அருமருந்தான மழை நீரைக் குடிக்க மறுப்பது ஏன்?

சூரியக் கடவுளின் சத்தியினால் சுத்திகரிக்கப்பட்டு எங்கும் பொழியும் மழை நீரே குடிப்பதற்கு அதிசிறந்த நீர் என உலகில் நடத்தப்பட்ட எல்லா ஆராய்ச்சிகளும் உறுதிசெய்து வருகின்றன.

கிணற்றுநீர், ஆற்றுநீர் போத்தலில் அடைக்கப்பட்டுவரும் நீர், சாதாரண கொதித்து ஆறியநீர் என எல்லாவகையான நீருடனும் ஒப்பிடும்பொழுது மழைநீரே குடிப்பதற்கு அதிகூடிய பாதுகாப்பான நீர் என்பது ஐயம் திரிபற நீருபிக்கப்பட்டிருக்கிறது.

நீரிற் கரைந்திருக்கும் பல இரசாயனப் பதார்த்தங்களும் கனி உப்புக்களும் பல ஆபத்தான நோய்களுக்குக் காரணமாக அமைகின்றன. மழைிநீரில் இவ்வாறான ஆபத்தான இரசாயனப் பொருள்களோ கனியுப்புக்களோ இல்லை. எனவே மழைநீரை அருந்துவதன் மூலம் பல சிறுநீரகம் சம்பந்தமான நோய்கள், புற்றுநோய்கள், தொற்று நோய்கள், குடல் சம்பந்தமான நோய்கள் போன்ற பல கொடிய நோய்களிலிருந்து எம்மைக் காப்பாற்றிக் கொள்ளமுடியும். நீரை கொதிக்க வைப்பதன்மூலம் நீரில் கரைந்துள்ள இரசாயனப் பொருள்களையோ கனியுப்புக்களையோ அகற்றமுடியாது. வடிகட்டும் செயன்முறை மூலமும் இவற்றை முற்றாக அகற்றி விடமுடியாது. எனவே நாம் மழை நீரைச் சேமித்துக் குடிநீராகப் பாவிக்கும் நடைமுறையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

மழைநீரைக் குடிநீராகப் பாவிக்கும் பழக்கத்தை ஊக்குவிப்பதற்குப் பல தரப்பினாலும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த முயற்சிகளுக்கு மக்களிடையே கிடைக்கும் ஆதரவும் ஊக்கமும் போதுமானதாக இல்லை. இதற்கான காரணங்கள் ஆராயப்படவேண்டும். இது சம்பந்தமான விழிப்புணர்வு மக்களிடையே ஏற்பட வேண்டும்.

வீடுகளிலும் பொது இடங்களிலும் பாடாலைகளிலும் மழை நீர் சேமிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து இதனைக் குடிநீராகப் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

Dr.சி.சிவன்சுதன்
வைத்திய நிபுணர்
யாழ் போதனா வைத்தியசாலை