மழைநீரை குடிநீர் ஆக்குவது எப்படி? – பகுதி 7

இன்னும் எமது தீவுப்பகுதிக்கு மக்கள் இந்த மழைநீரைச் சிறிய பாத்திரங்களில் சேகரித்து அன்றைய சமையல் தேவைகளுக்கும் துணிகளைத் துவைப்பதற்கும் பயன்படுத்தி வருகின்றனர். மழைநீரானது மென்னீராக இருப்பதால் சவர்க்காரம் நன்கு நுரைப்பதுடன் துணிகளைத் தூய்மை செய்வதும் இலகுவான ஒன்றாக உள்ளது. இவ்வாறு சிறியளில் பயன்படுத்தப் பழக்கம் கொண்ட இந்த மக்கள் உரிய விழிப்புணர்வு இல்லாமையாலும் அந்த நீர் தொடர்பாகக் கொண்ட ஐயப்பாடுகள் காரணமாகவும் பெரிய நீர்த்தாங்கிகள் அமைக்க உரிய வசதிகள் இன்மையாலும் இந்த நீரை நீண்ட நாள் சேமித்துப் பாவிக்கும் பழக்கத்தைக் கொண்டு இருக்கவில்லை. அது தொடர்பான விழிப்புணர்வையும் அவர்களுக்கு உரிய வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியமை திணைக்களங்களதும், அரசினதும் பொறுப்பாகும்.

நீரைச் சேகரிக்கக்கூடிய நீர்தாங்கிகளும் அவற்றுக்கு ஏற்படக்கூடிய அண்ணளவான செலவீனங்களும் தரப்பட்டுள்ளன.

இந்த செலவீனங்கள் நாட்டின் விலைத் தளம்பலுக்கு ஏற்ப மாற்றமடையலாம். அத்துடன் எமக்குத் கிடைக்கக்கூடிய உள்ளுர் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தியும் நாம் எமக்கு ஏதுவான நீர்த் தொட்டிகளை அமைத்துக்கொள்ள முடியும்.

நாம் உலோகத்தால் நீர்த்தாங்கிகளைப் பயன்படுத்தும்போது கட்டாயமாக (ACRLIC – BASED) நீர்கசியவிடாத நிறப்பூச்சுக்களைப் பயன்படுத்துதல் வேண்டும். கட்டாயமாக பார உலோகங்கள் கொண்ட நிறப்பூச்சுக்களைப் பயன்படுத்துதல் வேண்டும். கட்டாயமாக பார உலோகங்களை கொண்ட நிறப்பூச்சுக்களைத் தவிர்த்தல்வேண்டும். அதேபோல் பழைய எண்ணெய், இரசாயனப் பொருள்கள் வந்த பரல்களைப் பயன்படுத்தலும் உடலுக்குத் தீங்கு ஏற்படுத்தக்கூடும். எனவே இவற்றையும் தவிர்த்தல் நன்று. நீர்த்தாங்கிகள் ஆனது ஒளி உட்புக முடியாதவாறு பாதுகாக்கப்பட்டதாகவும் நேரடி சூரிய ஒளிபடுவதை ஓரளவு தவிர்க்கப்பட்டதாகவும் பேணப்படல் வேண்டும். காரணம் நாம் சூரிய ஒளியைக் கட்டுப்படுத்துவதன் மூலம் அதனுள் வளரக்கூடிய பாசி, Algae போன்றவற்றைக் கட்டுப்படுத்திக் கொள்ளமுடியும். எனவே எமது பிரதேசத்தைப் பொறுத்தவரை ஒளி ஊடுபுகவிடவல்ல ( Clear Plastic Or Fiber Glass) நீர்த்தாங்கிகள் உகந்ததாக இருக்காது.

இந்த நீர்த்தாங்கியும் ஒவ்வொரு மழை காலத்துக்கு முற்பட்ட காலப்பகுதியிலும் சீராகச் சுத்தம் செய்யப்படுதல் வேண்டும். இதற்குச் சாதாரணமாகக் குளோரினைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

நீர்த்தாங்கியின் உள்ளே சேகரிக்கப்பட்ட நீரைப் பிறிதொரு தற்காலிக நீர்த்தாங்கியில் சேகரித்து பின்னர் தாங்கியைக் குளோரின் இட்டுச் சுத்தம் செய்து பின் மீண்டும் நீரைச்சேகரிக்கலாம். கழுவி மீள நிரப்பிய பின்னர் ஒர் இரவு நீரைப் பயன்படுத்தாமல் வைத்திருப்பதன் மூலம் தொங்கல் பொருள்கள் படிவடையச் சந்தர்ப்பம் கொடுக்கப்படல் நல்லது.

மழை நீர் சேகரிப்பைப்பற்றி நீண்ட காலமாகப் பல திட்டங்கள், விழிப்புணர்வு அறிமுகத் திட்டங்கள் என்பன மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆயினும் அவை உரிய வகையில் மக்களைச் சென்றடைவதில்லை. அதற்கு முக்கியமான காரணம் மக்களுக்குத் தாங்கள் பருகும் நீரின் தன்மை குறித்து உரிய அறிவின்மையே ஆகும். அவர்கள் தாங்கள் பருகும் குடிநீரை ஒப்பீட்டளவிலேயே தீர்மானித்து வந்துள்ளார்கள். அதாவது தங்கள் வீட்டிலுள்ள கிணற்றுநீர் உவர்த்தன்மை எனில், சிறிது தூரத்திலுள்ள பொதுக் கிணறு மூலமோ, நீர் விநியோகம் மூலமோ கிடைக்கும் நீர் அதனைவிட உவர்த்தன்மை குறைவாயின் அதனையே தெரிவு செய்தனர். அதற்கான கட்டாயமும் அவர்களுக்குக் காணப்பட்டது. இன்றும் காணப்படுகிறது. அத்துடன் யுத்தப்பரப்பில் இருந்த பிரதேசமாக இருந்தமையால் கடந்த 30 வருடங்களுக்கு மேலாகக்கிடைக்கும் வளங்களைமட்டுமே கொண்டு சகல வேலைகளையும் பூர்த்தி செய்யவேண்டிய நிர்ப்பந்தமும் இருந்தது.

தொடரும் ….

சு.சரவணன்
இரசாயனவியலாளர்.
தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை

முன்னைய பகுதி