கிரிக்கெட் தலைக்கவசங்கள் எந்த அளவுக்கு பாதுகாப்பானவை

நூற்று அறுபது கிராம் எடையுள்ள ஒரு கிரிட்கெட் பந்து மணிக்கு கிட்டத்தட்ட நூற்றைம்பது கிலோமீட்டர் என்ற கடுமையான வேகத்தில் வந்து ஹெல்மெட்டாலோ, அல்லது உடலின் எலும்பு அமைப்பினாலோ பாதுகாக்கப்படாத ஒரு இடத்தில் வந்து தாக்கியது, பிரகாசமான இளம் வீரர் ஃபிலிப் ஹியூஸின் உயிரையும் கிரிக்கெட் வாழ்க்கையையும் அஸ்தமிக்கச்செய்துவிட்டது.

கிரிக்கெட் உபகரணங்களில் பாதுகாப்பு சம்பந்தமான வடிவமைப்புகளில் முன்னேற்றம் காணப்பட்டு வந்துள்ளது என்றாலும், பிடரியை முழுதாக பாதுகாக்கும் விதமான ஹெல்மெட்டுகள் இதுவரை இல்லை என்ற நிலைதான் இருந்துவருகிறது.
ஹெல்மெட்டுக்கு கீழே இருக்கும் பகுதிகளை மறைப்பது மாதிரியான தொப்பி ஒன்றை ஆட்டக்காரர்கள் அணிந்துகொள்ளச் செய்யலாம். என்ற ஒரு யோசனை முன்வைக்கப்படுகிறது.

பந்து வந்து அடிக்கும்போது அதன் தாக்கத்தில் ஐம்பது முதல் எழுபது சதவீதம் வரையிலான சக்தியை உடலுக்கு அனுப்பாமல் தடுக்ககூடிய பொருட்களைக் கொண்டு இந்த தொப்பியை உருவாக்க முடியும் என்று ஆய்வு ஒன்று காட்டுகிறது.
நிறைய தடவைகளில் ஹெல்மெட்டுக்கு முன்னால் இருக்கும் கம்பி வலையில்தான் பந்து படுகிறது. சில நேரங்களில் ஹெல்மெட்டுக்கும் கம்பிக்கும் நடுவிலுள்ள இடுக்கில் பந்து புகுந்து காயம் ஏற்படும். அது மாதிரியான நேரங்களில் வெட்டுக்காயம், எலும்புத் தெரிப்பு, கண்ணிப்போதல் போன்ற காயங்கள்தான் ஏற்படுகின்றன.
பின்னந்தலையில் ஹெல்மெட்டுக்கு கீழே பிடரியில் அடிபடுவது என்பது மிகவும் அரிதுதான் என்றாலும், அங்கு அடிபட்டால்தான் மூளையில் ரத்தம் கசியும் அளவுக்கான பாதிப்பு ஏற்படுகிறது என்றும் ஆய்வு காட்டுகிறது.