வயது வந்தவா்கள் பால் அருந்துவது பாதுகாப்பானதா?

வயது வந்தவா்கள் பால் அருந்துவது பாதுகாப்பானதா?
பெரியவா்கள் பால் அருந்துவது ஆபத்தானது என்ற ஒரு தப்பான அபிப்பிராயம் பலரிடையே காணப்படுகிறது. இந்தத் தவறான மனப்பதிவு காரணமாகப் பால்குடிப்பதை நிறுத்தியவா்கள் பலா். ”நான் பயந்து பால் குடிப்பதில்லை” என்று சொல்லிப் பெருமைப்பட்டுக்கொள்பவா்கள் பலர். வீட்டிலே ஆடு, மாடுகளும் போதிய பாலும் உள்ளவா்கள்கூட அந்தப்பாலை விற்றுவிட்டு சத்துமா என்றும் ஆடைநீக்கிய பால்மா என்றும் அதிகவிலை கொடுத்து வாங்கி கரைத்துக்குடிக்கும் பரிதாப நிலை இங்கு காணப்படுகிறது. எம்மிடையே பால் ஆபத்தானது என்ற உணா்வினை ஏற்படுத்தியவா்கள் யார்?

இயற்கையாகக் கிடைக்கக்கூடிய அதிகூடிய ஊட்டச்சத்துள்ள உணவு பால் ஆகும். சிறியவா்கள் முதல் வயது முதிர்ந்தவா்கள் வரை அனைவருமே பால் அருந்துவது மிகவும் நல்லது. மேலைத்தேச உணவுவகைகளுடன் ஒப்பிடும்போது எமது உணவில் புரதப்பற்றாக்குறை ஒரு பெரும் பிரச்சினையாக இருந்துவருகிறது.

இந்தப் புரதப்பற்றாக்குறையை பால் அருந்துவதன் மூலம் ஓரளவேனும் நிவா்த்திசெய்யக்கூடியதாக இருக்கும். ஓா் ஆரோக்கியமான உணவில் சக்திப்பெறுமானத்தின் அடிப்படையில் 30 வீதம் வரை கொழுப்பு சோ்த்துக்கொள்ள முடியும். ஆனால் எமது சராசரி உணவிலே ஏறத்தாழ 15 வீதமான கொழுப்பே இருக்கிறது. எனவே பால் அருந்துவதன் மூலம் உள்ளெடுக்கப்படும் மேலதிகக் கொழுப்பை நினைத்துப் பயப்படவேண்டிய அவசியம் இல்லை.

சோடா குடிக்கப் பயப்படாதவா்கள், சிகரெற் மற்றும் குடிவகைகளைக் குடிக்கப் பயப்படாதவா்கள், சீனி சாப்பிடப் பயப்படாதவா்கள், சொக்லேற், கண்டோஸ் என்பன சாப்பிடப் பயப்படாதவா்கள், உடற்பயிற்சி செய்யாமல் ”சும்மா” இருக்கப்பயப்படாதவா்கள் பால் குடிக்க மட்டும் பயந்து நடுங்குவதன் மா்மம் ஒரு புரியாத புதிராகவே இருக்கிறது.

பால் என்ற இயற்கையான, அற்புதமான, இந்தப் பானத்தில் தராதரம் கூடிய புரதம், போதியளவு விற்றமின்கள், கனியுப்புக்கள், மாப்பொருள், கொழுப்பு என அனைத்து ஊட்டச்சத்துக்களும் அடங்கி இருக்கின்றன. இதனை ஓா் அதிசிறந்த நிறை உணவு என்று சொல்லுவார்கள். இது ஆபத்தான உணவு என்று பெயா் எடுத்தது எப்படி?

மேலைத்தேச நாடுகளில் சொல்லப்படும் உணவுக்கட்டுப்பாட்டு முறைகள் அனைத்தும் எமது மக்களுக்குப் பொருந்தாது. எமது உணவு முறைக்குப் பழக்கப்பட்ட அனைவரும் போதுமான அளவு பால் குடிப்பது பாதுகாப்பானது மாத்திரமல்ல உடல் சுகாதாரத்திற்கு மிகவும் நல்லது. நீரிழிவு, குருதியமுக்கம், கொலஸ்ரோல் நோய் உள்ளவா்கள் கூட பால் குடிப்பது நல்லது. ஆடை நீக்கிய பால்மா வகைகளை மட்டும்தான் குடிக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை.

சி. சிவன்சுதன்
மருத்துவ நிபுணர்