மழைநீரை குடிநீர் ஆக்குவது எப்படி? – பகுதி 8

ஆயினும் இன்றைய நிலையில் வெளி உலகுக்குக் கிடைக்ம் சகல வசதிகளும் கிடைக்கக்கூடியதாக உள்ளது. அதி நவீன விஞ்ஞான தொழில்நுட்பங்களைக் கொண்டு எம் நீர் வளம் தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு நீர் வளம் கண்காணிக்கப்படுகின்றது. ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடனும், வெளிநாட்டு வல்லுனர்களின் உதவியுடனும் 2006ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வானது எமது குடாநாடு எதிர்நோக்கியுள்ள குடிநீர் தொடர்பான ஆபாயத் தன்மையை மிகத் தெளிவாக எடுத்துரைத்துள்ளது. அதில் நீரின் தரம், அதனைப்பாதிக்கக்கூடிய காரணிகள் குடாநாட்டைப் பொறுத்தவரை அதிகமாகக் காணப்படுகின்றமையைத் தெளிவாகச் சுட்டிக்காட்டியுள்ளது. மிக முக்கியமாக எம் நில நீர்வளம் எமது வருங்காலச் சந்ததியின் நீர்த் தேவையைப் பூர்த்தி செய்ய அளவு ரீதியில் (Quantity) போதுமானதாக இருக்கப் போவதில்ல என்பதையும் தெளிவாக விளக்கியுள்ளது.

இந்த அங்கீகரிக்கப்பட்ட ஆய்வறிக்கையின் சிபாரிசுகளின் பிரகாரமாக அரசால் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியுடன் “இரணைமடு மூலமான யாழ் – கிளிநொச்சி நீர் விநியோகத் திட்டம்” நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இது எமது குடா நாட்டுக்கு தற்போது ஏற்பட்டுள்ள நிலைமைக்கு ஒரு வரப்பிரசாதாமாகும். இது ஒன்றே எமக்கு ஏற்பட்டுள்ள பெரிய நீர்ப்பிரச்சினையை தீர்க்கவல்லது. அதேவேளை இத்திட்டம் குடாநாட்டில் மேற்கொள்ளப்பட வேண்டிய சில நடவடிக்கைகளில் மழைநீர் சேகரிப்பையும் முன்னிலைப்படுத்தியே உள்ளது. தற்போதுள்ள நிலையில் எந்த ஒரு சிறியளவிலான விநியோகத் திட்டமும் போதிய தரமான குடிநீரை மக்களுக்கு வழங்க முறையற்றதாக பேணப்படுகின்றது. கிணற்றிலிருந்து கிடைக்கும் குடிநீரும் முன்னர் கூறியது போல பெரியளவிலான தொற்றல்களைக் கொண்டதாகவே காணப்படுகின்றது.

எம்மக்களுக்குத்த தற்போது உடனடியாக இந்த பிரச்சினையை எதிர்கொள்ளக்கையில் உள்ள தீர்வு மழைநீர் சேகரிப்பே ஆகும். மழைக்காலம் ஆரம்பம் ஆகியுள்ள இந்த காலப்பகுதி நீங்கள் உங்களைத் தயார்ப்படுத்திக் கொள்ளவும். சிறந்த ஒரு சந்தர்ப்பம் ஆகும். பரீட்சார்த்தமாகவேனும், சிறிதளவிலேனும் இதனை மேற்கொண்டு பார்த்து இதன் உண்மை நிலைமையை நீங்கள் புரிந்துகொள்ளலாம்.

எம்நாட்டின் மலைப்பகுதிக்குச் சுற்றுலா செல்லும் சந்தர்ப்பம் தற்போது எம் மக்களுக்கு தாரளமாக கிடைத்துள்ளது. அங்கு செல்லும் எவரும் ஏதாவதொரு “Tea estate” க்குச் செல்லத் தவறுவதில்லை. அங்கு தேநீர் பருகி அதன் சுவை பிடித்து அந்தத் தேயிலையை வீட்டுக்கும் வாங்கி வந்து போட்டுப் பார்த்து அதன் தரம் குறைவாக இருப்பதைக் கண்டு நாம் ஏமாற்றப்பட்டு விட்டதாக அங்கலாய்த்துக் கொள்வதைக் காணக்கூடியதாக இருக்கும். நீங்கள் அவர்களைக் குறைகூறுவதை விடுத்து இந்த மழைநீரில் தேநீர் போட்டுப் பருகிப் பாருங்கள். அதே சுவையை உங்களால் உணரக்கூடியதாக இருக்கும். உங்களை நல்ல தேநீர் பருகவாவது மழைநீரைச் சேகரியுங்கள் எனக்கூறுவது ஏதாவது ஒரு வகையிலேனும் நீங்கள் மழைநீரைச் சேகரித்து அதன் தரத்தை உணர வேண்டும் என்பதற்காகவே.

சேகரிக்குமிடத்து அதில் சேதன, அசேதன மாசுக்கள் மிகச் சொற்பமாகவே காணப்படபோகின்றது. அதனால் இந்த மழைநீரை நீண்டகாலம் சேமிக்கும் போது பொளதீக இரசாயன மாற்றங்கள் மிகமிகக் குறைவாகவே காணப்படப்போகின்றது. அத்துடன் இந்தத் தொட்டிகள் நிழலான இடத்திற் பராமரிக்கப்படுமாயின் மேலும் பாதுகாப்பாக இருக்கும்..

தொடரும் ….

சு.சரவணன்
இரசாயனவியலாளர்.
தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை

முன்னைய பகுதி