எமது பழக்கவழக்கங்களும் உணவு முறைகளுமே வாய்ப்புற்று நோய்க்குக் காரணங்கள்DR.வ.தேவானந்தம்

“பாலோடு தேன் கலந்தற்றே பனி மொழி
வாலெயிறும் ஊறி நீர்”

என்பான் வள்ளுவர்.

பனி போன்ற குளிர்ச்சியான சொற்களைப் பேசுகின்ற என் காதலியின் பற்களிலிருந்து வருகின்ற நீர் பாலும் தேனும் கலந்தது போல் இனிமையானது என்பது இதன் பொருள். காதலியின் எச்சில் அழுதம் என்று இலக்கியங்கள் விளிக்கின்றன. எச்சில் அமுதமோ இல்லையோ அது நாற்றமில்லாமல் வாயில் புற்றுநோய் இல்லாமல் இருக்க வாய்ச்சுகாதாரமும் மிகவும் முக்கியமானதாகும்.

புற்றுநோயில் புற்றுநோய்க்கலங்கள் ஒட்டுமொத்த வெளிப்புறத் தோற்றம் கால்களை விரித்திருக்கும். நண்டின் தோற்றத்தை ஒத்திருப்பதால் அதற்கு கான்சர் (Can – ccr) என மருத்துவ ஆய்வாளர்கள் பெயரிட்டார்கள்.

உலக சுகாதார ஸ்தாபனம் மனித உயிர்களைப் பலி கொள்ளும் முக்கிய பத்துக்காரணிகளில் புற்றுநோயும் முக்கியமானது என இனங்காட்டியுள்ளது. யாழ்ப்பாணத்தில் ஆண் புற்றுநோயாளர்களில் வாய்ப்புற்று நோயே அதிகமாக காணப்படுகின்றது. இலங்கையில் கூடுதலாக 50 வயதிற்கு மேற்ப்பட்டவர்களில் ஆண்களில் 29.45 வீதமும் பெண்களில் 10 வீதமும் காணப்படுவதாக அண்மைத்தரவுகள் சுட்டிக்காட்டப்படுகின்றன.

புற்று நோய் என்றால் என்னவென்று விளக்க முற்படுவோமானால் ஒரு காயம் மாறும் போது அந்தக் காயத்தின் இடைவெளி மூடும் வரை பிரிகின்றது. காய இடைவெளி மூடப்பட்டதும். சட்டென பிரிவடைவது நின்று விடும் அடிப்படையாக இழையக் கலங்களிலுள்ள குரொம சோம்களில் எந்த அளவிற்கு கலங்கள் இரட்டிப்படைவது நிறுத்தப்பட வேண்டும் என்ற பதிவிருக்கும் ஆனால் அந்தக்காயம் ஆறிய பின் கலங்கள் இரட்டிப்படைவது நிறுத்தப்பட்டால் என்ன நடைபெறும். அந்த இடம் தொடர்ந்து வளர்ந்து பெரிதாகிக்கொண்டேபோகும். புற்று நோயில் ஏதாவதொரு காரணியின் ( Carcinogen) தூண்டுகை ஒர் இழையத்தின் கலங்களின் DNA யில் மாற்றத்தை ஏற்படுத்தி அல்லது பாதித்து அதில் விவாகாரத்தை ( Nutation) தோற்றுவித்து புற்றுநோயக் கலங்களாக மாற்றுகின்றது. இவை அசாதாரண அமைப்புடைய கலங்களாகும்.

இக்கலங்கள் தேவையில்லாமல் இரட்டிப்படைந்து புற்றுநோயாக மாறுகின்றது. இக்கலங்கள் இரத்த ஒட்டத்தினூடாகவும் இழைய இடைவெளிகளினூடாகவும் ஒர் இடத்தில் இருந்து இன்னோரிடத்திற்கு பரவி அங்கு வளரக் கூடியவை. ( Mctas tasis)

எமது பழக்கவழக்கங்களும் உணவு முறையுமே வாய்ப்புற்று நோய்க்கு காரணங்களாக அமைகின்றன. இந்தப்பாதகமான காரணிகள் ஒன்று அல்லது பலவோ சேர்ந்து செயற்படுவதன் பிரதிபலனாக வாய்ப்புற்று நோய் ஏற்படுகின்றது. புகையிலை, சிகிரெட், பீடி, சுருட்டு, என்ற வகையிலே அல்லது வெற்றிலையுடன் சேர்த்துப் பாவித்தல், வாசனைப் பாக்கைத் தனியாக பாவித்தல், சாராயம், கள்ளு, கசிப்பு, என்பன குடித்தல், HIV தொற்றுள்ள பெண்களுடன் தொடர்பு வைத்திருத்தல். ( கூரான பாதிப்படைந்த ஆயுதங்களால் பல்லைக் காயப்படுத்துதல்) நீண்டகாலமாகவுள்ள மாறத புண், விற்றமின் ஏ, விற்றமின் சீ குறைபாடு போசாக்கின்மை வாய்ச்சுகாதாரமின்மை போன்றவை முக்கியமாகும்.

புற்றுநோய்க்கான எச்சரிக்கை அறிகுறிகள் எவையென பார்ப்போமானாயின் வாய் உள்ள மேலணி நாக்கு அல்லது உதட்டில் உள்ள மாறாத புண் புற்றுநோய் முன்னிலைகளான உரிக்க முடியாத வெண்படலம், உணவு விழுங்குவதில் அல்லது அரைத்தலில் கடினமாக இருப்பது, வாய் திறப்பது அல்லது நாக்கை வெளியில் நீட்டுவது படிபடையாக குறைவடைதல், வாய் அல்லது கன்னத்தில் குறுகிய காலத்தில் அசாதாரன வளர்ச்சியடையும் கட்டி வாயில் இருந்து இரத்தம் வடிதல், வாய்ப்பகுதியில் உணர்ச்சி அற்று போதல், உறைப்பு உண்ணும் போது அதிக எரிவுகளாகும்.

புற்று நோயை எவ்வாறு தவிர்க்கலாம் என நோக்கினால் மேற்கூறப்பட்ட பாதகமான காரணிகளை அறிந்து கொண்டு உங்கள் பழக்கவழக்கங்களை மாற்றி அப்பாதகமான காரணிகளை தவிர்க்க வேண்டும். உணவுப் பழக்கவழக்கத்தைக் கருத்தில் கொண்டால் நாம் பாரம்பரிய உணவு முறைகளைத் தவிர்த்து மேலைத்தேய உணவு முறைகளுக்கு பழக்கப்பட்டு எண்ணெய் கூடிய ஆகாரம், இறைச்சி போன்றவற்றை அதிகமாக உண்டு கொழுப்புச் சத்து கூடி உடல் பருமனும் கூடுகின்றது. அதிக கொழுப்பு அடங்கிய உணவு, அதிக உப்பிட்ட உணவு அதிக உறைப்புச் சேர்த்த உணவு பொரித்த கருகிய உணவு, பொரித்த எண்ணெய்யை திரும்பத்திரும்ப உபயோகிப்பது, நிற மூட்டி உணவு இறைச்சி வகைகளை திரும்பத் திரும்ப சூடாக்கி உண்ணும் பழக்கம் போன்றவற்றையும் சில வகைப் புற்று நோய்காரணமாக அமைகின்றது.

புற்றுநோயைத் நார்த்தன்மை கூடிய தானிய வகைகள் பச்சையிலைக்கறிவகைகள், மஞ்சள் பழவகைகள், அதிகமாக உண்ண வேண்டும். பச்சையிலைக்கறி, மஞ்சள் பழங்களில் விற்றமின் A, C அதிகமாக காணப்படுகிறது.

விற்றமின் A மேலணிக் கலங்கள் தன்மையைப் பேணவும் உதவுகின்றது. விற்றமின் C தொகுப்பிழைய Connective Tissue உருவாக்குவதுக்கும் அதன் இயற்கையான தன்மையை பேணவும் உதவுகின்றது. இவற்றின் இயற்கைத் தன்மை பேணப்படும் போது புற்று நோய்க் காரணிகள் கலங்களில் மாற்றத்தை ஏற்படுத்துவது தவிர்க்கப்படுகின்றது. அத்துடன் எச்சரிக்கை அறிகுறிகளை அறிந்து சந்தேகத்திற்கு இடமான வகையில் ஏற்படுத்தும் மாற்றங்களை உடனுக்குடன் பல்மருத்துவரிடம் காட்டுவதால் கண்டறிய முடியும். இதனால் உங்களுக்கு குணமடையும் நோக்கிலான சிகிச்சையை வழங்க முடியும்.

புற்று நோயை ஆரம்பத்தில் கண்டுபிடித்தால் முற்றாக குணப்படுத்தலாம். புற்றுநோய்ச்சிகிச்சை முறைகளை ஆராய்வோமானால் மூன்று வகையான சிகிச்சை முறைகள் கையாளப்படுகின்றன.

அறுவைச்சிகிச்சை முறை (Surgery) கதிர்வீச்சு முறை ( Radiation), புற்றுநோய் எதிர்ப்பு மருந்து (Chemotherapy), புற்றுநோய் குறிப்பிட்ட இடத்தில் மட்டும் இருக்குமானால் அறுவைச்சிகிச்சை மூலம் அப்பகுதியை வெட்டி அகற்றி விடலாம்.

கதிர்வீச்சு முறையில் புற்றுநோய்க் கலங்கள் கொல்லப்படுகின்றன. அல்லது செயலிழக்கப்படுகின்றன. இதனால் புற்றுநோய்க்கலங்கள் மேலும் பிரிவது தடுக்கப்படுகின்றது. கதிர்வீச்சு மருத்துவம் ஆரம்ப நிலையில் கட்டுப்படுத்தவும் செய்கின்றது. புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகளிலுள்ள கல நச்சு புற்றுநோய்க்கலங்களை கொல்லும் அல்லது செயலிழக்கச் செய்யும்.

புற்று நோய் எதிர்ப்பு மருந்துகள் வாயால் அல்லது ஊசியால் வழங்க்படுவதால் இரத்தத்தில் கலந்து வெவ்வேறு பகுதிகறுக்கு எடுத்துச் செல்லக் கூடியவை. இவை இரத்தப் புற்றுநோய் அல்லது பரவும் தன்மையுள்ள புற்றுநோய்களுக்கு அதிகம் பாவிக்கப்படுகிறது.

வெவ்வேறு வகையான புற்றுநோய்கள் இச்சிகிச்சை முறையில் ஏதாவது தொன்றிற்கு அதிகமாக அழிக்கப்படும் தன்மை வாய்ந்தது. சில வகைப்புற்றுநோய்கள் இச்சிகிச்சை முறைகளை இணைத்துச் செய்யும் போது விரைவாக அழிக்கப்படக் கூடியவை.

புற்று நோய்க்கும் மனதுக்கும் சம்பந்தம் உண்டு. புற்றுநோய் என்று கண்டுபிடித்து வெளிப்படுத்துவதிலிருந்து சிகிச்சை முறைகள் கையாளப்படும் வரைக்கும் நோய் மனதைப்பாதித்து மனச்சிதைவிற்கு ஆளாகாமலிருக்க ஆலோசனை முறைகளும் மனநல மருத்துவமும் உள்ளன. புற்றுநோயிலிருந்து மீள வெறும் சிகிச்சை மட்டும் போதாது அன்பு அரவணைப்பும் அவசியம்.

DR.வ.தேவானந்தம்
பல்மருத்துவர்.
யாழ். போதனா வைத்தியசாலை