மதுவை தொடர்ச்சியாக விலத்தி வைத்தல்

மது அடிமை நிலையிலிருந்து விடுபட்டதன் பின்பு திரும்பவும் மதுவை நாடாது, மதுவில்லாத ஒரு வாழ்க்கையைத் தொடர்ந்து தக்க வைத்துக்கொள்வது என்பது மிகவும் சாலான ஒன்றாகும் அதற்கு உதவக்கூடிய சில விடயங்களை இனிப் பார்க்கலாம்.

மதுவை கைவிட்டதன் பின்பு, உடல் ஆரோக்கியத்தைப் பேணுதல் மிகவும் முக்கியமானதாகும். நல்ல இயற்கையான , சத்துள்ள உணவுகளைச் சரியான அளவுகளில் ஒழுங்கான நேர இடைவெளிகளில் உள்ளெடுக்க வேண்டும். அதுபோல் உடல் வருத்தங்கள் ஏதாவது இருப்பதாக அறியப்பட்டால் அவற்றிற்கு தாமதியாது சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியமானது. அத்துடன் போதுமானளவு ஓய்வும் தூக்கமும் கிடைப்பதனை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

மதுவிலிருந்து விலகி இருக்க விரும்புவர் தனது நடத்தைக் கோலத்தில் மாற்றங்களை ஏற்படுத்துவது பிரயோசனமானது. இதுவரை காலமும் இருந்தது போல் படபடப்பாகவும், சிடு சிடுப்பாகவும், பின்விளைவுகளைப் பற்றி யோசிக்காதும் இருந்த நடத்தைகளில் மாற்றங்களை ஏற்படுத்தி, சாந்தமாகவும், அமைதியாகவும், நிதானமாகவும் நடந்து கொள்ள முயற்சிக்கலாம். குறிப்பாக அந்தரப்படுதலையும், எடுத்த எடுப்பில் கோபப்படுதலையும் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

ஒருவர் தான் செய்கின்ற வேலைகளில் மிகுந்த ஆர்வத்தோடு ஈடுபடுவதும், வீட்டுப் பொறுப்புக்களைப் படிப்படியாக ஏற்றுக் கொண்டு செயற்படுவதும் அவரது சுயமதிப்பீட்டை உயர்த்திக் கொள்ள உதவும்.

முக்கியமாக, குடும்ப உறவுகளில் மாற்றத்தை உண்டாக்க வேண்டும், மதுவுக்கு அடிமையாகிப் போயிருந்த உரு நிலையில் குடும்பத்தவருடன் செலவிட்டிருந்த நேரத்தின் அளவும், தரமும் மிகவும் குறைவானதாகவே இருந்திருக்கும், மதுவில்லாத இந்தப் புதிய வாழ்வில் மனைவி, பிள்ளைகளுடன் அதிக நேரத்தைத் தரமானதாகச் செலவிடல் அவசியம். அவர்களுடன் அன்பாகக் கதைக்கலாம். அவர்களை அழைத்துக்கொண்டு உறவினர், நண்பர்கள் வீடு செல்லாம். அவர்களின் கல்வி, வேலை ஏனைய விடயங்கள் பற்றிக் கலந்துரையாடலாம். அவர்களின் சுக துக்கங்களில் பங்பெடுத்துக் கொள்ளலாம். அதுபோல் தத்தமது மகிழ்சிகளையும், மனப் பாரங்களையும் குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்ளலாம்.

மதுவுக்கு அடிமையாகியிருந்த காலப்பகுதியில் மிகப் பெரும்பான்மையான நேரங்கள் மதுவை உள்ளெடுப்பதிலும், மதுவைப் பற்றிசி சிந்திப்பதிலுமே கழிந்திருக்கும், மதுவை விட்டிருக்கும் ஒரு காலப்பகுதியில் நிறைய நேரங்கள் என்ன செய்வதென்று தெரியாது மிஞ்சியிருக்கும் இவ்வேளைகளில் ஒருவர் தனது பழைய பொழுதுபோக்குகள், ஆர்வங்களைப் புதுப்பித்துக் கொள்ளுதல் தேவையானது. விளையாட்டு, வீட்டுத்தோட்டம், கலைகளில், ஈடுபடுதல் போன்ற பல விடயங்கள் பிரயோசனமானவை. அதுபோல் புதிய ஆர்வங்களையும், பொழுதுபோக்குச் செயற்பாடுகளையும் வளர்த்துக் கொள்வதும் முக்கியமானது. இவையாவும் மதுவில்லாத வாழ்க்கையின் சுவையையும், புத்துணர்ச்சியையும் அதிகரிக்க உதவிசெய்யும்.

நட்பு வட்டம். சமூகம் சார்ந்த விடயங்களிலும் சில மாற்றங்கள் தேவைப்படலாம். புதிய குடிக்காத நண்பர்களை ஏற்படுத்திக் கொள்ளல் பிரயோசனமானது. குடிக்கின்ற வேளைகளில் மனதைப் புண்படுத்தியவர்களின் நல்ல குணங்களைப் பற்றி சிந்தித்தல், வேலை செய்யும் இடத்தில் விட்டுப்போன உடைந்துபோன உறவுகளை பலப்படுத்திக் கொள்ளல், தான் வாழும் சமூகத்தோடு புதிய உறவினை ஏற்படுத்திக் கொள்ளல், நம்பிக்கைகளை வளர்த்துக் கொள்ளுதல் போன்ற பலவிதமான தனி நபர் மற்றும் சமூகம் சார்ந்த முயற்சிகள் ஒருவர் மதுவைத் தொடர்ந்தும் நாடாதிருக்க உதவி செய்யும்.

சமயம் மற்றும் ஆன்மீக தளங்களிலே ஈடுபடலாம். எங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் என்ற சக்தியிடம் நம்பிக்கையுடன் எங்களை ஒப்படைப்பதுவும், எங்களை அடையாளங்காணுவதும் நல்லது. தினமும் காலையும் மாலையும் மனதாற தூய்மையான உள்ளத்துடன் பிரார்த்தனை செய்யலாம்.

Dr. சா. சிவயோகன்
உளநல மருத்துவ நிபுணர்