மழைநீரை குடிநீர் ஆக்குவது எப்படி? – பகுதி 3

இதனை விட குடாநாட்டின் நிலக் கீழ் நீர் எதிர்கொள்ளும் அடுத்த முக்கிய பிரச்சினை மலசலகூடத்தினூடான தொற்றுகளாகும். எங்கும் முறையான மலசலகூட குழிக் கட்டமைப்புக்கள் இன்மையே இதற்கு முக்கியமான காரணமாக உள்ளது. புதிய குழிகள் அமைக்கப்படும்போது உள்ளுராட்சி சபைகள் குடாநாட்டின் நிலத்தன்மைக்கு ஏற்ற Septic tank எனும் மலக்குழிகளைக் கட்ட வேண்டும் என்ற நடைமுறையை இறுக்கமாகக் கடைப்பிடிக்கின்றபோதும் 80% இற்கும் அதிகமானவை பழைய மல்குழிகளே. நிலநீரானது இதன்மூலம் அதிகளவான நோயாக்கிகளின் தொற்றலுக்கு உள்ளாகிய வண்ணமே உள்ளது.

அத்துடன் குடாநாட்டின் தீவுகள், தீவு சார்ந்த பகுதிகள், கரையோரப் பகுதிகள், கடல்நீர் ஏரிகளை அண்டிய பகுதிகள் எனக் குடாநாட்டின் பெரும் பகுதியானது கடல் நீரின் தொற்றுக்கு உள்ளாகி உவர் நிலக்கீழ் நீரைக் கொண்டதாக காணப்படுகின்றது. இந்தப் பகுதி மக்கள் மிகக் குறுகிய நேரம் வழங்கப்படும் நீர் விநியோகத்தை நம்பி இருக்கவேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இவ்வாறு வழங்கப்படும் குடிநீர் போதுமானதாகவும் தரம் வாய்ந்ததாகவும் இருப்பதில்லை.

எம்மால் விளக்கப்பட்டது போன்ற எம் நிலக்கீழ் நீர் வளமானது தொடர்ச்சியான தொற்றலுக்கு உள்ளாகி வருகின்றமையும் அது எமது எதிர்காலத் தேவையைப் பூர்த்தி செய்யப் போதுமானதாக இருக்கப்போவதில்லை என்பதையும் கருத்திற்கொண்டே அரசும் அது சார்ந்த அமைப்புக்களும் பல பெரிய திட்டங்களை முன்னெடுத்துள்ளன.

இரணைமடுவிலிருந்தான நீர் விநியோகம், நன்னீர் ஏரித் திட்டம், மழை நீர் சேகரிப்பு போன்றனவாகும். முதற்கூறிய இரு திட்டங்களும் குடாநாட்டின் குடிதண்ணீர் பிரச்சினையைப் பெரியளவில் தீர்க்கக்கூடியவையே. நன்னீர் திட்டமானது மிக நீண்டகால அடிப்படையிலேயே நன்மை தரவல்ல ஒன்று. மேற்பரப்பு நீர் விநியோகத் திட்டம் முழுமையாக எம்மக்களுக்குக் கிடைக்க இன்னும் குறைந்தது 05 வருடங்களாவது எடுக்கும்.

குடாநாட்டு நீர்வளம் மாசடையும் வேகத்தை நோக்கும் இடத்து உடனடியாக ஒரு தீர்வு எம்மக்களுக்குத் தேவைப்படுகின்றது. இதற்கு சிறந்த வழி நாமே எம் வீடுகளில் மழைநீரை சேமித்து அதிகபட்சம் குடிநீராகவாவது பயன்படுத்துவதே.

பொதுவாக மழைநீர் சேகரிப்பு என்பது மக்களுக்குப் பாதுகாப்பாக குடிநீரை பெரிதாக எந்தவித சுத்திகரிப்புகளும் இன்றிக் கிடைக்க வழிவகை செய்யும் ஒர் அரிய திட்டமாகும். காரணம் இங்கு நீர் சேகரிக்கப் பயன்படுத்தப்படும் மேற்பரப்பு பொதுவாக கூரைகள் நீரை மாசாக்கும் மாசாக்கிகளில் இருந்து பொதுவாக தனிமைப்படுத்தப்பட்ட ஒன்றாகவே காணப்படுகின்றது.

பசுபிக் கடலில் காணப்படும் தீவுகளில் இந்தத் திட்டங்கள் பெரிதாகப் பயன்படுத்தப்பட்டு அந்த நாட்டு மக்களின் குடிநீர்த் தேவையைப் பெரிதளவில் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளன. எமது நாட்டின் பல பகுதிகளில் இந்தச் சேகரிப்பின் மூலம் மக்கள் மழைநீரைச் சுத்தமான குடிநீராகப் பெறுகின்றார்கள். அதிலும் பெரிய நீர் சுத்திகரித்த நீர் வழங்கல்கள் இல்லாத பிரதேசங்களிலும் நிலக்கீழ் நீர் இரசாயன காரணிகளால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களிலும் இந்தத் திட்டம் பயனுள்ளதாக இருக்கின்றது.

ஆயினும் எம் அனேக மக்களிடம் காணப்படும் சந்தேகம் போல நாம் கூரைகளில் இருந்து மழைநீரைச் சேகரிக்கும் பொழுது கூரைகளில் காணப்படும் தூசுகள், இலைகுழைகள், பறவைகள் மற்றும் சில மிருகங்களின் எச்சங்கள் போன்றன இல்லாது நாம் சேகரிக்கும் மழை நீரை தொற்றாக்கலுக்குள்ளாக்கும் சந்தர்ப்பங்கள் உள்ளன.

தொடரும் ….

சு.சரவணன்
இரசாயனவியலாளர்.
தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை

முன்னைய பகுதி