எனக்கு உயர் குருதியமுக்கம் உள்ளது மருந்து தொடர்ச்சியாக எடுக்கவேண்டுமா? அல்லது கட்டுப்பாட்டிற்க்குள் வந்ததும். மருந்தை நிறுத்தலாமா??

எனக்கு உயர் குருதியமுக்கம் (பிரஷர்) வருத்தம் உள்ளது மருந்து தொடர்ச்சியாக எடுக்கவேண்டுமா? அல்லது கட்டுப்பாட்டிற்க்குள் வந்ததும். மருந்தை நிறுத்தலாமா?
உயர் குருதியமுக்க (பிரஷர்) வருத்தத்திற்கான மருந்துகள் உங்களுக்கு தரப்பட்டால் அடுத்த தடவை வைத்தியரைச் சந்திக்கும் வரை அவர் தந்த மருந்துகளை கூறப்பட்ட நேரங்களில் தவறாமல் எடுக்க வேண்டும். உங்கள் குருதியமுக்கத்தை அளந்து பார்க்கக் கூடிய வசதிகள் இருப்பின் வாரத்திற்கு ஒரு தடவை அளந்து பார்த்தல் நன்று. அடுத்த தடவை வைத்தியரை சந்திக்கும் போது உங்கள் குருதியமுக்க வாசிப்பை பொறுத்து மருந்துகளின் அளவு மாற்றியமைக்கப்படலாம். பிரஷர் கட்டுப்பாட்ற்குள் வந்தால் அதேயளவு குளிசைகளை போடவேண்டியிருக்கும். “பிரஷர் கட்டுப்பாட்டிற்குள் தானே இருக்கின்றது இனி ஏன் குளிசை எடுக்க வேண்டும்” என நீங்களாக யோசித்து குளிசைகளை நிறுத்தவோஅல்லது குறைக்கவோ கூடாது. நீங்கள் மருந்து எடுத்ததன் காரணமாகவே உங்கள் குருதியமுக்கம் கட்டுப்பாடாக உள்ளது என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். போதுமான நிறைக்குறைப்பு, உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு, மன அமைதி வழி முறை என்பவற்றைச் செய்து உயர் குருதியமுக்கம் கட்டுப்பாட்டிற்குள் வந்தால் மருத்துவ ஆலோசனைகளின் மூலம் சில நேரங்களில் மருந்தின் அளவைக் குறைக்கலாம், அல்லது மருந்தை முற்றாக நிறுத்தலாம். குறிப்பு – கிளினிக் வரும் போது உயர் குருதியமுக்க குளிசைகளைக் குடித்துவிட்டு வரல் வேண்டும். அப்போது தான் பொருத்தமான மருந்தை பொருத்தமான அளவில் வைத்தியரால் தீர்மானிக்க முடியும். அதிகாலையில் வீட்டிலிருந்து வெளிக்கிடுவோர் குளிசைகளைக் கொண்டு வந்து தேனீர் அருந்தி விட்டோ அல்லது உணவு சாப்பிட்ட பின்போ குளிசையை அருந்தலாம்.