மழைநீரை குடிநீர் ஆக்குவது எப்படி? – பகுதி 9

ஆயினும் உங்களுக்குக் குடிநீரினால் வயிற்றோட்டம் போன்ற நோய்கள் வருவதாகச் சந்தேகம் வரும் இடத்தும், முன்னைய மழைக்குப் பின் நீர்த்தொட்டியை முழுமையாகச் சுத்தம்செய்ய முடியாத சந்தர்ப்பம் ஏற்படும் இடத்தும், மிருக, பறவை எச்சங்கள் கலக்கும் சந்தர்ப்பம் ஏற்படும் இடத்தும் நாம் இந்தத் தொட்டிநீரைக் குளோரினேற்றம் செய்து சுத்தம் செய்து கொள்ளலாம்.

ஆயினும் மழை நீருக்கான குளோரின் தேவை (Demand) எம் கிணற்று நீரைவிட மிகக் குறைவாகவே காணப்படுகின்றது. மிகக் குறைவான அளவு குளோரினை (Bleaching Powder) இடுதலே போதுமானதாக இருக்கும். இந்தச் சந்தர்ப்பத்திலே ஒர் இரசாயனவியாளனானடியால் சில விடயங்களை விளக்கவேண்டிய கட்டுப்பாடு எனக்கு உள்ளது.

சாதாரணமாக, கிணற்றுக்குக் குளோரின் இடும்போது ஒரு தீப்பெட்டி அளவு எனும் பிரமாணத்தையே கொண்டுள்ளார்கள். எவரும் கிணற்றில் எவ்வளவு நீர் உள்ளது? அதன் தூய்மை தன்மை, இடும் குளோரின் தூளில் உள்ள குளோரினின் வீதம் என்ன? தங்கள் நீருக்குள்ள குளோரினின் தேவை என்ன (Demand)? என்பதை அண்ணளவாவேனும் கருதுவதில்லை. மேலதிகமாக குளொரினேற்றம் செய்யுமிடத்து தேவையற்ற குளோரின் நீரிற் சுவை, மணத்தையும் மாற்றுவதோடு பற்றாக்குறையாகக் குளோரின் இடும்போது என்ன தேவைக்காக் குளோரின் பயன்படுத்த உள்ளோமோ அந்தத் தேவை நிவர்த்தி செய்யப்பட முடியாமலும் போய்விடும் ஆகவே, அதனை எவ்வாறு முறையாக மேற்கொள்ளல் வேண்டும்? எவ்வளவு இடப் படல் வேண்டும் என்று சற்றுப் பார்ப்போம்.

குளோரினேற்றம்.

குளோரினைப் (Calcium Hypochloride) பாவித்துக் கிணறுகளைச் சுத்தம் செய்வதற்குக் குளோரின் அளவைக் கணக்கிடுதல்

உபகரணங்கள்
1. 20லீற்றர் கொள்ளவுள்ள வாளி
2. குளோரின்தூள் / குறுணிகள்

முறை

கிணற்றில் உள்ள நீரின் அளவைப் பின்வரும் சூத்திரம் மூலம் கணக்கிடுதல்

Capture

இங்கே
V = கிணற்றிலுள்ள நீரின் அளவு (m3)
D = கிணற்றின் விட்டம் (m)
H = நீரின் அளம் (m)

Image (6)

  • கிணற்றிலிருந்து கலங்கலற்ற நீரை எடுத்து வாளியை நிரப்புக.
    ஒரு தீப்பெட்டி குளோரின் மட்டம் தட்டாமல் அண்ணளவாக 6கிராம்
  • ஒருதேனீர்க் கரண்டி மட்டம் தட்டாமல் அண்ணளவாக 5 கிராம்.
  • 10 கிராம் குளோரினை ( 20 லீற்றர் நீருக்கு) சேர்த்து கரையும் வரை கலக்கவும்.
  • கிணற்றிலுள்ள ஒவ்வொரு( m3) நீருக்கும் 10 லீற்றர் (அரைவாளி) குளோரின் கலந்த நீரை ஊற்றி நன்கு கலக்கவும்.
  • கிணற்றை துப்பரவு செய்யும் பொழுது கிணற்றின் உட்சுவரை, மிதியைச் சுத்தம் செய்ய 05 மடங்கு குளொரினைக் கலந்து பாவிக்கவும்.
  • அதிகளவு சேதனப் பொருள்கள் காணப்படுமாயன் குளோரினேற்றம் செய்தல் உகந்ததல்ல.
  • சாதாரணமாகக் கிணற்றுக்கு 1mg/L (1ppm) எனும் செறிவில் குளோரின் தூள் இடுவதே போதுமானதாக இருக்கும். சாதாரணமாகக் கடைகளிற் கிடைக்கும் குளோரின் தூள் 30 வீதம் குளோரினைக் கொண்டது. எனினும் கடைகளிற் பராமரிக்கும் முறை அதன் வயது போன்றவற்றைக் கொண்டு அனேகமாக 20 தொடக்கம் 25 வீத அளவு செறிவிலேயே குளோரின் காணப்படுகின்றது. மழைநீர்த் தொட்டிகளுக்கு குளோரின் இடும்போது 0.1 – 0.2 mg/L செறிவில் இடுதலே போதுமானதாக இருக்கும்.

தொடரும் ….

சு.சரவணன்
இரசாயனவியலாளர்.
தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை

முன்னைய பகுதி