அபீபாவினால் ஏற்படும் ஈரல் சீழ்க்கட்டிகள் ( Amoebic liver abscess) மருத்துவர். எஸ். கேதிஸ்வரன்

அபீபாவினால் ஏற்படும் ஈரல் சீழ்க்கட்டிகள் ( Amoebic liver abscess)
ஒவ்வொரு வாரமும் இரண்டு மூன்று பேராவது ஈரல் சீழ்க்கட்டிகளுடன் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகின்றார்கள். இந்த நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடல் வேதனையை அளிப்பதுடன் சிலவேளைகளில் மரணத்தையும் ஏற்படுத்தக் கூடியது. தடுக்கப்படக்கூடிய இந்த நோய் வடபகுதி மக்களிடையே பரவியிருக்கக் காரணம், இந்த நோய் பற்றிய விழிப்புர்வு இன்மையும். அறியாமையுமாகும். பெரும்பாலான ஈரல் சீழ்க்கட்டிகள் என்ரமீபா ஹிஸ் ரோலிடிகா ( Entamoaba Histotlitica) எனப்படும் ஒரு கல நுண்ணங்கிகளால் ஏற்படுகின்றன. இனி இந்த நுண்ணங்கிகள் எவ்வாறு மனிதனின் ஈரலைச் சென்றடைகின்றன எனப் பார்ப்போம். அமீபாவின் முட்டைகள் (Cysts) நோய் வாய்ப்பட்ட அல்லது காவியாகவுள்ள ஒருவரின் மலத்துடன் வெளியேறுகின்றன. இவை சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்படும் உணவுப் பொருள்கள் மற்றும் அசுத்தமான நீருடன் சேர்ந்து எமது உணவுக்கால்வாயை அடைகின்றன. இங்கு முட்டை முதிர்வடைந்து Trophozoit எனப்படும் நிறையுடலியாகிறது. சில வேளைகளில் பெருங்குடலில் அமீபாக்கள் அழற்சியை ஏற்படுத்துகின்றன. இதனால் நோய் வாய்ப்பட்டவர் இரத்தம், சீதம் என்வற்றுடனான வயிற்றுப் போக்கை அடைவார். ஆனால் பலரில் வயிற்றோட்டம் ஏற்படாமல் அமீபாக்கள் குடல் நாளங்களினூடாக ஈரலை அடைந்து ஈரலில் கீழ்க் கட்டிகளை ஏற்படுத்துகின்றன. இனி ஈரல் சீழ்க்கட்டிகளால் ஏற்படும் அறிகுறிகளைப் பார்ப்போம். மாறாத காய்ச்சல், வயிற்றின் வலப்புற மேற்பகுதியில் நோ, வலது தோலில் நோ, குளிருடன் கூடிய நடுக்கம் என்பன போதுவான அறிகுறிகளாகும். சிலருக்கு வயிற்றோட்டமும் இருக்கலாம். மக்களின் சுகாதார பழக்கங்கள் தற்போது மேம்பட்டு வருவதால் உணவினாலும் நீரினாலும் ஏற்படும் அமீபாத் தொற்று இப்போது மிகவும் அரிதாக உள்ளது. நீரை கொதிக்க வைத்தல், மலக்கழிவுகைளத் தகுந்த முறையில் அகற்றுதல், உணவை இலையான்கள் மொய்க்கவிடாது பாதுகாத்தல், உணவுண்ணும் முன்னரும், மலசல கூடங்களைப் பயன்படுத்திய பின்னரும் கைகளை சவர்க்காரமிட்டு கழுவுதல் போன்ற நற்பழக்கங்கள் மூலம் ஏனைய வயிற்றோட்ட நோய்களைப் போல் அமீபாவினால் ஏற்படும் நோய்களும் சாதாரண மக்களிடையே குறைவடைந்து விட்டன. அவ்வாறாயின் யார் இந்த ஈரல் சீழ்க்கட்டிகளுக்கு ஆளாகுறார்கள்? அவர்கள் வேறுயாருமல்ல பனை, தென்னை என்பவற்றிலிருந்து பெறப்படும் கள்ளை அருந்தும் மதுப்பிரியர்களே அவர்கள். இந்த அமீபாக்கள் எவ்வாறு கள்ளை அடைகின்றன என்பது இன்னமு் சரியாக அறியப்படவில்லை. தயாரிப்பு மற்றும் சேகரித்து வைக்கும் போது தகுந்த சுகாதார முறைகளைப் பயன்படுத்தாமையே அமீபாத் தொற்று ஏற்படக் காரணமாக இருக்கலாம். இனி ஈரல் சீழ்க்கட்டிகளால் ஏற்படும் விளைவுகளைப் பார்ப்போம். இது ஒரு அபாயகரமான நோய். தகுந்த சிகிச்சையில்லாவிட்டால் உயிரிழப்பையும் ஏற்படுத்தலாம். பெரிய சீழ்க்கட்டிகள் அருகிலுள்ள உறுப்புபளுக்குள் உடைந்து பாதிப்பை ஏற்படுத்தலாம். உதாரணமாக நுரையீரலிற்குள், இதயத்தை சூழவுள்ள மென்சவ்வினுள் மற்றும் வயிற்றுக்குள் உடைந்து தொற்று அவ்விடங்களில் பரவலாம். இதை விட மூளையிலும் சீழ்க் கட்டிகள் ஏற்படலாம். ஈரல் சீழ்க்கட்டிகள் எவ்வாறான சிகிச்சை முறைகள் உள்ளன? இதற்கு மெற்றனைடசோல் (metronidazole) என்ற மருந்து வாய் மூலமாகவோ ஊசி மூலமாகவோ நோயாளிக்கு வழங்கப்படுகின்றது. பெரிய கட்டிகள் மற்றும் உடையக் கூடிய கட்டிகள் ஸ்கான் உதவியுடன் ஊசியால் குற்றி உறிஞ்சப்படுகின்றன. சிலவேளைகளில் சத்திரசிகிச்சையும் செய்ய வேண்டி ஏற்படலாம். ஈரல் சீழ்க்கட்டிகள் எமது பிரதேசத்தில் ஒரு பாரதூரமான பிரச்சினையாக உள்ளது. எனினும் மக்கள் மத்தியில் இது தொடர்பான விழிப்புணர்வு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் என்பன அரிதாகவுள்ளன. மது அருந்துபவர்கள் எல்லோரிடமும் ஈரல் சீழ்க்கட்டிகள் ஏற்படுவதில்லை. கள் அருந்துபவர்களில் தான் இந்நோய் ஏற்படுகின்றது. வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள அன்றாடம் உழைத்து வாழும் ஆண்களே இந்த நோய்க்கு ஆளாகின்றார்கள். மது அருந்துவது தவிர்க்கப்பட வேண்டிய தீய பழக்கமாகும். கள் அருந்துவது முற்றாகத் தவிர்க்கப்பட வேண்டிய பழக்கமாகும். பல வருடங்களுக்கு முன்னர் கள் அருந்தி பின்னர் அதனை நிறுத்திக் கொண்டவர்களும் ஈரல் சீழ்க்கட்டிகளுடன் வருவதை நாம் கண்டுள்ளோம். ஆனால் ஆயிரக்கணக்கான சீவல் தொழிலாளிகளின் ஜீவனோபாயம் இந்த கள் உற்பத்தியில் தங்கியுள்ளதையும் நாம் மறக்க முடியாது. மது அருந்துவதை முற்றாக ஒழித்துகட்டுவதும் நடைமுறைச் சாத்தியமற்ற விடயமாகும். மதுப் பழக்கம் மனிதன் தோன்றிய காலத்திலிருந்தே இருந்து வரும் பழக்கமாகும். எனவே நாம் கள் தயாரிப்பில் சுகாதார முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.  அது மட்டுமல்லாது கள் தயாரிப்பில் எவ்வாறு அமீபாத் தொற்று ஏற்படுகின்றது. என்பது பற்றி ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும். மருத்துவர். எஸ். கேதிஸ்வரன் பொது வைத்திய நிபுணர்.