மழைநீரை குடிநீர் ஆக்குவது எப்படி? – பகுதி 2

மிகத்தூய்மையாக நிலத்தை வந்தடையும் மழை நீரானது நிலத்தடி நீராகச் சேமிக்கப்படுவதற்கு முதல் பல குணாதியங்களைக் கொள்கின்றது. இதற்கு முக்கிய காரணம் நீர் ஓர் சிறந்த கரைப்பானாக இருக்கின்றமையேயாகும். இதனால் நீரானாது மேற்பரப்பில் காணப்படும் பலதரப்பட்ட மாசுக்கள், அயன்கள் (ions) என்பவற்றைக் கரைத்துச் செல்வதுடன் அது தங்கும் பாறைகளையும் சிறிதளவு கரைத்து அதன் இயல்புகளையும் கொள்கிறது. இதற்கு மேலதிகமாக அவை நித்தடியில் சேகரிக்கப் பட்டுள்ள இடத்திலும் தொற்றலுக்கும் உள்ளாக்கப்படுகின்றது. அதாவது மலசல கூடத்தொற்று, விவசாய இரசாயனப் பொருள்களின் தொற்று கடல் நீருடன் கலத்தல் போன்றன.

மழை தந்த மிகத் தூய்மையான குடிநீர் ஆனது நாம் பயன்படுத்தும் நிலக்கீழ் நீராக மாறுமுன் எவ்வளவு தூரம் மாசாக்கத்துக்கு உள்ளாக்கப்படுகின்றது. என்பதை நாம் தெளிவாக இங்கே நோக்கவேண்டும்.

முக்கியமாக எமது மண்ணின் இயல்புக்கு அமையவும் நீலக்கீழ் பாறைகளின் தன்மைக்கு ஏற்பவும் அதிகளவு Ca2+, Mg2+ போன்ற உலோக அயன்களைக் கரைத்து வன்தன்மையைக் கொள்கின்றது. சாதாரணமாக குடிதண்ணீரில் காணப்படவேண்டிய வன்தன்மையின் அளவு 250mg/l இலும் குறைவாக இருக்கவேண்டிய போதிலும் எம் குடாநாட்டின் சகல இடங்களிலும் கிடைக்கும் நீரின் வன்தன்மை அண்ணளவாக 350mg/l ஆகவே உள்ளது. மழை நீரானது மண்ணின் ஊடாக செல்லமுன் பயன்படுத்தப்படுமாயின் அதில் வன்தன்மை சேர சந்தர்ப்பங்கள் இல்லை. இதன் மூலம் எம் மக்கள் அனுபவிக்கும் சிறுநீரகம் சம்பந்தமான நோய்களில் இருந்து அவர்கள் பாதுகாப்பதுடன் எமது சமயல் பாத்திரங்கள், சலவை இயந்திரங்கள், குளியலறை, கொதிநீர் கொள்கலன்கள், கல்சியம்காபனேற் படிவுகளில் இருந்தும் பாதுகாக்கப்படமுடியும்.

இதனைவிட மழை நீரானது எம் மண்ணின் மேற்பரப்பைக் கழுவியவண்ணமே நிலத்தின் கீழ் போய்ச் சேர்கின்றது. இதனால் எம்மால் விவசாயத்துக்குப் பயன்படுத்தப்படும் பல அபாயகரமான இரசாயனப் பொருள்கள் எம் நிலநீரை தொட்டடையச் செய்கின்றது. அத்துடன் விவசாயிகளால் பயன்படுத்தப்படும் மேலதிக நீரும் மேலதிக விவசாயப் பொருட்களைக் கழுவிய வண்ணம் மீண்டும் மண்ணின் ஊடாகச் சென்று நிலக்கீழ் நீரைச் சென்றடைகிறது. இதனை அடிப்படையாகக் கொண்டே நிலக்கீழ் நீரில் விவசாய இரசாயனப் பொருட்களின் அளவு அதிகரித்துச் செல்கின்றது. அதாவது அனைவரும் கூறுவது போல் எம் குடிநீரில் நைத்திரேற்றின் அளவு அதிகமாகக் காணப்படுகின்றது. உலக சுகாதார ஸ்தாபகமானது (WHO) குடிநீரில் அதிகபட்சமாக அனுமதிக்கக் கூடிய நைத்திரேற்றின் அளவை 10mg/l ஆக நிர்ணயித்துள்ளது.

ஆயினும் இது Methanoglobinemia (Blue Baby Syndrome) எனும் நோயை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட ஒரு வரையறையாகும். குடாநாட்டைப் பொறுத்தவரை நீலக்குழந்தைகள் பெரிதாக அடையாளம் காணப்படவில்லை. ஆயினும் உணவுக் கால்வாய் தொடர்பான புற்றுநோய் மிக அதிகளவில் காணப்படுகின்றது. நைத்திரேற் ஆனது புற்றுநோய் தூண்டியாக (Carcinogens) இருக்கின்றது. குடாநாட்டு நீரில் சராசரியாக 5mg/l இற்கு அதிகமாகக் காணப்படுவதுடன் அதிகளவில் இப்பொழுது உணவுக் கால்வாய் புற்றுநோயாக்கிகள் அடையாளம் காணப்பட்ட வண்ணம் உள்ளது. நைத்திரேற் தொற்று குடிநீரில் அடையாளம் காணப்படும் இடத்து அங்கு அதனைவிட அபாயகரமான நச்சு இரசாயனப் பொருள்கள் (Pestiside, weedi side, Fungiside, etc) காணப்பட்ட சாத்தியங்கள் அதிகளவில் உள்ளன. இங்கும் நிலத்தடி நீரில் இந்தத் தொற்று வரக்காரணமாக இருப்பது மழைநீர் மண்ணுடன் தொடுகையுறுவதே.
தொடரும் ….

சு.சரவணன்
இரசாயனவியலாளர்.
தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை

முன்னைய பகுதி