ஆன்மிக அருள் ஆரோக்கியம் தரும் – பகுதி 6

மதத்திற்கும் மருத்துவத்திற்கும் இடையே இருக்கின்ற நெருக்கம் பற்றியும் இறுக்கம் பற்றியும் சொல்லிக்கொண்டே போகலாம். இதனால் மட்டுமே் எந்தப் பயனும் ஏற்படப்போவதில்லை. இனி நாம் என்ன செய்யப்போகின்றோம் என்பதே இன்று முக்கியமானதாகி நிற்கின்றது. சரித்திர காலத்தில் கூட சந்தித்திராத பல சோகவரலாறுகளைச் சுமந்து நோய்வாய்ப்பட்டுப்போன ஒரு சமுதாயமாக நாம் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். எமது சமூகக் கட்டமைப்புகள் உருக்குழைந்து கலாச்சார விழுமியங்கள் சிதைந்து சின்னாபின்னமாகப் போயிருக்கின்றன. போதைப்பொருள் பாவனை, தற்கொலை முயற்சிகள் சமூக சீர்கேட்டு நடவடிக்கைகள் குடிவகைகளுக்கு அடிமையாதல் என்பன பெரிகிவருகின்றன. இந்த நிலையில் நாம் எமது எதிர்காலத்தை ஒரு ஆரோக்கியமான திசையை நோக்கி நகர்த்துவதற்கு என்ன செய்ய போகின்றோம்.

இத்தனை துயரங்களினூடும் ஒரு மகிழ்ச்சிகரமான விடயம் வெள்ளிடை மலையாக வெளிச்சமாகத் தெரிகிறது. 30 வருட யுத்தத்திற்குப் பின்னரும் பல மதநிறுவனங்களும் கோயில்களும் திறம்பட இயங்கிவருகின்றன. இவை பல சமூக சுகாதார சேவைகளையும் தமது சமயத்தொண்டுகளுக்கு மேலதிகமாக செய்து வருகின்றன. இந்த விடயத்தில் கிறிஸ்தவ மதநிறுவனங்களின் பங்களிப்பு ஒப்பீட்டளவில் மிகவும் அதிகமாகக் காணப்படுகின்றது. மக்களின் மன அமைதிக்கும் ஆரோக்கியத்திற்கும் எமது மதப்பெரியவர்கள் ஆற்றிவரும் பங்கு அளப்பெரியது. இந்த அறிவு ஜீவிகளினதும் அனுபவஸ்தர்களினதும் பங்களிப்பை எமது ஆரோக்கியத்தை மேன்படுத்துவதற்கு இன்னும் கூடிய அளவில் பயன்படுத்தவேண்டிய தேவை எழுந்திருக்கின்றது.

மதக்கருத்துக்களை தற்போதய காலத்திற்கு ஏற்றவகையில் மெருகேற்றி எமது இளம் சமுதாயத்தினரை மதநம்பிக்கை உள்ளவர்களாக எமது கலை கலாச்சார பாரம்பரியங்களை மதிக்கக்கூடியவர்களாக வளர்த்தெடுக்கக்கூடிய வல்லமை இந்த பெரியவர்களுக்கு மட்டும்தான் இருக்கிறது.
இதற்கு மேலதிகமாக ஒவ்வொரு மதநிறுவனங்களும் கோயில் நிர்வாக சபைகளும் தமது பகுதிகளில் சுகாதார விழிப்புணர்வு நிகழ்வுகளை ஒழுங்கு செய்தால் அதற்கு உதவுவதற்கான கடமை மருத்துவக்குழுக்களுக்கு இருக்கிறது.

சொற்பொழிவுகள், போதனைகள் மூலம் மக்களில் உடல் உள சமூக நன்னிலையை மேம்படுத்தக்கூடிய பல பெரியவர்கள் நம்மிடையே வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களின் முயற்சிகள் ஊக்கப்படுத்தப்பட வேண்டும். அத்துடன் சொல்லப்படும் கருத்துக்கள் மக்களின் பகுத்தறிவால் ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவும் சுகாதார மேம்பாட்டிற்கு உதவக் கூடியதாகவும் இருப்பது வரவேற்கத்தக்கது.

மதநிறுவனங்கள் பல மருத்துவமனைகளின் சேவை விருத்திக்கு பலவழிகளிலும் உதவிவருகின்றன. இந்த முயற்சிகள் இன்னும் மேம்படுத்தப்படுவது பயனுடையதாக அமையும்.

“ஒருவரின் உடலும் உள்ளமும்தான் அவனது உண்மையான கோயில் அதனை சிறப்பாக பராமரிக்கவேண்டியதே ஒவ்வொருவரினதும் முதற்கடமை இதனை சரிவரச் செய்துவந்தால் நாம் பல நோய்களிலிருந்தும் துன்பங்களிலிருந்தும் காப்பாற்றப்படுவோம் ஒருவருனினுடைய உயிரே அவனின் கடவுள்“ இவ்வாறு திருமூலர் தனது திருமந்திரத்திலே அழகாகச் சொல்லி இருக்கிறார்.

“உள்ளம் பெருங்கோயில் ஊன் உடம்பு ஆலயம்
வள்ளல் பிரானுர்ககு வாய் கோபுரவாசல்
தெள்ளத்தெளிந்தோருக்கு சீவன் சிவலிங்கம்
கள்ளப்புலனைந்தும் காளா மணிவிளக்கே”

 

சி. சிவன்சுதன்
வைத்திய நிபுணர்
யாழ்.போதனா வைத்தியசாலை