நல்வளம் இங்கே நஞ்சாகி………………………….!

இன்று குடாநாட்டையும், குடா நாட்டு மக்களின் மனதையும் மிகவும் பாரிய அளவில் பாதித்த விடயம் சுன்னாகம் நிலத்தடி நீர்வளத்தில் கலந்திருக்கும் கழிவு எண்ணை மற்றும் பெற்றோலிய பொருட்களின் மாசுகளாகும். சகல மக்களையும் பல தரப்படட ஊகங்களுக்கும், அச்சங்களுக்கும் ஆளாக்கி, இது இன்று வரை விடைகாணமுடியாத பிரச்சினையாக நீண்டு செல்கிறது.

இது தொடர்பில் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினர் கார்த்திகை 2013 முதல் புரட்டாதி 2014 வரையான காலப்பகுதியில் 2.7 மில்லியன் ரூபா செலவில் மேற்கொண்ட ஆய்வுகளில் ஓர் குறிப்பிட்ட வரையறுக்கப்பட்ட பிரதேசமானது எண்ணை மாசாக்கத்திற்கு உள்ளாக்கப்பட்டு இருப்பது தெளிவுற அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. 150க்கும் மேற்பட்ட கிணறுகள் 250க்கு மேற்பட்ட குடும்பங்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் நிமித்தமே இந்த
வரையறை எடுக்கப்பட்டது.

chunnakam1

அத்துடன் இவ் ஆய்வில் சில இடங்களில் பார உலோகத்தொற்றலும் அடையாளமிடப்பட்டுள்ளது.
ஆயினும் இப் பார உலோக தொற்றலானது எண்ணை மாசாக்கத்துடன் நேரடிப்பரம்பலை காட்டவில்லை என்றும், அவை விவசாய இரசாயன பொருட்களின் பரம்பலுடனும் தொடர்பினைக் காட்டுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். ஆய்வு அறிக்கை தயாரித்துக்கொண்டிருந்த நேரங்களில் வெளி அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டதன் காரணமாக அறிக்கையானது குறுகிய காலத்தில் முடித்துக்கொள்ளப்பட்டமையால் இது சம்மந்தமான போதிய விளக்கத்தினை அறிக்கையில் உள்ளடக்கமுடியாமல் போனதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

chunnakam2அத்துடன் அவர்கள் நாம் இவ் ஆய்வு தொடங்குவதற்கு முன்பாகவே இது சம்பந்தமாக உள்ளுர் அதிகாரிகளை விழிப்புற வைத்தாகவும், அதாவது 2012 காலப்பகுதியிலேயே இது சம்மந்தமான தரவுகள் குடா நாட்டின் சம்மந்தப்பட்ட சகல அதிகாரிகளுக்கும் தெரியப்படுத்தப்பட்டதாகவும், chunnakam3அத்துடன் தமது அதிகாரிகள் நேரடியாகவே இது சம்மந்தமாக மின்சாரசபை
அமைச்சின் செயலாளரை சந்தித்து பாரிய அழுத்தங்களுக்கு மத்தியில் நிலமையை விளக்கியதுடனும் நடைபெற்றுக்கொண்டிருந்த அனர்த்தத்தை முன்னேற்றும் முறையில் கட்டுப்படுத்தியதாகவும் ஆதாரத்துடன் தெரிவித்துள்ளார்கள்.

2012 – 2013 இறுதிக்காலப்பகுதி வரை உரிய அதிகாரிகளுக்கு தெரிவித்த 30க்கும் அதிகமான கோப்புக்கள் தேசிய நீர்வழங்கல் சபையினால் முன்வைக்கப்படுகின்றது.  ஆய்வுக்காலப்பகுதியில் யாழ் போதனா வைத்தியசாலையின் வைத்திய நிபுணர்களிடம் ஆலோசனை கேட்டு எழுதப்பட்ட கடிதங்களும் அதில் காணப்படுகின்றது.
இவ் ஆய்வு அறிக்கையினை நோக்குமிடத்து சுன்னாகம் மின்சார சபையின் வளாகத்தைச் சுற்றிய 1.5k.m பிரதேசமானது மாசாக்கலுக்கும், மாசடைவதற்கான ஆபத்துக்கும் உட்பட்டு இருப்பது தெளிவுற தெரிகின்றது.  மற்றும் இது நீரோட்டத்துக்கு ஏற்ப வடக்கு நோக்கியே அதிக பரம்பலை காட்டக் கூடியதாகவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது. மற்றும் இவ் ஆய்வுகாலப்பகுதியிலும் அதற்கு முன்னரான 2 வருட காலப்பகுதியிலும் மழைவீழ்ச்சி மிகக்குறைவாக காணப்பட்டுள்ளதுடன் இக்காலப்பகுதியில் பாரிய காலநிலை மாற்றம் எதுவும் ஏற்பட்டுடிருக்கவில்லை. இந்தப்பிரச்சினை வெளிக்கொண்டுவரப்பட்ட இந்த நான்கு ஆண்டு காலப்பகுதியில் வெளிவந்த ஓர் பூரணமான விஞ்ஞான பூர்வ அறிக்கை இது ஒன்றே ஆகும். பல தரப்பட்ட அறிக்கைகள், கட்டுரைகள் பல தரப்பினால் வெளியிடப்பட்டுக் கொண்டு இருக்கின்ற போதும் அனைத்துமே விஞ்ஞான பூர்வமான அறிக்கைகளாக காணப்படவில்லை. அத்துடன் அனேகமானவை எதிர்வுகூறல்களை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு வெளியிடப்பட்டவை ஆகும்.

இந்நிலையில் இறுதி மாரி காலத்தில் கடந்த மூன்று வருட காலப்பகுதியை விட அதிக மழைவீழ்ச்சி அண்ணளவாக 1300 mm குடாநாட்டுக்கு கிடைக்கப்பெற்றது. இந்த திடீர் அதிக மழைவீழ்ச்சியினால் நிலத்தடி நீரோட்டத்தில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக இந்த எண்ணை மாசானது அதிகப்பரம்பலைக் காட்டியுள்ளதாகவும் வடக்கு நோக்கியே அதிகளவில் பரவலடைந்திருப்பதாகவும் தெரிவிக்கின்றது மல்லாகம், தெல்லிப்பளை, எழாலை என மின்னுற்பத்தி நிலையத்திற்கு வடக்குப்புறமாக உள்ள பகுதிகள் அதிக தொற்றலைக்காட்டுவதாகவும், ஏனைய பகுதியில் 1.5km  தாண்டிய சில பகுதிகள் வரை எண்ணை பரவியுள்ளதாகவும், அதாவது மருதனார்மடம் மற்றும் உடுவில் போன்ற பகுதிகள் அடையாளப்படுத்தப்படுகின்றன.
ஆயினும் சில அறிக்கைகள் கொக்குவில், சுதுமலை, இணுவில், சங்கானை, அச்செழு ஆகிய
இடங்களில் ஓர் சில பகுதிகளில் மாத்திரம் எண்ணெய்மாசுக்கள் இருப்பதாக தெரிவிக்கின்றன.
ஆயினும் குடா நாட்டின் நிலத்தடி நீர்ப்பரம்பல், நீரோட்டங்கள், புவியியல் என்பன சம்பந்தமான
நிபுணர்களின் கருத்துப்படி சுன்னாகம் எண்ணை மாசாக்கத்துடன் ஏற்ற தொடர்பைக்காட்ட
சாத்தியக்கூறுகள் குறைவாக உள்ளதாகவும், அது அப்பிரதேசத்திலுள்ள தனிப்பட்ட
பிரச்சினையாகவே கருதவேண்டிய சந்தர்ப்பம் உள்ளதாகவும் அது தொடர்பான தனிப்பட்ட ஆய்வுகள் தேவை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த எண்ணை மாசாக்கமானது உடனடி, நீண்ட கால மற்றும் அடுத்த சந்ததியினரையும் பாதிக்கும் வகையிலான பாரிய நோய்த்தாக்கங்களை ஏற்படுத்த வல்லது என தொடர்ச்சியாக மருத்துவத்துறையினரால் வலியுறுத்தப்பட்டு வருகின்றது. இது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய முக்கியமான பிரச்சனையாகும். எண்ணை மாசுக்கள் இருக்கும் நிலையிலோ அல்லது அதற்கான சந்தர்ப்பம் உள்ள நிலையிலோ அதனைப் பருகுதல் தெரிந்தே ஆபத்தை விலைக்கு வாங்கும் ஓர் நடவடிக்கையாகவே இருக்கும்.
தேசிய ரீதியில் நீர் வழங்கல் மற்றும் ஆய்வுகளுக்கென்றே வடிவமைக்கப்பட்ட சகல தரப்பட்ட
நீர்த்துறை சார் வல்லுனர்களையும் கொண்ட தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் விஞ்ஞானரீதியில் ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டு சகல தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட ஓர் அறிக்கை உள்ள நிலையில் அதன் தொடர்ச்சியாக ஆய்வுகள் மேற்கொள்ளப்படாமல், மீண்டும் அதே இடங்களில் பல தரப்பட்டவர்கள் தத்தமது வல்லமைக்கு ஏற்ற வகையில் மீண்டும் அதே போன்றதொரு ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றமை அறியத்தக்கதாக உள்ளது.
தேசிய நீர் வழங்கல் சபையினர் தமது அறிக்கையில் காலஎல்லை, காலநிலை மாற்றம் என்பவற்றை தெளிவுற வரையறுத்து, அறிக்கையிட்டுள்ளார்கள். இம்மழையினால் ஏற்பட்டுள்ள இம்மாசாக்கத்தின் மாற்றங்களையும் இவ் ஆய்வினை தொடர்ச்சியாக மேற்கொள்வதென்பதே சிறந்ததாக அமையும்.  அதன் மூலமே இம்மாசாக்கத்தின் செறிவுகள், இடப்பெயர்ச்சி என்பன உரிய முறையில் வரையறுக்கப்பட்டு தெளிவுற விளக்க முடியும். ஆனால் இன்று பல வல்லுனர்கள் இணைந்த பல குழுக்கள் ஆய்வுகளில் ஈடுபட்டுள்ள போதிலும் அங்கு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை,  நீர்வளச்சபை என்பன முற்றாக நிராகரிக்கப்பட்டு அதன் கருத்துக்களோ, அதன் வளங்களோ பயன்படுத்தப்படவில்லை. தேசியரீதியில் அமைந்த நிறுவனங்களின் நிபுணத்துவம், அவர்களின் அனுபவம் பெற்ற வல்லுனர்களின்  ஆலோசனைகளையும்  அவர்களின் உதவிகளையும் பெற்று ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதே சிறந்த பெறுபேறுகளை தரக்கூடியதாக இருக்கும்.

அண்மையில் வடமாகாண சபையால் உருவாக்கப்பட்ட நிபுணர்குழு,  பத்திரிகை  அறிக்கையில் இப்பிரதேச நீரில் தாக்கத்தை ஏற்படுத்தும் எவ்வித மாசுக்களும் இல்லை என தெரியப்படுத்தியுள்ளது.  கல்விமான்களால் உருவாக்கப்பட்டுள்ள இந்நிபுணர் குழு தாம் ஆய்வு செய்த 40 கிணறுகளின் நீர் மாதிரிகளைக் கொண்டே இம்முடிவைச் சிபாரிசு செய்துள்ளது.

அவர்கள் அறிக்கையில் Oil & Grease எனும் பொருள் 10-15% கிணறுகளில் மாத்திரமே
காணப்படுவதாகவும் BTEX எனும் (Aromatic) சங்கிலிக்காபன்  கிணறு ஒன்றிலே ஆபத்து எல்லையில் இருக்கவில்லை என தெரிவித்து இருக்கின்றார்கள்.
இங்கு BTEX எனப்படுவது Benzene, Toluene, Ethylbenzene Xylene  எனும் (Volatile organic Compounts) chunnakam4ஆவியாகும் தன்மை கொண்ட சேதனப்பதார்த்தங்களாவும், நரம்புத்தொகுதியை தாக்கவல்ல நச்சுப் பொருட்களாகவும், சாதாரணமாக பெற்றோலியப்பொருட்களில் காணப்படும் Aromatic  ஐதரோ காபன்களாகவும் அடையாளப்படுத்தப்படுகிறது. இவை நீரில் தொற்றலடைந்து காணப்படுமிடத்து நீரில் அடையாளப்படுத்தகூடிய மணம், சுவை என்பன உணரக்கூடியதாக இருக்கும். இவை ஆவியாகும் தன்மை கொண்ட சேதன சேர்வையாக இருப்பதால் தொற்றுதலடைந்து நீண்ட காலத்திற்கு நீரில் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறைவாகவே இருக்கும். அதாவது BTEX
chunnakam5ஆனது தனி மூலக்கூறாக சுயாதீனமாக, சேர்வைகளாக அல்லது சிக்கல் சேர்வைகளாக காணப்படுமிடத்து தொடர்ச்சியாக நீரில் விடுபட்டுக்கொண்டு இருப்பதற்கான சாத்தியங்கள் இருக்கும்.  நீண்ட காபன், சங்கிலிகளுடன் அரோமற்றிக் காபன்களும் சேர்ந்து காணப்படுமிடத்து பௌதீக இரசாயன தாக்கங்களால் அவை மீண்டும் பிரிகை அடைந்து BTEX உருவாக்கும் சாத்தியங்கள் இருக்கும்.

சுன்னாகம் எண்ணை மாசாக்கம் நிகழ்ந்து பல வருடங்கள் ஆகின்ற நிலையில் BTEX ஐ மட்டும் ஓர் குறிகாட்டியாகக் கொண்டு நீரில் ஆபத்தான மாசுக்கள் இல்லை எனும் முடிவுக்கு செல்வது சரியான நிலையா? தொடர்ச்சியாக பல கிணறுகளில் வெளிப்பார்வைக்கே தெரியக்கூடிய படலங்கள் காணப்படும் நிலையில், பல அறிக்கைகள் எண்ணை மாசுக்கள் நீரில் உள்ளது எனும் சூழ்நிலையில் இதனை எவ்வாறு மக்கள் எடுத்துக்கொள்வது? ஏனெனில் மாசாக்கம் நிகழ்ந்து ஆண்டுகள் பல ஆகின்ற நிலையில் Free BTEX அளவைத்துணிந்து அதன் மூலம் நீரில் மாசாக்கத்தை நிர்ணயிப்பது எவ்வளவு தூரம் சாத்தியமான விடயம் என்பது தெளிவுபடுத்தப்பட வேண்டும்.

இன்றைய நிலையில் சுன்னாகம் எண்ணை மாசாக்கத்திற்கு உடனடி நடவடிக்கைகளாக பல நீர்
துறை சார் வல்லுனர்களின் கருத்தாக இருப்பது பின் வருவனவே,

1. கிணறுகளில் காணப்படும் மொத்த பெற்றோலிய ஐதரோக்காபன்கள் (TPH) அளவிடப்பட
வேண்டும்.

2. அல்லது மொத்த பெற்றோலிய ஐதரோக்காபன்கள் தொற்றலுக்குள்ளாகி உள்ள கிணறுகள் அமைந்துள்ள பிரதேசங்கள் உரிய முறையில் வரையறுக்கப்பட வேண்டும்.

3. அல்லது வரையறுக்கப்பட்ட பிரதேச மக்களுக்கு விழிப்புணர்வு வழங்கி உடனடி நீர் வழங்கலுக்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

4. துல்லியமாக இவ் எண்ணை மாசுக்கள் நீரினுள் வெளியிடப்படும் பிரதேசம் அடையாளமிடப்பட்டு அப்பிரதேசம் முழுமையான ஆராய்ச்சிக்கு உட்படுத்தி நிலத்தின் கீழ் உள்ள மாசுக்களை முறைப்படி அகற்றி மாசாக்கலின் வீரியத்தையும் எதிர்காலத்தில் அதனால் ஏற்படப்போகும் விளைவுகளையும் கட்டப்படுத்த வேண்டும்.

5. இப்பிரதேசங்கள் மத்திய நீர் வழங்கலுக்கு உள்வாங்கப்பட்டு உரிய முறையிலான பாதுகாப்பான குழாய் வழி நீர் விநியோகமானது வழங்கப்பட வேண்டும்.
6. கிணறுகளில் காணப்படும் எண்ணைப்படலமானது தனியாகப்பிரித்து எடுக்கப்பட்டு அதன் சேர்வைகளானது தெளிவாக தனித்தனியாக அறியப்பட வேண்டும். அதன்காபன் வயதைக் கொண்டு மாசாக்கத்தின் வயது எல்லை துணியப்பட்டு இந்த மாசாக்கத்துக்கு காரணமான குற்றவாளிகள் உரிய முறையில் அடையாளம் காணப்பட வேண்டும்.

7. இதே எண்ணைப்படலம் போல் தோற்றமளிக்கும் ஏனைய பிரதேச கிணறுகளின் படலங்கள் என்ன என்பதை அறிவதற்கான உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு தெளிவுபடுத்தப்பட வேண்டும்.

8. பாரஉலோக தொற்று தொடர்பாக உள்ள ஐயப்பாடு உரிய முறையில் நீர் மாதிரி பரிசோதனைகள் மூலம் தெளிவு படுத்தப்பட வேண்டும்.

இதனதும் இதனுடன் சார்ந்த சில தொடர்ச்சியான நடவடிக்கைகள் இன்றைய காலகட்டத்திற்கு அவசியமாக உள்ளதாக துறை சார் வல்லுனர்கள் கருத்து வெளியிட்டுள்ளார்கள்.

ஆய்வுகள் தேவையான பாதையில் செல்லாமல் பல தரப்புக்களால் பலவிதங்களில் மேற்கொள்ளப்பட்டு வீணாண காலதாமதங்கள், மன உளைச்சல்கள் ஏற்படுத்தப்பட்ட வண்ணமே உள்ளன.

பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு உள்ளுராட்சி சபைகள் மற்றும் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை உடனடி நீர் வழங்கலை மேற்கொண்டு வருகின்றன. ஆயினும் பவுசர்மூலமான நீர் விநியோகம் செலவு கூடியதாகவும் நீண்ட காலத்திற்கு ஏற்ற பொறிமுறை அற்றதாகவும் இருக்கின்றது. இது சம்பந்தமாக தேசிய நீர் வழங்கல் சபையிடம் வினவிய நிலையில் குழாய்மூல நீர் விநியோகத்திற்கு தேவையான வேலைத்திட்டங்கள் ஏற்கனவே
முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் நில அளவை வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு விட்டதாகவும் நீர்த்தாங்கி கட்டுவதற்கான நிலப்பரப்பு தேடப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

ஆயினும் இவ் ஆய்வுகள் சம்மந்தமான நடவடிக்கையில் எவ்வித முன்னேற்றகரமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படாமலே உள்ளது. ஆரம்ப நிலையைத்தாண்டி எவ்வித சிறப்பான நடவடிக்கைளும் எடுக்கப்படவில்லை.

துறைசார் நிபுணர்கள் மற்றும் கல்விமான்களின் ஒருங்கிணைந்த அமைப்போடு துறைசார் திணைக்களங்களும் அதிகார தரப்புக்களும் ஒன்றிணைந்து இந்த எண்ணை மாசாக்கத்திற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு தீர்வை நோக்கிய படிமுறைகளை ஏற்படுத்த வேண்டும்.

இல்லையேல் மேலும் பாதிக்கப்படப் போவது அப்பிரதேச மக்களே! அவர்களின் கண்ணீருக்கு பதிலின்றி காத்திருக்க வேண்டிய நிலையே ஏற்படும்!

யாழ்ப்பாணத்தான்