக்கப்பட்ட நீரானது இன்று 2”, 1 ½” மின் பிறப்பாக்கிகள் / மின்பம்பிகள் மூலம் எடுக்கப்பட்டு மிக அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றது. வீட்டின் எப்பகுதியிலும் நீர்க்குழாய்கள், பெரியளவிலான துவைக்கும் இயந்திரங்கள், மிக நவீன மயமாக்கப்பட்ட குளியலறைகள், வீட்டுத்தோட்டம் என எம் நீர்த்தேவைகள் மிக அதிகளவில் அதிகரிக்கின்றன.

கிணற்றில் அள்ளிக் குளித்த காலம் போய் இன்று ஒரு மணிநேரக் குளியலறைக் குளியல். மின்பிறப்பாக்கி இயக்கி அதிலே குளியல் என அதீத நீர்ப்பாவனை. ஒரு வாளி தண்ணீரில் வீட்டுப் பாத்திரம் முழுக்கக் கழுவிய தாய்மார் இன்று திறந்த குழாய் மூடாமல் பாத்திரம் கழுவுகின்றனர்.

அது மட்டுமல்ல அன்று 5 – 10 பரப்புக் காணியில் தனிக்கிணற்றுடன் இருந்த வீடுகள் போய் 1–1 ½ பரப்புக் காணியில் பங்குக் கிணறுகளுடன் வீடுகள். பல வீடுகளுக்கு அக் கிணறுகளே நீர் வழங்க வேண்டிய கட்டாயம். இல்லையேல் இடப்பிரச்சனையைக் கருத்திற்கொண்டு குழாய்க்கிணறுகள் தோன்றும் நிலை. இக் குழாய்க்கிணறுகளும் எந்தவித தொழிநுட்ப அறிவும் இன்றி மிக அபாயகரமான முறையில் அமைக்கப்பட்டுவிடுகின்றன.

அன்று கைகளால் இடிக்கப்பட்ட குழாய்க்கிணறுகள் போய் இன்று இயங்திரங்கள் மூலம் தோண்டப்படும் கிணறுகள். வீட்டு உரிமையாளர்கள் கிணறு எவ்வளவுதான் இறைத்தாலும் வற்றப்படாது என்று கோருகிறார்கள். அதனால் அநாவசியமாக மிக ஆழமாக இக்கிணறுகள் தோண்டப்படுகின்றன. இவை பல நிலத்தடி நன்னீா்ப் படைகளைத் தாண்டி ஆழச்செல்கின்றன. உவர் நீரில் மிதக்கும் சிறு நன்னீர் படையை இவை பலமாக சேதப்படுத்துவதுடன் உவர்நீரானது மேலெழுந்து நன்னீருடன் கலப்பதையும் தூண்டுகின்றது. நீர்த்தேவையைக் கருத்திற்கொண்டு கிணறுகளை ஆழமாக்கிய பல வீட்டு உரிமையாளர்கள் தம் வீட்டுக் கிணற்றின் தரம் உவர் நீராக மாறியமையை அனுபவத்தில் உணர்ந்துள்ளார்கள் / சந்தித்துள்ளார்கள்.

குடிநீர்

“நீர் இன்றி நீர் இல்லை”. ஆம் உங்கள் உடற்திணிவில் 75% த்திற்கும் அதிகமான பகுதியை நிரப்புவது நீரே. உங்கள் உடல் அனுசேப செயற்பாடுகள் அனைத்தும் நீரிலேயே தங்கியுள்ளது. உடல் தன் தேவை அறிந்து அழைப்பதே “தாகம்”. உங்கள் உடல் வெளி அழகைக் கூட்டவும் பராமரிக்கவும் எத்தனை எத்தனை செயற்பாடுகளைச் செய்கிறீர்கள். அழகு உடைகள், வாசனைத் திரவியங்கள், களிம்புகள் எவ்வளவு. அந்த உடலே உங்களிடம் கேட்கும் அந்த நீரைப்பற்றி நீங்கள் எவ்வளவு தூரம் அக்கறை கொள்கிறீர்கள். நீங்கள் அருந்தும் நீரின் தரம் பற்றி என்றாவது சிந்தித்ததுண்டா? நீங்கள் அருந்தும் நீர் தரமானதாகவும் போதுமானதாகவும் இருந்தாலே உங்களின் ஆரோக்கியமும் நிச்சயமாக உயர்வடையும்.

நீரின் தரம் என்று நாம் எதனைக் கொள்கின்றோம். எம் அடிப்படைக் கல்வியில் கற்றது போல நிறம் மணம், சுவை, குணம் அற்றதாக இருக்கவேண்டும். உண்மையே, ஆயினும் இவை ஒவ்வொரு மனிதனின் தனித்தன்மை, சுவைக்கேற்ப உண்ணும் விதம் வேறுபடுவதுடன் சில விடயங்கள் அவர்களுக்கு நாளடைவில் பழக்கம் அடைந்து விடுகின்றது. சிறிதளவு எதிர்ப்பு சக்தியும் அவர்களுக்கு உருவாகி விடுகின்றது. இதுவே எம் குடாநாட்டு மக்களின் இன்றைய நிலை.

ஆம் இன்று எம் குடாநாட்டு மக்களுக்கு கிடைக்கும் நீரில் 75%க்கும் அதிகம் மாசாக்கப்பட்ட நீரே கிடைக்கின்றது. அத்துடன் யாழ் மாநகர சபைப் பகுதி நிலத்தடி நீர்வளமும், விவசாயம் பெருமளவு மேற்கொள்ளப்படும் வலிகாமம் பகுதி நீரும் பெரும் மாசாக்கத்திற்கு உள்ளாகியுள்ளது.

நிலத்தடி நீர் மாசாதல் ஆனது இரு வழிகளில் நிகழ்ந்த வண்ணம் உள்ளது. மனித செயற்பாடுகளிலும் இயற்கையாலும் இந்தச் செயல் நிகழ்கின்றது. இதில் எம் மனித செயற்பாடானது மிக மோசமாகவும் வேகமாகவும் எம் நிலத்தடி நீரை எம் குடிநீரைப் பாதித்தவண்ணம் உள்ளது.

குடாநாட்டின் முக்கிய பொருளாதாரம் விவசாயம்.  அத்துடன் அவர்களுக்கு அவ்விவசாயத்திற்குக் கிடைக்கும் ஒரே நீர்வளம் நிலத்தடி நீர். எம் நிலத்தடி நீர்வளத்தின் மிகப்பெரும் பகுதி இந்தப் பயிர்ச்செய்கைக்கே பயன்படுகின்றது. அத்துடன் இந்த இரசாயனப் பொருட்களின் பயன்பாடு மிக மோசமாக எம் நிலத்தடி நீர்வளத்தை சீரழித்து வருவதை எம்மால் இன்று கண்டுகொள்ளக்கூடியதாக இருக்கின்றது. பல நீர்த்தர அறிக்கைகள் இதனை சுட்டிக்காட்டியவண்ணம் உள்ளன. எம் நிலத்தடி நீர்வளம் விவசாயத் தேவையை மட்டும் பூர்த்தி செய்யும் ஒரு விடயமாக இருப்பின் இதனை நாம் ஓர் பிரச்சனையாகக் கருதவேண்டியதில்லை. ஆயினும் இன்றைய கட்டத்தில் எம் மக்கள் இந்த நிலத்தடி நீரையே தம் குடிநீருக்கும் நம்பியுள்ள நிலை.

இன்று யாழ் நகரப்பகுதிக்கு கோண்டாவில், திருநெல்வேலி என மிகச் செறிவான விவசாயச் செய்கை நடைபெறும் பிரதேசங்களிலிருந்து நீர் விநியோகம் நடைபெறுகின்றது. இந்த நீரில் மிக அதிகம் NO3 செறிவு காணப்படுகின்றமை கருத்திற்கொள்ளவேண்டிய விடயமாகும்.

எம் குடாநாட்டின் நிலத்தடி நீரானது மிக மோசமாக விவசாய இரசாயனப் பொருட்களினால் மாசாக்கலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ள நிலையில், இதனால் எம்மக்கள் எதிர்கொள்ளும் சுகாதார அபாயங்கள் தொடர்பாக எந்த விதமான ஆழமான ஆய்வுகளும் மேற்கொள்ளப்படாமை மிகக் கவலைக்கிடமான விடயமாகும். ஆயினும் இன்று எம்மக்கள் உணவுக் கால்வாய் புற்றுநோய்க்கு அதிகளவில் பாதிப்புக்குள்ளாகி வருகின்றமை ஓர் வெளிப்படையான உண்மையாகும்.

இந்த விவசாய இரசாயனப்பொருட்கள் பாவனையையும் அதீத விவசாய நீர்ப்பாவனையையும் கட்டுப்படுத்த இயலாதவிடத்து எம் குடாநாட்டு மக்களின் குடிநீர்த் தேவையை பூர்த்திசெய்யத்தக்க வகையில் மாற்றுத்திட்டங்களையாவது அறிமுகம் செய்வது அரசாங்கத்தினதும் அரச திணைக்களங்களினதும் கடமையாகும்.

இதனைவிட இன்று உலகு எதிர்கொள்ளும் பூமி வெப்பமாதல் (Global Warming) என்னும் செயற்பாட்டினால் இன்று கடல்மட்டமானது மிக வேகமாக மேலெழும்பி வருகின்றது. இந்நிலையில் மூன்று பக்கமும் கடலால் சூழப்பட்ட மிகச் சிறிய நிலப்பரப்புக்கொண்ட எம் குடாநாடு இதன் பாதிப்புக்கு உள்ளாவதற்கு இன்னும் எவ்வளவு காலம் செல்லும்?. இதில் முதல் பாதிப்பு நிச்சயமாக மிகச்சிறிய ஒரு வில்லையாக கடல்நீரில் மிதக்கும் எம் நன்னீர்ப் படைக்கே.

இதுவரை எம்மிடம் இருக்கும் எம் நிலத்தடி நன்னீர்ப்படை மாசடைதலை மட்டுமே கவனத்திற்கொண்டோம். ஆயினும் குடாநாட்டின் பல பகுதிகளில் மக்கள் சிறிதளவு நன்னீர் கூட இன்றி குடிநீருக்காக அலையும் நிலை தொடர்ந்து காணப்பட்டுக்கொண்டேயிருக்கின்றது. முன்னர் நன்னீர் காணப்பட்ட பல பிரதேசங்களும் கூட இன்று உவர்நீர்ப் பிரதேசங்களாக மாறத்தொடங்கியுள்ளது. இதனால் தீவகக் கரையோரப்பகுதி, வலிமேற்கின் பல பகுதிகளில் வீட்டுக் கிணறும் பல நீர்விநியோகத் திட்டங்கள் கைவிடப்பட்டும் காணப்படுகின்றது. இன்று அப்பகுதியில் இயங்கும் நீர் விநியோகத்திட்டங்களும் தரமான நீரை விநியோகிப்பதில்லை. ஒப்பீட்டளவில் அவை நன்னீராகக் காணப்படுவதால் மக்கள் அதனை ஏற்றுக்கொள்கின்றார்கள்.

நன்னீர் கிடைக்கப்பெறாத பகுதி மக்கள் பொதுவாக பொதுக்கிணறுகள், பவுசர் மற்றும் சிறிய நீர்விநியோகத்திட்டங்கள் என்பதையே நம்பியுள்ள நிலமை காணப்படுகின்றது.

பொதுக்கிணறுகளில் நீர் எடுக்கும் மக்கள் அதிகாலைக்கு முன்பே சென்று நீர் அள்ளவேண்டிய நிலை, இல்லையேல் நீர் வற்றிவிடும். பவுசர், நீர்விநியோகத்திட்டங்கள் ஓர் குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் ஓர் குறிப்பிட்டளவு நீரை மட்டுமே விநியோகிக்கின்றன. (அதுவும் அவை மிக நெருக்கடியான நேரத்திலேயே (Peak hour) அதை விநியோகிக்கின்றன). இதனால் மக்கள் இதனைப் பெற நீண்ட வரிசையில் நீண்ட நேரம் நின்று குறைந்தளவு நீரையே அதுவும் பணம்கொடுத்துப் பெறவேண்டிய நிலை. இதுவே உண்மையில் குடாநாட்டில் நீர்விநியோகத்திட்டங்கள் என்னும் பெயரில் நடைமுறையில் உள்ள விடயம். இதற்கு மேல் அந்த நிறுவனங்களால் எம் நிலத்தடி நீரைப் பெற்றுக்கொள்ளமுடியாமல் இருப்பதும் உண்மை நிலையே. சிறிய கால சிந்தனையைக் கருத்திற்கொண்ட அதிகளவு நீரை வெளி எடுத்து எம் குடாநாட்டைப் பாலைவனமாக மாற்றாமல் அந்நிறுவனங்கள் செயற்படுவதும் சிறந்ததே.

இவ்வளவு சிக்கல்கள் நிறைந்த எம் குடாநாட்டு மக்களின் நீர்த்தேவையைப் பூர்த்திசெய்ய எம் கடமைகள் என்ன? என சிறிது பார்த்தல் இந்த சந்தர்ப்பத்தில் வேண்டிய ஒன்று.

எம் அரச நிறுவனங்கள் நீர் மாசடைதலைத் தடுக்க பல சிபாரிசுகளை மேற்கொண்டுள்ள போதும் அவை பொதுமக்களை சென்றடைவதும் இல்லை. அவை அவர்களிடம் ஓர் விழிப்புணர்வை ஏற்படுத்தியதும் இல்லை. இந்த விடயத்தில் அரச நிறுவனங்கள் கரிசனை கொள்வது நல்லது. இன்று நடைமுறைப்படுத்த சிபாரிசு செய்யப்பட்டுள்ள சில விடயங்களை உங்கள் முன் தருகின்றேன்.

 • நில நீர் மட்டம் உயர்ந்த பகுதிகளுக்கு Septic tank, Anaerobic filter மலசல கூடங்களும், நில நீர் மட்டம் குறைந்த பகுதிகளுக்கு Septic tank soakage pit மலசல கூடங்களும் சிபாரிசு செய்யப்பட்டுள்ளன. ஆயினும் சிறிதளவு மேலதிக பணச் செலவைக் கருத்திற்கொண்டு அனேக இடங்களில் திறந்த மலசல குழிகளே மக்களாலும் வீட்டுத் திட்டங்களை நடைமுறைப்படுத்தும் நிறுவனங்களாலும் அமைக்கப்பட்டுவருகின்றது. இதனைத் தடுக்க இந்த சிபார்சுகள் சட்ட மூலங்களாக நடைமுறைப்படுத்தப்படவேண்டியது காலத்தின் தேவையாகும்.

ToiletTank

 • நன்னீர்ப் படையின் தன்மையைக் கருத்திற்கொண்டு குழாய்க்கிணறுகளை அமைத்தலைக் கூடியளவு தவிர்த்தல் பொருத்தமானதாக இருக்கும். அத்துடன் மிக அவசியமெனில் மட்டும் உரிய நிறுவனங்களிடம் தொழில்நுட்ப ஆலோசனையையும் அனுமதியையும் பெற்று அமைத்தல் வேண்டும். இது நடைமுறையில் உள்ளபொழுதிலும் மக்களும் குழாய்க் கிணறுகளை அமைக்கும் நிறுவனங்களும் பின்பற்றுவதுமில்லை. அதனை நடைமுறைப்படுத்தும் நிறுவனங்கள் அதற்கெதிராக எந்தவித சட்ட நடவடிக்கை எடுப்பதும் இல்லை.

மேலதிகமாக மாவட்ட ஒருங்கமைப்புக் குழு சில சிபாரிசுகளை முன்வைத்துள்ளது. அவையாவன

 • நிலத்தடி நீரை பாதுகாக்காக உள்ளுராட்சி சபைகள் சில நடைமுறைகளை உருவாக்குதல்
 • 1 ½” விட்டம் 1.5HP மேற்பட்ட நீர்ப்பம்பிகளின் பாவனையைக் கட்டுப்படுத்துதல்
 • பி.ப.4.00 தொடக்கம் மு.ப.8.00 வரையான காலப்பகுதிக்குள் விவசாய நீர்ப்பாவனையைக் கட்டுப்படுத்துதல்
 • தொடர்ச்சியாக ஒரு கிணற்றிலிருந்து 1 ½” மணித்தியாலத்திற்கு மேல் நீரை இறைப்பதைத் தடுத்தல்
 • விவசாயத் திணைக்களம் சிறந்த விவசாய முறைகளையும் குறைந்த அளவு நீரால் நிறைந்த பயனைப் பெறும் முறைகளையும் அறிமுகப்படுத்துதல்
 • கிராம மட்டத்தில் ஒருங்கமைப்புக் குழு அமைப்பதன் மூலம் நீரின் தரம் அளவுகளைக் கண்காணித்தல்
 • சிறிய நீர்த் தேக்கங்களைப் புனரமைத்தல்
 • உவர் நீர்த் தடுப்பு அணைகளைப் புனரமைத்தல்
 • நிலத்தடி நீரின் தரம், அளவு பற்றிய காலாண்டு அறிக்கைகள் மாவட்ட ஒருங்கமைப்புக் குழுவுக்கு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையால் வழங்கப்படல்
 • குழாய்க் கிணறு அமைக்க தொழில்நுட்ப அனுமதி பெற்றிருத்தல் வேண்டும்
 • மேற்குறிப்பிட்டவற்றை 5 ஆண்டுகளுக்காவது நடைமுறையில் வைத்திருத்தல்

இவைகூட சிபாரிசுகளாக மட்டுமே உள்ளதே தவிர நடைமுறையில் முழுமையாகக் கொண்டுவரப்படவில்லை. இவையனைத்தும் மக்களினால் முழுமையாக நடைமுறைப்படுத்தவேண்டிய விடயங்களாகும். அத்துடன் நீருடன் சம்பந்தப்பட்ட நிறுவனங்களான நீர்ப்பாசனத் திணைக்களம், தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை ஆகியனவும் பல்வேறுபட்ட பாரிய நடவடிக்கைகளில் ஈடுபடுவதனை எம்மால் அறிந்துகொள்ளமுடிகின்றது.

உதாரணமாக நீர்ப்பாசனத் திணைக்களமானது உவர் நீர்த்தடுப்பணைகளைப் புனரமைத்தல் மூலம் உவர் நீர் உட்புகுதலைத் தடுக்கவும், சிறு குளங்கள், வழுக்கையாற்று புனரமைப்பின் மூலம் எம் நிலப்பரப்பில் மழைநீரைச் சேகரித்தல், நன்னீர் ஏரித்திட்டம் என்னும் நடவடிக்கையான உவர் நீராகக் காணப்படும் எம் கடல் நீர் ஏரியினைத் தடுப்புக்கள் இடுவதன் மூலம் கடல் நீர் உட்புகாமலும் மழை நீர் வெளிச்செல்லாமலும் செய்வதன் மூலம் நன்னீராக்கும் நீண்ட காலத் திட்டம் போன்ற பல திட்டங்களை நடைமுறைப்படுத்த ஆரம்பித்துள்ளது. இதன் மூலம் விவசாய நீர்த்தேவைக்கு வருங்காலத்தில் ஏற்படும் மேலதிக கேள்வி ஓரளவு நிவர்த்தி செய்யப்படலாம். ஆயினும் இதன்மூலம் நிலத்தடி நீரானது உவர்த்தன்மை குறைக்கப்பட்டதாக மாறுமாயினும் குடிநீரெனும் தரத்திற்கு உயர்த்தப்படும் என எதிர்பார்க்கமுடியாது என்பதுடன் வருங்கால அபிவிருத்திச் செயற்பாடுகளினால் ஏற்படப்போகும் புதிய தொழிற்சாலைகள், விவசாய அபிவிருத்தி, கட்டடங்கள், தொடர்மாடிகள் என்பன மேலும் இந்நீரை மாசாக்கவே செய்யப்போகின்றது என்பதும் வெளிப்படையான உண்மை. இந்நன்னீரானது விவசாயத்திற்கு ஏதுவாக இருக்கும்போதிலும் குடிநீருக்குப் பாதுகாப்பானதாக இருக்கப்போவதில்லை. ஆயினும் விவசாய அபிவிருத்தி மற்றும் ஏனைய நீர்த்தேவைகளைக் கருத்திற்கொண்டு இத்திட்டங்கள் கட்டாயம் முன்னெடுக்கவேண்டிய ஒன்றுதான். ஆயினும் குடிநீருக்கான திட்டங்களும் மிக முக்கியமானதொன்றாகவே உள்ளது.

நிறுவனங்கள் இத்தகைய பாரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு குடாநாட்டின் நீர் வளத்தைப் பாதுகாத்து சிறந்த நீர் விநியோகத் திட்டங்களை நடைமுறைப்படுத்த உள்ள போதிலும் எம் குடாநாட்டின் ஒவ்வொரு குடிமகனும் எம் நீர்வளம் சம்பந்தமாக அறிந்து அதனை மாசாக்காமலும் வீணாக்காமலும் விழிப்புணர்வுடன் நடந்து கொள்ளவேண்டும் என்பது காலத்தின் கட்டாயமாகும். இல்லாவிடின் எம் குடாநாடு மீண்டுமொரு இடப்பெயர்வையோ அபிவிருத்தியில் பின்தங்கிய நிலையையோ நீருக்காக எதிர்நோக்கவேண்டிய நிலை ஏற்படும்.

சு. சரவணன்
இரசயானவியலாளர்
தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச்சபை