மழைநீரை குடிநீர் ஆக்குவது எப்படி? – பகுதி 5

கூரை மேற்பரப்பில் பெறப்பட்ட மழையானது பீலிகள் மூலம் ஒன்று சேர்க்கப்பட்டு இவை நீர் சேகரிக்கும் நீர்த்தாங்கிகளின் பீலிகளில் காணப்படும் நீர் வெளிச்செல்லும் துளைகளின் மூலம் சென்றடைகின்றன. இவ்வாறு செல்லும் மழைநீரையும் மேலும் தூய்மைப்படுத்த இருவேறு வகை வடிகட்டிகள் பயன்படுத்தப்படுகின்றன. கீழே காட்டப்பட்ட படத்தில் உள்ளது போல பீலிகளின் நீர் வெளிச்செல்லும் துளைகள் பிளாஸ்டிக் வலைகள் மூலம் தடையிடப்படுகின்றன (Screening) இவற்றினால் காற்றின் மூலம் வரும் இலைகள், குழைகள் நீர் சேகரிக்கும் தொட்டியையும், வடிகட்டியையும் அடையாமற் தடுக்கப்படுகின்றன.

1

அடுத்து நீர்த் தாங்கியை அடைய முன் ஒரு வடிகட்டியினூடாக இந்த நீரானது செலுத்தப்படல் மிக உகந்தது. இந்த வடிகட்டி (filter) அமைப்பதும் மிக இலகுவான ஒன்றேயாகும். இவை சாதாரணமாக வீடுகளிலேயே அமைக்கப்படக்கூடியவை.

2

சாதாரண பிளாஸ்டிக் வாளியானது சமச்சீராக முறையில் சீராகத் துளைகள் இடப்பட்டுத் தயாரிக்கப்படும். இங்கு வாளியின் அளவானது உங்கள் நீர் சேகரிக்கும் தாங்கியின் அளவில் தங்கியிருக்கும். அதனுள் சீரான வடிவம் கொண்ட கூளாங்கற்களை 1/3 பங்கு அளவுக்கு நிரப்பி அதன் மேல் ஒரு படைக்கரியை இட்டு நிரப்பி, சிறுதுளை கொண்ட பிளாஸ்ரிக் வலையினால் வாயை இறுக்கக்கட்டுவதன் மூலம் இலகுவாகத் தயாரிக்கலாம். இங்கு நாம் சாதாரண வடி கட்டலில் பயன்படுத்தப்படும் வேறு அளவுள்ள கூளாங்கற்கள், சிறுமணல் என்பவற்றைக் கொண்டு பல படைகள் கொண்ட வடிகட்டியையும் தயார்படுத்தலாம். இதுவும் மிகச் சிறப்பாக சிறிய தொங்கல் பதார்த்தங்களையும், Bacteria போன்ற நுண்ணங்கிகளையும் நீர்த்தாங்கிகளைச் சென்றடைவதைத் தடைசெய்யும்.

ஆயினும் எம்மால் கூரைமூலம் சேகரிக்கும் நீர், பீலிகள் மூலம் வரும் வேகம் இந்தவகை நுண் வடிகட்டிகளில் வடிக்கப்படும் வேகத்துக்கு ஏதுவாக அமையப் போவதில்லை. ஆகவே நான் முன்னர் கூறிய வெறுங் கூளாங்கற்கள், கரிகள் கொண்டு தயாரிக்கப்பட்ட வடிகட்டிகளே போதுமானதாகும்.

இங்கு நாம் பயன்படுத்தும் நீர்சேகரிப்புத் தொட்டிகளின் வடிவம், அளவு என்பவற்றிற்கு ஏற்பவே நாம் வடிகட்டித் தயாரிக்கப் பயன்படுத்தும் பாத்திரத்தை தயாரித்தல் வேண்டும். இங்கு நாம் குறிப்பிட்ட வாலி மூலம் வடிவமைக்கப்படும் வடிகட்டி இன்று இலங்கையில் கட்டப்படும் சீமெந்திலான ( Ferro cement) தொட்டிகளுக்கானது. அதேபோல விட்டம் கூடிய PVC பைப்புகளையும் பயன்படுத்துவதன் மூலமும் வடிகட்டிகளை தயாரிக்க முடியும். இது பொதுவாக பிளாஸ்ரிக் நீர்த்தொட்டிகளுக்கு பொருத்தமானதாகும்.

அடுத்து நாம் மிக முக்கியமாக அறியவேண்டியவை நீர் சேகரிக்கும் தொட்டிகளாகும். ஆயினும் அதற்குமுன் நாம் முன்னர் கூறியதுபோல் எவ்வாறு முதல் மழையின் போது கூரையில் காணப்படும் அசுத்தங்களைக் கழுவிவரும் நீரை நாம் சேகரிக்கும் நீர்த் தொட்டிகளை அடையாமற் தடுக்க நாம் அடைக்கவேண்டிய முறையைக் கட்டாயம் அறிதல் வேண்டும். இதுவும் ஒர் இலகுவான அமைப்பே.

தொடரும் ….

சு.சரவணன்
இரசாயனவியலாளர்.
தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை

முன்னைய பகுதி