மதுவை நிறுத்துவதில் மருந்துகளின் பங்களிப்பு

அநேகமான மக்கள் நம்புவதுபோல் மது பாவிப்பதனை மாத்திரைகள் பாவித்தோ அல்லது ஊசிகள் போட்டோ மறந்துவிடச் செய்ய முடியாது.

உண்மையில் மதுவிலிருந்து ஒருவர் விடுபட விரும்பினால் மதுவானது தனக்குப் பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றது என்பதனை உணர்ந்து கொண்டு, தன்னுடைய மன வலிமையின் துணைகொண்டு அதிலிருந்து விடுபடுதலே சாத்தியமானதாகும்.

அவ்வாறின்றி மதுவை நினைத்தவுடன் மறப்பதற்கான, மது இருக்கும் திசையையே நாடாமலிப்பதற்கான, அதிசயமளிக்கும் மருந்துகள் எவை இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

ஆயினும் மது அடிமை நிலையிலிருந்து வெளிவர விரும்பும் சிலருக்கு சிலவேளைகளில் Disulifiram (டைசல்பி(F)ரம்) என்ற குளிசையைப் பாவிக்குமாறு ஆலோசனை வழங்கப்படுவதுண்டு. (டைசல்பி(F)ரம்) பற்றிய சில விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

  • மதுவைப் பூரணமாக நிறுத்துவதற்கான சிகிச்சையின் ஒரு படிநிலையில் மது பாவனையாளர் தமது மனக்கட்டுப்பாட்டுடன் மீண்டும் மதுவை நாடாமலிருப்பதற்கு உதவி செய்யுமுகமாக (டைசல்பி(F)ரம்) குளிசைகள் கொடுக்கப்படுகின்றன.
  • இந்தக் குளிசையை உட்கொண்டுவிட்டு ஒருவர் மது அருந்துவராயின் அவருக்குத் தீவிரமான, தாங்க முடியாத உடல் உபாதைகள் ஏற்படும். வயிற்றைப் பிரட்டுதல், வாந்தி, நெஞ்சடைத்தல், முகம் சிவத்தல், குருதியமுக்கம் குறைதல், தலை சுற்றுதல், மயக்கம் வருதல் எனப் பல்வேறு விதமான கடுமையான ஆபத்தை விளைவிக்கக் கூடிய அறிகுறிகள் ஏற்படும். இந்த அறிகுறிகளை அனுபவித்த அல்லது அவற்றைப்பற்றி அறிந்துகொள்ளும் நபர்கள் இந்தக் குளிசையை எடுக்கும் வரை தாமாகவே மது அருந்துவதைத் தவிர்த்துக் கொள்வர்.
  • குணமடைந்து கொண்டுவரும் ஒரு மது அடிமை நோயாளி, குறிப்பிட்ட காலத்திற்கு இந்தக் குளிசையை நாள்தோறும் தவறாது எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். அதனை உறுதியாகப் பின்பற்றுவதற்கு அவரது குடும்ப உறவினர் ஒருவர் உதவி செய்யலாம். மதுவுக்கு அடிமையான ஒருவர் மதுவில்லா வாழ்க்கையை வாழ்வதற்கு (டைசல்பி(F)ரம்) எனப்படும் இம்மருந்து பெருமளவு உதவி புரியும்.
  • மது பாவிக்காத வேளைகளிலும் இந்த குளிசைகளினால் ஏற்படக்கூடிய பக்கவிளைவுகள் பற்றி வைத்தியரிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளலலாம்.

இந்தக் குளிசை பாவிக்கின்ற பொழுது மது அருந்தினால் எவ்வாறான உபாதைகள் ஏற்படும் என ஒருவர் அறிய விரும்பினால் அல்லது அனுபவிக்க விரும்பினால் அதற்கு “வெறுப்பேற்றும் சிகிச்சை ( Aversion therapy) என்கின்ற ஒரு சிகிச்சையைப் பெற்றுக் கொள்ளலாம்.

இந்த சிகிச்சையில் மது அடிமை நிலையில் உள்ளவர், நச்சகற்றல் சிகிச்சையின் பின்பு, தொடர்ச்சியாக ஐந்து நாட்களுக்கு (டைசல்பி(F)ரம்) குளிசைகளைப் பாவிப்பர். பின்னர் ஆறாவது நாள் அவர் தனக்குப் பிடித்தமான மதுவை சிகிச்சை நிலையத்தில் இருந்தவாறே அருந்துமாறு அறிவுறுத்தப்படுவர். மது அருந்தக் கொடுக்கப்படும். அந்த வேளைகளில் ஏற்படக்கூடிய மருத்துவப் பிரச்சினைகளைச் சமாளிப்பதற்கு ஒரு மருத்துவக்குழு தயாராக இருக்கம். இதன் போது ஏற்படுகின்ற தீவிரமான கஷ்டமான அனுபவங்களினால் மீண்டும் ஒருவர் அவ்வாறான முயற்சியை, குளிசைகளோடு மது அருந்துதலை நாடமாட்டார்.

ஆயினும் இந்த “வெறுப்பேற்றும் சிகிச்சை” என்பது மிகவும் அவசியமானது என்றில்லை. எல்லாம் அவரவர் மனவலிமையைப் பொறுத்ததே.

இதனை விட குடிப்பவர்கள் மதுவின் மீது கொண்டுள்ள வேட்கையைக் குறைப்பதற்காகவும், குடிக்கின்ற பொழுது உள்ளெடுக்கும் மதுவின் அளவைக் குறைப்பதற்கும் உதவி செய்யும் Acamprosate, Naltrexone, Topiramate போன்ற மருந்துகளும் பாவனையில் இருக்கின்றன.
இவை பற்றிய மேலதிக விபரங்களை உங்கள் வைத்தியரோடு கதைத்து அறிந்து கொள்ளலாம்.

 

Dr. சா. சிவயோகன்
உளநல மருத்துவ நிபுணர்