மழைநீரை குடிநீர் ஆக்குவது எப்படி? – பகுதி 11

அதேபோல் விதவிதமான வடிகட்டிகள் இதனைப் பயன்படுத்துபவர்களுக்கும், பொதுவாகப் பணம் படைத்தவர்களுக்கும் படித்தவர்களுமாகவே இருக்கின்றனர். அநேகமாக அலுவலகங்கள், வங்கிகள் போன்றவற்றில் இத்தகைய வடிகட்டிகள் தாராளமாகக் காணப்படுகின்றன. இது ஒர் அழகுக்காட்சிப் பொருளாகவும் அமைந்துவிட்டது. அத்துடன் வீணாக மக்களுக்கு வடிகட்டிய தூய நீரைக் குடிக்கின்றோம் எனும் மாயத் தோற்றத்தை ஏற்படுத்தும் ஒன்றாகவும் காணப்படுகின்றது. இதனைக் கூறவேண்டியதன் காரணம் அந்த வடிகட்டிகள் எமது குடாநாட்டின் நீர்த்தன்மைகள் அதில் நாம் எதனைச் சுத்திகரிக்க வேண்டுமோ அதனைச் சுத்திகரிக்கவேண்டிய கட்டமைப்புகளைக் கொண்டுள்ளனவா என்பதையும் கொண்டே ஆகும். சாதாரணமாகக் கடைகளிற் காணப்படும் வடிகட்டிகள் கலங்கல் தன்மையையும், நிறத்தையுமே குறைக்கவல்லன.

இவ்வாறு குடநாட்டில் நிலநீர்வளம் குடிப்பதற்கு விரும்பத்தகுந்ததாக இல்லாமையும், அதற்கு மாற்றீடாகப் பயன்படுத்த நினைக்கும் அதிக விலைகொண்ட போத்தல்நீர், வடிகட்டிகள் என்பன கேள்விக்குரியதாக இருக்கம் நிலையில் இரணைமடு மூலமான மேற்பரப்பு நீர்விநியோகம் எமக்குக் கிடைக்க ஒரு குறிப்பிட்ட காலம் எடுக்கும் என்ற நிலையிலும் எமது மக்களுக்கு உடனடித் தீர்வாக அமையப்போவது இந்த மழைநீர் சேகரிப்பே.

இந்த குடாநாட்டின் மண்ணின் தன்மையால் எம்மால் மேற்பரப்பிற் பாரிய நீர்த்தேக்கங்களாக இந்த மழைநீரைச் சேகரிக்க இயலாது. ஆகவே நாம் இவ்வாறு சிறு அளவில் நீர்த்தொட்டிகளின் மேற்பரப்பிலும் மற்றும் நிலக்கீழ் நீரை மீள்நிரம்பல் கொள்ளச் செய்வதன்மூலமே எமக்குக் கிடைக்கும். இவ்வரிய மழைநீரை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

மழைநீர் என்பது ஒரு மிகச் சிறந்த குடிநீராகும். அதனைச் சேமிப்பதும், அதனை முழுமையாகப் பயன்படுத்தி அதன் தன்மையைப் பெற்றுக்கொள்வதும் மக்களாகிய உங்கள் கையிலே உள்ளது.

சு.சரவணன்
இரசாயனவியலாளர்.
தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை

முன்னைய பகுதி