நன்னீருக்காய் கண்ணீர் சிந்தும் குடாநாடு

நன்னீருக்காய் கண்ணீர் சிந்தும் குடாநாடு
உயிரினங்களின் இருப்புக்கு அத்தியாவசியமான ஒரு வளமாக தண்ணீர் அமைந்துள்ளது. மனிதனைப் பொறுத்தவரை அவனது அடிப்படைத் தேவைகளில் மிக முக்கியமான ஒன்றாக தண்ணீர் விளங்குகிறது. மனிதனால் உணவின்றி ஒரு மாத காலம் வரைவாழ முடியும். ஆனால் தண்ணீர் இன்றி ஒரு சில நாள்கள் கூட உயிர் வாழ முடியாது.

இதனைத்தான் வள்ளுவப் பெருமான் “நீரின்றி அமையாது உலகு” எனக் குறிப்பிடுகின்றார்.

அப்படிப்பட்ட மனிதர்களது முக்கிய அடிப்பதை் தேவைகளில் ஒன்றான தண்ணீர் இன்று யாழ். மாவட்ட மக்களுக்குப் பாதுகாப்பான நன்னீராகக் கிடைக்கிறதா? என்ற வினாவுக்கு “ஆம்” என விடை அளிக்க முடியாதுள்ளது.

யாழ்ப்பாணத்து மக்களைப் பொறுத்தவரை ஒரே நீர்மூலமாக நிலத்தடி நீரே விளங்குகிறது. இந்த நிலத்தடி நீர் குடிதண்ணீராக மட்டுமன்றி மக்களின் அன்றாட தேவைக்கும், விவசாயத்துக்கும் பயன்படுத்தப் படுகிறது. இது மழை நீரினால் மட்டுமே மீள் நிரப்பப்படுகின்றது. 10 – 15 வீத மழை நீர் கடலுடன் சென்று கலக்கிறது. 40 – 48 வீதமான மழை நீர் ஆவியாகிச் செல்கிறது. எஞ்சியுள்ள 30 – 32 வீதமான மழை நீர் மட்டுமே நிலத்தடி நீராகச் சேமிக்கப் படுகிறது.

இன்று யாழ் குடாநாட்டைப் பொறுத்தவரை அதிகரித்து வரும் மக்கள் சனத்தொகையால் நிலத்தடி நீருக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில் நிலத்தடி நீரின் மாசாக்கம் பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. தற்சதயம் சுன்னாகம் பகுதியில் உள்ள நிலத்தடி நீரில் கழிவு எண்ணெய் கலந்து இருப்பது எல்லோரும் அறிந்த விடயம். ஆனால் அதை விட யாழ் மாவட்டம் முழுவதும் உள்ள நிலத்தடி நீரை மாசுபடுத்திக் கொண்டிருக்கும் இன்னொரு மாசாக்கி நைற்றேற் எனப்படும் ஓர் இரசாயனப் பதார்த்தம். யாழ் குடா நாட்டில் மட்டுமல்லாது இலங்கையில் விவசாய நடவடிக்கைகளை் அதிகமாக மேற்கொள்ளப்படும் பல்வேறு பிரதேசங்களிலும் உள்ள நிலத்தடி நீர் நைற்றேற்றினால் மாசுபடுத்தப்பட்டுள்ளமை பல ஆய்வுகளின் மூலம் நிரூபணமாகியுள்ளது.

இந்த நைற்றேற் மாசாக்கத்தின் பிரதான காரணமாக விவசாய நடவடிக்கைகள் விளங்குகின்றன. விவசாயத்தின் போது பயன்படுத்தப்படும் சேதன, அசேதன பசளைகள், பூச்சிக் கொல்லிகள் மற்றும் களைநாசினிகளே நைற்றேற்றின் பிரதான மூலகங்களாகும்.

யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரை விவசாய நடவடிக்கைகள் பரவலாகவும் மிகவும் பெரிய அளவிலும் மேற்கொள்ளப்பட்டு வருவது சகலரும் அறிந்ததொன்றே. இதன் போது விவசாயிகளால் மிக அதிகளவில் சேதன அசேதனப் பசளைகள் பயன்படுத்தப்படுவதுடன் அண்மைக் காலமாக பூச்சி கொல்லிகள் மற்றும் களை நாசினிகளின் பாவனையும் அதிகரித்துள்ளது. இதனால் மிக அதிகளவான நைற்றேற் மண்ணுடனும் கிணற்று நீருடனும் கலக்கப்படுகிறது. விவசாயிகளால் இடப்படும் சேதன அசேதனப் பசளைகளில் ஒரு பகுதி மட்டுமே பயிர்களினால் அகத்துறுஞ்சப்படுகிறது. ஏனையவை மண்ணுடன் சேர்ந்து மண்ணினூடாக நிலத்தடி நீரைச் சென்றடைகின்றது.

யாழ்ப்பாணத்தில் விவசாயத்துக்காக நிலத்தடி நீரே பயன்படுத்தப்படுகிறது. நிலத்தடி நீரோனது நீர்ப்பம்பிகள் மூலம் பயிர்களுக்குத் தேவைப்படும் நீரை விட மிக அதிகளவிலான நீர் இறைக்கப்படுகிறது. இதனால் நிலத்தடி நீர் வீணாக்கப்படுவதுடன் இந்த நீரினூடாக நைற்றேற்றுக்கள் கரைந்து நிலத்தடி நீரைச் சென்றடைவதற்கும் வாய்ப்பு ஏற்படுகின்றது.

நைற்றேற் மாசாக்கத்தின் மற்றுமொரு முக்கிய காரணியாக சேதனப் பசளைகளைத் தேக்கி வைக்கும் இடங்கள் விளங்குகின்றன. இந்தச் சேதனப் பசளைகளில் தாவர மற்றும் விலகுக் கழிவுகள் அடங்குகின்றன. இவற்றில் ஏராளமான நைற்றேற்றைக் கொண்ட பதார்த்தங்கள் காணப்படுவதுடன் அவை நிலத்தடி நீரில் நைற்றேற் சேர்வதற்கு முக்கிய பங்கு வகிக்கின்றன.

இவ்வாறான காரணிகளால் யாழ்ப்பாணத்தில் நிலத்தடி நீரில் நைற்றேற்றின் செறிவு அதிகரித்துச் செல்கிறது. உலக சுகாதார நிறுவனம் பாதுகாப்பான குடிதண்ணீரில் நைற்றேற்றின் செறிவு 10mg/L intrate அல்லது 45 mg/L NO3 ஐ விட குறைவாக இருக்க வேண்டும் என வரையறை செய்துள்ளது. ஆனால் யாழ்ப்பாணத்தில் பல்வேறு பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட நைற்றேற் மாசாக்கம் தொடர்பான ஆய்வுகளின் படி நிலத்தடி நீரின் நைற்றேற் நைதரசனின் NO3 – N2 செறிவு 10mg/L ஐ விட அதிகமாக இருப்பதாகவும் அந்த நீர் குடிதண்ணீராகப் பயன்படுத்தப்பட முடியாது எனவும் தெரிய வந்துள்ளது. இதனால் யாழ்ப்பாணத்தில் குடி தண்ணீர்ப் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

நைற்றேற்றினால் மாசாக்கப்பட்ட நீரை அருந்துவதால் பல ஆபத்தான நோய் நிலைமைகள் ஏற்படுகின்றன. இவற்றுள் ஒன்று மெத்கீமொ குளோபினீமியா ( Methaemo globinemio) எனப்படும் நோய் நிலைமை. நைற்றைற் ஆனது உடலினுட் சென்று நைற்றைற் ஆக மாற்றம் அடைகிறது. இந்த நைற்றைற் ஆனது குருதியிலுள்ள ஒட்சிசனைக் காவிச் செல்லும் கிமோகுளோபின் எனும் பதார்த்தத்தை மெத்கீமோ குளோபினாக மாற்றமடையச் செய்வதனால் ஒட்சிசனை எடுத்துச் செல்லும் தன்மையை இழக்கச் செய்கின்றது. இதனால் குருதியினால் ஒட்சிசன் கொண்டு செல்லப்படுவது குறைவடைகிறது. இதனால் கை, கால், நாக்கு என்பன நீலமாக மாறுவதுடன் (Cyanosis) மூச்சுத் திணறல் ஏற்பட்டு சிகிச்சை அளிக்கப்படாத விடத்து இறப்பும் நிகழலாம். இந்த நோயினால் பெரியவர்களை விடச் சிறு குழந்தைகளே அதிகமாகப் பாதிக்கப்படுகின்றனர். ஏனெனில் அவர்களது முதிர்ச்சியடையாத உணவுக் கால்வாய்த் தொகுதி நைற்றேற் ஆனது றைற்றைற்றாக மாறுவதை இலகுவாக அனுமதிக்கிறது. இதனால் இந்த நோயானது Blue baby synchome என அழைக்கப்படுகின்றது.

இரைப்பை மற்றும் உணவுக் கால்வாய்த் தொகுதியில் ஏற்படும் புற்றுநோய், உயர் குருதி அமுக்கம் என்பன ஏனைய நோய் நிலைமைகளாகும்.

புற்று நோயை உருவாக்கும் பல்வேறு காரணிகளில் நைற்றேற்றும் ஒரு முக்கிய காரணியாக கருதப்படுகின்றது.

குடிதண்ணீரில் காணப்படும் நைற்றேற்றை அகற்றுவதற்கு சில இரசாயன வழிமுறைகள் இருக்கின்ற போதிலும் எமது நாட்டின் பொருளாதார நிலைமையைப் பொறுத்த வரை அவை சாத்தியமற்றவை. எனவே நைற்றேற் மாசாக்கத்தைத் தடுப்பது மட்டுமே இந்தப் பெரிய ஆபத்திலிருந்து எம்மையும் எமது வருங்கால சந்ததியினரையும் காப்பாற்றிக் கொள்வதற்குச் சரியான வழியாகும். மேலும் மேலும் நைற்றேற் நிலத்தடி நீருடன் சேருவது தடுக்கப்பட்டால் ஏற்கெனவே நிலத்தடி நீரில் கரைந்துள்ள நைற்றேற் ஆனது காலப்போக்கில் அழிந்து விடும் என்பதே இரசாயனவியலாளர்களின் கருத்தாகும். எனவே நைற்றேற் மாசாக்கத்தைத் தடுக்க வேண்டியது எங்கள் ஒவ்வொருவருடைய கடமை ஆகும். இதனைத் தடுக்கும் முறைகளாவன

தேவையான அளவில் மாத்திரம் சேதன அசேதனப் பசளைகளைப் பயன்படுத்தலாம்.
களைநாசினிகள் மற்றும் பூச்சிக் கொல்லிகளின் பாவனையை இயன்றளவு குறைத்து அவற்றைக் கட்டுப்படுத்தப் பாரம்பரிய முறைகளைப் பின்பற்றல்
சொட்டு நீர்ப்பாசன முறையை மேற்கொண்டு அளவுக்கதிகமான நிலத்தடி நீர் உபயோகத்தைத் தவிர்த்தல்.
சிமெந்தினால் அமைக்கப்பட்ட கிடங்குகளில் சேதனப் பசளைகளைச் செமித்தல்.
கிணறுகளுக்குள் மழைநீர் செல்லாதவாறு உயரமான கட்டுகளை அமைத்தல்
மேற்படி வழிமுறைகளைக் கடைப்பிடிப்பதில் சிரமங்கள் இருந்தாலும், எமது ஒரே நீர்வளமான நிலத்தடி நீருக்கு ஏற்பட்டுள்ள பெரிய ஆபத்தைக் கருத்திற் கொண்டு நைற்றேற் மாசாக்கத்தைத் தடுத்து எமக்கும் எமது வருங்கால சந்ததியினருக்கும் ஏற்படவிருக்கும் ஆபத்திலிருந்து காத்துக் கொள்வதற்கு எமது கூட்டு முயற்சியும் ஒத்துழைப்பும் அவசியமாகும். குடாநாட்டு மக்களாகிய நாம் எமது ஒரே நீர் வளமான நிலத்தடி நீரின் பாதுகாப்பை உறுதி செய்து கொள்வதற்கு எம்மால் முடிந்த முயற்சிகளை மேற்கொண்டு நன்னீருக்கான எமது கண்ணீரைத் துடைப்போம்.

மருத்துவர் சௌதாமினி சூரியகுமாரன்