ஆன்மீக அருள் ஆரோக்கியம் தரும் – பகுதி 3

சித்த மருத்துவத்தின் தத்துவங்ள் ஆரம்பத்திலே சிவனினால் சக்தியிடம் கையளிக்கப்பட்டு சக்தி அதனை நந்தியிடம் கொடுத்து நந்தி அதனை சித்தர்களிடம் சேர்ப்பித்தார் என்று பண்டைய நூல்கள் தெரிவிக்கின்றன. இந்தத் தத்துவங்கள் ஆரம்பத்திலே18 சித்தர்களினால் கையாளப்பட்டிருக்கினறன. இந்த சித்தர்களிலே முக்கியமானவராக அகத்தியர் இருந்திருக்கிறார். இந்த அகத்தியரின் தலைமையிலேயே சித்த மருத்துவத்து முழுமையாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

இந்த சித்த மருத்துவத்துறையின் தோற்றம் பற்றிய இந்த கருத்துக்களை நம்புகிறோமோ என்பது முக்கியமல்ல. இது அவசியமும் இல்லை. ஆனால் அக்காலத்திலிருந்தே மதமும் மருத்துவமும் ஒருங்கிணைந்து செயற்பட்டிருக்கின்றன என்பதற்கு இது ஒரு நல்ல எடுத்துக்காட்டாக விள்குகிறது.

உலகினதும் ஏன் இந்த அண்டசராசரங்கள் அனைத்தினதும் இயக்கத்திற்கு அடிப்படையாக இருப்பது energy என்று சொல்லப்படுகின்ற சக்தி என்பது உலகறிந்த உண்மை. சக்தி இன்றி எதுவும் இயங்க முடியாது. அந்த சக்திதான் சிவனின் சரிபாதி என்றும் அவள்தான் அனைத்தயும் இயக்கிக்கொண்டிருக்கிறான் என்றும் இந்து மதம் சொல்கிறது. இந்த உடல் இயக்கமும் சக்தியும் தான் மருத்துவத்திற்கு அடிப்படையாக விளங்குகிறது.

மருத்துவக்கலையை ஆயகலைகள் அறுபத்தினான்கில் ஓன்றாக வைப்படுத்தியிருக்கிறார்கள். மனிதனின் சிந்தனை ஓட்டத்தில் ஏற்படும் குளப்பமான நிலையே பல உடல் சம்பந்தமான அறிகுறிகளுக்கும் நோய்களுக்கும் அடிப்படை காரணங்களாக அமைகின்றன என்பதை பல ஆய்வுகள் உறுதிசெய்கின்றன. அனைத்து மதங்களுமே மனிதனின் சிந்தனை ஓட்டத்தை நெறிப்படுத்தி சுகப்படுத்தும் அற்புதமான மருத்துவக்கலையை கற்பித்து நிற்கின்றன. எல்லா மதங்களிலுமே அற்புதமான மருத்துவக் கருத்துக்கள் பொதிந்திருக்கிறன்றன.

தற்போதய மருத்துவ உலகு நோய்த்தடுப்பு முறைகளிலேயே அதிதீவிர கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறது. உலக சுகாதார செலவினங்களிலேயே பெரும்பகுதி நோய்த்தடுப்பு மருத்துவத்தை நோக்கி திசை திருப்பப்பட்டிருக்கிறது. மதங்கள் இந்த நோய்ததடுப்பு மருத்துவம் சம்பந்தமான தெட்டத்தெளிவான கருத்துக்களை ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பிருந்தே வலியுறுத்தி வருகின்றது.

நவீன மருத்துவமுறைப்படி ஒருவர் நோய்வாய்ப்படுவதை தவிர்ப்பதற்கு சில அடிப்படை அறிவுறுத்தல்களை முன்வைப்பது வழக்கம். அவற்றின் சில முக்கியமான அம்சங்களாவன.

  1.  தினமும் ஒழுங்கான உடற்பயிற்சி இதனை காலையில் செய்து கொள்வது சிறந்தது.
  2.  மாச்சத்து அதிகமுள்ள உணவுவகைகளை குறைத்து புரதச்சத்து மற்றும் நார்த்தன்மையுள்ள உணவுவகைகளை அதிகம் சேர்த்துக் கொள்ளுதல் மற்றும் மேலதிக உணவைத் தவிர்த்தல்.
  3. வீட்டுச் சுற்றாடலையும் உடலையும் சுத்தமாக பேணுதல்.
  4.  புகைத்தல், மது அருந்துதல், தகாத பாலியல் தொடர்புகள் போன்றவற்றை தவிர்த்தல்.
  5. சுத்தமான உடைகளையும் அங்கிகளையும் அணிதல்.
  6.  விட்டமின் D தொகுப்பிற்காகவும் உடற்சுகாதாரத்திற்காகவும் மெல்லிய சூரிய ஒளியில் நடமாடுதல்.
  7.  ஒழுங்கான மன அமைதிக்கான நடைமுறைகள் மற்றும் சுவாசப்பயிற்சி போன்றவற்றை பின்பற்றுதல்.

இந்த நடைமுறைகளை கடைப்பிடித்து வந்தால் நீரிழிவு, உயர்குருதி அமுக்கம், இருதய நோய்கள், கிருமித் தொற்றுகை, மன அழுத்தம் அதிகரித்த கொலஸ்ரரோல், நிறை அதிகரிப்பு போன்ற பல நோய்கள் ஏற்படாமல் தடுக்க முடியும்.
இந்த அடிப்படை சுகாதார அறிவுரைகள் அனைத்தையும் மதங்கள் தமது மத அனுட்டான முறைகளில் அப்படியே குறிப்பிட்டிருப்பதை நாம் அவதானிக்க முடியும்.

உதாரணமாக தினமும் அதிகாலையில் எழுந்து குளித்து தோய்த்து உலர்ந்த ஆடை தரித்து கோயிலுக்கு சென்று கோயிலை 3 தடவை வலம்வந்து ஆசனங்கள், அட்டாங்க பஞ்சாங்க நமஸ்காரங்கள் செய்து இறைவணக்கம் செய்ய வேண்டும். என்று இந்துமதம் சொல்லுகிறது. இங்கே உடைச்சுத்தம், உடல்சுத்தம், உடற்பயிற்சி, மன அமைதி என்ற நான்கு சுகாதார அறிவுரைகள் அடங்கி இருக்கின்றன. பஞ்சமாபாதங்களை தவிர்க்குமாறு மதங்கள் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றன. இந்த பஞ்சமா பாதங்களில் அடங்கியிருக்கும் கள், காமம் எனப்படுகின்ற மது அருந்துதல் தகாத பாலியல் தொடர்புகள் என்பவற்றை தவிர்த்து விடுவதன் மூலம் AIDS போன்ற பல கொடிய தொற்றுநோய்களிலிருந்தும் ஈரல், நரம்புகள், சம்பந்தமான நோய்களிலிருந்தும் எம்மை தற்காத்துக்கொள்ள முடியும். விரத காலங்களிலே மாப்பொருள் தவிர்த்து பால், பழங்கள், உண்ணும் மரபு அன்றிலிருந்து கடைப்பிடிக்கப்பட்டு வந்திருக்கின்றது. பால், பழங்களிலே வினைத்திறன் கூடிய புரதங்களும் விட்டமின்களும், கனியுப்புக்களும், நார்ப்பொருள்களும் இருப்பதுடன் இது உடல்நிறையை கட்டுப்பாட்டில் வைத்திருக்ககூடிய ஒரு நிறை உணவாகவும் விளங்குகிறது.

சூரிய நமஸ்காரம் எமது வழிபாட்டு முறைகளில் முக்கியமானது. இது காலையில் சூரிய ஒளியிலிருந்து சூரியனைநோக்கி நமஸ்காரம் செய்யும் ஒரு முறையாகும். இதனையே மேலைத்தேச நாடுகளிலே மருத்துவத் தேவைகளுக்காக சன்பாத் என்று செய்துவருகின்றார்கள். இதன் மூலம் பல எலும்பு பல் சம்பந்தமான நோய்களை தடுக்கமுடியும்.

எனவே அன்றுதொட்டு சுகாதார மருத்துவ அறிவுரைகளையும் வழிகாட்டல்களையும் மதங்களே செய்துவந்திருக்கின்றன. மத ஈடுபாடும் ஆன்மீக ஈடுபாடும் மக்களுக்கு ஒரு ஆரோக்கியமாக பாதையை காட்டி நிற்கின்றன.

கடவுளைப் பக்தியுடன் மனமுருகி, மனம் ஒருமித்து தியானித்து வழிபடும் முறை அன்று தொட்டு எல்லா மதங்களிலுமே பின்பற்றப்பட்டு வருகின்றது. இதன்மூலம் பல தீமைகள் நீங்கும், நாம் காப்பாற்றப்படுவோம், சுகம்பெறுவோம், பல நல்ல விடயங்கள் நடைபெறும், மனம் சாந்திபெறும் என்ற நம்பிக்கை மதநம்பிக்கை உடைய அனைவரது மனங்களிலும் குடிகொண்டிருக்கிறது. இவை உண்மைதான என்ற கேள்வியும் பலரது மனங்களிலே எழத்தான் செய்கிறது. ஆனால் இவை உண்மை என ஆராச்சிகள் நீரூபித்து வருகின்றன.

மனம் ஒருமித்து மனமுருகி தியானித்து வணங்குவது என்பது Meditation, Realization சுவாசப்பயிற்சி என்ற மருத்துவ விஞ்ஞானப்பதங்களுக்குள் அடங்குகிறது. இவற்றில் ஏற்படும் அனுகூலங்கள் பல இவற்றை ஒழுங்காகச் செய்துவந்தால் மனப்பாரம் குறைவதுடன் பல கொடிய நோய்களிலிருந்தும் காப்பற்றப்படுவதுடன் உடலில் நல்ல பல மாற்றங்கள் நடப்பதற்கும் இது வழிகோலும் என்று விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

அதாவது மதவழிபாட்டுமுறைகள் மனிதனை உடற்பலமும் ஆன்மீக பலமும் பொருத்தியவனாக ஒரு ஆரோக்கியமுள்ள மனிதனாக வாழ்வதற்கு வழிசமைத்து நிற்கின்றது.

தொடரும்..

சி. சிவன்சுதன்
வைத்திய நிபுணர்
யாழ்.போதனா வைத்தியசாலை