மழைநீரை குடிநீர் ஆக்குவது எப்படி?

எம் குடாநாட்டின் நீர்த்தேவை முழுமையாக நிலத்தடி நீரை நம்பியதாகவே இருக்கின்றது. எம் வீட்டுத் தேவைகளை விட விவசாயத் தேவைக்கும் நாம் நிலத்தடி நீரிலேயே தங்கியிருக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம். இந்த நிலத்தடி நீர் என்பது மழை நீரானது நிலத்தின் கீழ் காணப்படும் சிறு குகைகள், துளைகளில் சேகரிக்கப்படுவதாகும். நிலத்தடி நீரோ (Ground water) மேற்பரப்பு நீரோ (surface water) எதுவாயினும் அதற்கு மூலமாக இருப்பது மழை நீரே. எம் நிலக்கட்டமைப் பின் தன்மையால் எம்மால் எந்தப் பெரிய மேற்பரப்பு நீர்த்தேக்கங்களையும் குடா நாட்டில் உருவாக்க முடியாதுள்ளது. இதனாலேயே நாம் முழுமையாக நிலத்தடி நீரை நம்பி இருக்க வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது.

அத்துடன் எமக்குக் கிடைக்கும் இந்த நிலத்தடி நீரும் தூய்மையானதாக இல்லாமல் இருப்பதுடன் எமது எதிர்காலத் தேவைகளைப் பூர்த்திசெய்யப்போதுமானதாக இல்லாமல் இருப்பதாலும் அரசால் மேற்பரப்பு நீர் மூலமான பாரிய நீர் விநியோகத்திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ஆயினும் மழை நீர் மூலமான பாரிய நீர் விநியோகத்திட்டமும் மழைநீர் திட்டம் சம்பந்தமான விழிப்புணர் குறைவாக உள்ளமையால் அந்த நீரைக் குடிநீராகப் பயன்படுத்துவதில் எம்மக்களுக்கு தெளிவின்மை உள்ளது. அந்த ஐயப்பாட்டைத் தெளிவுபடுத்துவது காலத்தின் தேவை ஆகும்.

நிலத்தடி நீரானது எடுக்கப்படும் வேகத்திலும் அளவிலும் மீள் நிரப்பலுக்கு உள்ளாக்கப்படல் வேண்டும். இல்லையேல் மேற்பரப்பு நீர் போன்றல்லாது வேகமாக உட்குகை (intrusion) மேல் எழுகை (up coming) மூலம் கடல் நீர்த் தொற்றுக்குள்ளாக நேரிடும். அதாவது வெறுமைப்படுத்தப்படும் இடைவெளி கடல் நீரால் நிரப்பப்படப் போகின்றது. இதனால் இருக்கும் மிகுதி நீரும் கடல் நீரால் தொற்றாக்கலுக்குள்ளாகப் போகின்றது. அதாவது உவராகப் போகின்றது.

இதற்கு முக்கிய காரணம் எம்மக்களின் முறையற்ற பாவனையும் குறைந்த மழைவீழ்ச்சியுமே ஆகும். முறையற்ற நீர்ப்பாவனை எனக்குறிப்பிடக் காரணம் குடாநாட்டைப் பொறுத்தவரை அனேக வீடுகள் திறந்த கிணற்றையோ குழாய்க் கிணறையோ கொண்டுள்ளன. அவர்கள் அவற்றிலிருந்து நீரைப் பெற்றுக்கொள்ள எந்தவித கட்டணமும் செலுத்த தேவையில்லை. ஆகவே அவர்களுக்கு நீரை மிக மிஞ்சிப் பயன்படுத்தவும் வீண்விரயம் செய்யவும் எந்தவிதக் கட்டுப்பாடும் இல்லை.

எனவே எம்மால் அதிகளவில் உறிஞ்சப்படும் இந்நிலத்தடி நீரானது பருவப் பெயர்ச்சி மழை மூலமே மீள்நிரப்பலுக்கு உள்ளாக்கப்படவேண்டும்.

குடாநாட்டின் மழைவீழ்ச்சி சராசரி வருடத்துக்கு 1200mm ஆகவே உள்ளது அம்மழை வீழ்ச்சியும் வருடத்தின் 2 – 3 மாதங்களுக்குள் வரையறுக்கப்பட்ட ஒன்றாகவுள்ளது. அத்துடன் இவ்வாறு வரையறுக்கப்பட்ட மாதத்துக்குள்ளும் 20 -25 நாள்களே மழையானது முழுமையாகப் பொழிகின்றது.

அதிலும் 10 -13 வீதமானது வெள்ளமாக வடிந்து நேரடியாக கடலினுள் கலந்து விடுகின்றது. 40 – 48 வீதமானது ஆவியாதல் மூலம் மீண்டும் வளிமண்டலத்துக்கு விடப்படுகின்றது. 30 – 32 வீதமான மழை நீர் மட்டுமே நிலத்தடி நீரை மீள் நிரப்பப் பயன்படுத்தப் படுகின்றது. பயன்படுத்தும் அளவு மீள் நிரப்பல் அளவைவிட மிக அதிகமாகவே உள்ளது. இதனை இங்கு விளக்கக் காரணம் குடாநாட்டின் நீர்த் தேவையை பூர்த்தி செய்ய எம் நிலத்தடி நீரானது போதுமானதாக இல்லாதுள்ளதைத் தெளிவுபடுத்தவே. இதற்கு மேலதிகமாக நாம் நீரின் தரத்தையும் இங்கே முக்கியமாகக் கருத்திற் கொள்ளவேண்டும்.

தொடரும் ….

சு.சரவணன்
இரசாயனவியலாளர்.
தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை