மழைநீரை குடிநீர் ஆக்குவது எப்படி? – பகுதி 10

இந்த மழைகாலத்தில் அதன் பயனைப்பெற விரும்புவோர் இந்த மழை காலத்தில் அதனைப் பரீட்சார்த்தமாகவேனும் பயன்படுத்திப் பார்க்க சேமிக்க முயலலாம். அதன் மென்மையான சுவையை உணர்ந்த பின் நீங்கள் தொடர்ச்சியாக அதைப் பயன்படுத்த முயல்வீர்கள் என்பது நிச்சயமான ஒன்று. குடிநீர் தட்டுப்பாடு உள்ள பிரதேச மக்கள் மழைநீரையும் தமது குடிநீர்மூலமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற விழிப்புணர்வு ஏற்பட இது ஒரு சந்தர்ப்பமாக அமையும்.

மக்கள் பருகவேண்டிய குடிநீரின் தரமானது (Institute of Sri Lanka Standard) இலங்கையில் தர நிர்ணய நிறுவனத்தால் வரையறை செய்யப்பட்டுள்ளது. குடிநீரில் உள்ள மாசுக்கள், கனியுப்புக்கள் என்பவற்றின் அளவு, அதனால் மனிதனில் சுகாதார ரீதியில் ஏற்படும் நோய்த்தாக்கத்தைக் மையமாகக் கொண்டு நிர்ணயம் செய்யப்பட்டு 1983 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ள SLS 614 பகுதி I மற்றும் பகுதி II ஆகியனவாகும். இந்தத் தரத்தின் விரும்பத்தகுந்த எல்லை ( Disirable Limits)க்குள் குடாநாட்டின் பெரும்பாலான நீர்வளத்தின் தரம் இல்ல. இந்த தர நிர்ணயத்துடன் ஒப்பிடுகையிற் குடாநாட்டிற் குடிநீர் வளமே இல்லை எனும் நிலைக்கே நாம் செல்ல வேண்டிய நிலைமை.

இத்தகைய நிலைமையைத் தெளிவாகப் புரிந்து கொண்டுள்ள வர்த்தக சமூகம் மக்களுக்கு ஏற்றது எனும் பெயரில் அதிகளவான போத்தல்களில் அடைக்கப்பட்டுள்ள குடிநீரையும். விதம் விதமான வடிகட்டிகளையும் (filters) எம் உள்ளுர்ச் சந்தையில் தாராள பாவனைக்கு விட்டுள்ளன. எனக்குத் தெரிந்த மட்டில் 35 இற்கும் மேற்பட்ட வகையான குடிநீர்ப் போத்தல்கள் (Bottle Drinking) கடைகளிற் கிடைக்கின்றன.

எமது மக்களுக்கு போத்தல்களில் அடைக்கப்பட்ட குடிநீர் என்றவுடன் அது Mineral Water ஆகவே தோற்றமளிக்கின்றது. ஆனால் இன்று கடைகளில் கிடைக்கும் அநேகமான போத்தல் நீர்கள் mineral water இல்லை. ஆயினும் அவையும் தம்பெயர்களைத் தெளிவாக Bottle Drinking Water எனக் குறிப்பிட்டுள்ளன. சாதாரண நிலத்தடி நீரை Reverse Osmosis என்னும் தொழில்நுட்பம் கொண்டு இருக்கும் கனியுப்புக்கள் அனைத்தையும் அகற்றிப் போத்தல்களில் விற்பனை செய்கின்றார்கள். மேலதிக எந்தக் கனியுப்புப் பதார்த்தங்களையும் இவர்கள் இந்த நீருக்குச் சேர்ப்பதில்லை. அவற்றின் PH பெறுமானமும் குறைவாகவே காணப்படுகின்றது.

தொடரும் ….

சு.சரவணன்
இரசாயனவியலாளர்.
தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை

முன்னைய பகுதி